கல்முனை பறிபோனால் உள்ளூராட்சி மன்றத்தை கைவிடுவோம் - பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா - Sri Lanka Muslim

கல்முனை பறிபோனால் உள்ளூராட்சி மன்றத்தை கைவிடுவோம் – பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

– எம்.ஐ. சர்ஜூன்


கேள்வி: கல்முனை மாநகரசபையிலிருந்து ஏன் சாய்ந்தமருது தனியாக பிரிந்துசெல்ல வேண்டுமென நினைக்கிறீர்கள்?

பதில்: ஆரம்பத்தில் கரைவாகு தெற்கு கிராமசபையாகவும், கல்முனை பட்டிணசபையாக இருந்தபோது எவ்வித பிரச்சினைகளும் வரவில்லை. 1987ஆம் ஆண்டின் பின் கல்முனையுடன் சேர்க்கப்பட்டபோதுதான் நாங்கள் தனித்துவிடப்பட்டோம். எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. சாய்ந்தமருது பிரதேசத்தை பறித்தெடுத்தார்கள். இப்படி கசப்பான அனுபவங்கள்தான் எங்களுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை வழங்குமாறு கடந்த 30 வருடங்களாக போராடி வருகிறோம்.

தற்போதிருக்கின்ற நிர்வாகத்தினால் நாங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறோம், புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம். எங்களின் அனுமதி பெறப்படாமலேயே சாய்ந்தமருதின் எல்லைகள் சுருக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியில் பாராபட்சம், குப்பை அள்ளுவதில் பாரபட்சம் என பலவற்றை கூறலாம். இதுதவிர இன்னும் பல மனக்கசப்பான சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு சொல்லி மனம்நோகடிக்க விரும்பவில்லை.

கேள்வி: சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று தீவிரமடைந்திருப்பதற்கான காரணம் என்ன?

பதில்: சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை தருகிறோம், தருகிறோம் என்று மூன்று அமைச்சர்களும் இரண்டு வருடங்களுக்கு மேலாக எங்களை எமாற்றிவிட்டார்கள். ஆனால், இதுவரைக்கும் அவர்கள் தருவதாகத் தெரியவில்லை. இதைவிட வேதனைக்குரிய விடயம் நாங்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய பிரதி அமைச்சர் ஹரீஸ், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் கொடுத்தால் அது எனது மையித்தின் மீதுதான் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். இதன்பின்னரும் இவர்களை நம்பி பிரயோசனமில்லை என்று தெரிந்த பின்னர்தான் எங்களது போராங்களை தீவிரப்படுத்தியுள்ளோம்.

கேள்வி: சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை பெறுவதில் தடையாக இருப்பவர் யார்?

பதில்: பிரதி அமைச்சர் ஹரீஸ்தான் எங்களுக்கு பிரதான தடையாக இருக்கிறார். நாங்கள் செல்கின்ற இடமெல்லாம் அவருடையை ஆட்களை கூட்டிக்கொண்டு சென்று தடுத்துவருகிறார். கல்முனைக்குடியை விட சாய்ந்தமருது மக்கள்தான் அவருக்கு அதிகம் வாக்களித்தனர். அதுவும் 3 தடவைகள் வாக்களித்திருக்கின்றனர். அவர் இப்படி எங்கள் உரிமையை தடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால் சாய்ந்தமருது மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகள் இல்லாவிட்டால், நாங்கள் எப்போதோ இந்த சபையை வென்றெடுத்திருப்போம்.

கேள்வி: சாய்ந்தமருது தனியாக பிரிந்துசென்றால், கல்முனைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறதே?

பதில்: நிச்சயமாக இல்லை. இது எங்களுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்கக்கூடாது என்பதற்கு சொல்லப்படுகின்ற சாட்டு. இதில் எவ்வித உண்மைகளும் இல்லை. நாங்கள் கல்முனைக்கு ஒருநாளும் துரோகம் செய்யவில்லை, இனி செய்யப்போவதும் இல்லை. சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்குத்தான் நன்மைகள் இருக்கின்றன. ஆனால், கல்முனை மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதுதான் இதிலுள்ள யதார்த்தம். தாய் – பிள்ளை போன்று பழகிவந்த எங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான் இந்த குற்றச்சாட்டு.

