கல்முனையில் அதிகாரத்துடன் கூடிய தமிழ் செயலகம் உருவாக்கப்பட வேண்டும் - தமிழ் பிரதிநிதிகள் சவால்- மு. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு - Sri Lanka Muslim

கல்முனையில் அதிகாரத்துடன் கூடிய தமிழ் செயலகம் உருவாக்கப்பட வேண்டும் – தமிழ் பிரதிநிதிகள் சவால்- மு. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Contributors

 

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக தரமுயர்த்தும் முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்த எதிர்ப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான நிசாம் காரியப்பர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர் தரப்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பி முத்து உள்ளிட்ட சிலரும் பங்கேற்றிருந்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இக்கூட்டத்தில் தமிழ்- முஸ்லிம் தரப்பினரிடையே கடும் வாக்கு வாதங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது உப செயலகமாக இருக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவை அனைத்து அதிகாரங்களும் கொண்ட செயலகமாக தரமுயர்த்துவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதற்கும் அதனை உடனடியாக வர்த்தமானி பிரகடனம் செய்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.

எனினும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இவ்விடயத்தை கடுமையாக எதிர்த்து தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

இவ்விடயமானது கல்முனைத் தொகுதியில் நீண்ட காலமாக ஒற்றுமையாக இருந்து வருகின்ற தமிழ்- முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை கல்முனைப் பிரதேச தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இக்கூட்டத்தில் பங்குபற்றவில்லை என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் யாவும் நிலத் தொடர்பற்றுக் காணப்படுவதால் இதனைப் பிரிக்க முற்படும் போது இரு சமூகங்களிடையேயும் பாரிய முரண்பாடுகளும் விரிசல்களும் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் மு.கா. பிரதிநிதிகள் விபரித்துக் கூறினர்.

தமிழ்- முஸ்லிம் சமூகங்களிடையே இவ்வாறான முரண்பாடுகளை தோற்றுவித்து- சிறுபான்மையினரின் பலத்தை மழுங்கடிக்கச் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கில் அரசாங்கம் தான் இதனை திட்டமிட்டு மேற்கொள்ள முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் இந்த நியாயங்களை தமிழ் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் எத்தகைய சவால்கள் ஏற்பட்ட போதிலும் lm என்று வாதிட்டனர்.

இதனால் இரு தரப்பினரிடையேயும் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன. இதன்போது- பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரட்னவும் தமிழ் பிரதேச செயலகம் உருவாவதை ஆதரிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய முற்பட்டார். அதனைத் தொடர்ந்து மு.கா. பிரதிநிதிகள் அனைவரும் வெளிநடப்பு செய்யத் தயாரான போது அமைச்சர் தலையிட்டு சமரசப்படுத்தி- அக்கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

இறுதியாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் தீர்மானத்தை இன்று மேற்கொள்வதில்லை  எனவும் பிரிதொரு தினத்தில் கல்முனை வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கலான சகல தரப்பினரும் ஒன்றாக இருந்து- கலந்துரையாடி அது தொடர்பிலான முடிவை மேற்கொள்வது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team