கேள்வி: ஒருவேளை, அவர்கள் சொல்வதுபோல கல்முனைக்கு பாதிப்பு வந்து அங்கு முஸ்லிம்களின் ஆதிக்கம் குறைந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்: சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை இப்போது வழங்கப்பட்டாலும், நாங்கள் அடுத்த தேர்தலில்தான் அங்கு போட்டியிடுவோம். அதுவரைக்கும் நான்கு வருடங்கள் கல்முனை மாநகரசபையுடன்தான் இணைந்திருப்போம். அந்த நான்கு வருடங்களுக்குள் இவர்கள் சொல்வதுபோல, கல்முனை முஸ்லிம்களிடமிருந்து பறிபோகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டால், நாங்கள் எங்களது தனியான உள்ளூராட்சி கோரிக்கையை கைவிட்டு கல்முனையுடன் மீண்டும் இணைந்துகொள்வோம். கல்முனையின் தனித்துவம் இழக்கப்படுவதை சாய்ந்தமருது ஒருபோதும் அனுமதிக்காது என்பதை முதலில் அவர்கள் உணரவேண்டும்.

கேள்வி: கல்முனையை நான்காக பிரிக்கின்ற கோரிக்கையை அதாஉல்லா கொண்டுவந்தபோது, அதை எதிர்த்தவர்கள் இன்று ஏன் நான்காக பிரிக்குமாறு கோருகின்றனர்?

பதில்: இதற்கு அவர்களால்கூட பதில்கூற முடியாதுள்ளது. இந்தக் கோரிக்கை இப்போது முன்வைத்துள்ளதால், சாய்ந்தமருதுக்கு கிடைக்கவிருந்த உள்ளூராட்சி மன்றம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மருதமுனையோ, நற்பிட்டிமுனையோ உள்ளூராட்சி மன்றம் கேட்காத நிலையில் கல்முனையை நான்காக பிரிப்பதற்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கோரிக்கையானது, சாய்ந்தமருதுக்கு கொடுக்கக்கூடாது என்பதற்கான மாற்றுவழியாகவே நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி: கல்முனையை நான்காக பிரித்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும் என்று நம்புகிறீர்களா?

பதில்: கல்முனை பிரிக்கப்படவேண்டும் என்பதில் அவர்களை விட நாங்கள்தான் உறுதியாக இருக்கிறோம். அப்படி பிரிக்கப்பட்டால், கல்முனைக்கு தனித்துவமான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும். ஆனால், அதை அவர்கள் செயற்படுத்துவதில்தான் கேள்விக்குறி இருக்கிறது. இந்தக் கோரிக்கை நல்ல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டால் நிச்சயம் நிறைவேறும். இல்லையெனில், இழுபறியில்தான் இருந்துகொண்டிருக்கும்.

கேள்வி: கல்முனை எல்லை பிரிப்பு விடயத்தில் தமிழ் மக்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டு தீர்வு கிடைக்குமென நம்புகிறீர்களா?

பதில்: இருதரப்பும் விட்டுக்கொடுப்புடன் தீர்வு காணவேண்டுமென செயற்பட்டால் நிச்சயம் இது சாத்தியமாகும். அதை விடுத்து இரு சாராரும் தங்கள் பக்க நியாயங்களை மாறி மாறி கூறிக்கொண்டிருந்தால் கடைசிவரைக்கும் எதுவும் நடக்காது. கல்முனையை நான்காக பிரிப்பதை பிரச்சினைக்கான தீர்வாக பார்த்தால் நிச்சயம் நடக்கும். மாறாக, தீர்வுக்கான பிரச்சினையாக பார்த்தால் ஒருபோதும் நடக்கப்போவதில்லை.

கேள்வி: உங்களது கோரிக்கை தொடர்பில் அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி என எல்லோரையும் சந்தித்துவிட்டீர்கள். அரசியல்வாதிகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: நாங்கள் இப்போது எந்த அரசியல்வாதியையும் நம்புவதற்கு தயாரில்லை. எல்லா அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். அவர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டோம். எல்லோரும் எங்களுடைய கோரிக்கை நியாயமானது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அதை பெற்றுத்தருவதற்குத்தான் யாரும் முன்வருகிறார்கள் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, யார் எங்களுக்கு உள்ளூராட்சி சபையை பெற்றுத்தருகிறார்களோ அவர்கள் பக்கம் ஒட்டுமொத்த சாய்ந்தமருதும் நிற்கும்.

கேள்வி: பள்ளிவாசல் நிர்வாகமும் உலமா சமூகமும் இப்படி நேரடியாக அரசியல் ஈடுபடுவதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

பதில்: பள்ளிவாசல் நிர்வாகமும் உலமா சமூகமும் அரசியலில் ஈடுபட்டத்தை வேறெங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அப்படியானதொரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம் என்பதுதான் உண்மை. அரசியல் ரீதியாக பிரிந்திருந்த சாய்ந்தமருது மக்கள் இன்று பள்ளி நிர்வாகத்தின் கீழ் ஒற்றுமைப்பட்டுள்ளனர். தங்களது உரிமையை வென்றெடுப்பதற்காக இன்று ஒவ்வொரு தரப்பினரும் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இப்படியானதொரு அமைப்பு ஏற்கனவே உருவாகவில்லையே என்று மக்கள் இன்று ஆதங்கப்படுகின்றனர்.

கேள்வி: எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் எப்படியான முடிவை எடுக்கவுள்ளீர்கள்?

பதில்: ஒரு தீர்வு கிடைக்காமல், கல்முனை மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக எந்த அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கு நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை. சாய்ந்தமருது பள்ளிவாசல் சார்பாக சுயேட்சை அணியாக களமிறக்கவுள்ளோம். மாளிகைக்காடு மக்களும் எங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அவர்களும் சுயேட்சையில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளனர். இதற்கான வேட்பாளர்கள் எங்களினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலமே தெரிவுசெய்யப்படுவார்கள். அரசியல்சாயம் இல்லாத சமூக நோக்கமுடைய வேட்பாளர்களைத்தான் நாங்கள் களமிறக்குவோம்.

கேள்வி: சுயேட்சை அணிமூலம் தெரிவாகும் உறுப்பினர்கள் கல்முனை மாநகரசபையில் எப்படியான செல்வாக்கை செலுத்துவார்கள்?

பதில்: சாய்ந்தமருதில் தெரிவாகும் உறுப்பினர்கள் மாநகர சபையில் பேரம்பேசும் சக்தியாக இருப்பார்கள். ஒருவேளை எங்களுக்கே மேயர் பதவி கிடைக்கலாம். எங்களுடைய கோரிக்கைக்கு யார் இணக்கம் தெரிவிக்கிறார்களோ நாங்கள் அவர்களுடன் சேர்ந்து ஆட்சியை தீர்மானிப்போம். நிபந்தனை அடிப்படையில் அவர்களை மேயராக்குவோம். இங்கு நாங்கள் சாய்ந்தமருதில் அபிவிருத்தியைத்தான் நாங்கள் பிரதானமாகக் கொள்வோம். எங்கள் அரசியல்வாதிகள் எங்களை கைவிட்டால், உரிமையை யார் பெற்றுத் தருகின்றார்களோ அவர்களுடன் நாங்கள் கைகோர்த்து நிற்போம்.

கேள்வி: சாய்ந்தமருது போராட்டங்கள் சட்டத்துக்கு முரணானது என்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே?

பதில்: எங்களது போராட்டத்துக்கு எதிரான உப்புச்சப்பில்லாத காரணங்களை காட்டி சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு எதிராக போடப்பட்ட இரு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கல்முனை ஜும்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் சாய்ந்தமருது பள்ளிக்கு எதிராக போட்ட வழக்கு கடந்த புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாட்டுவண்டி ஊர்வலத்தின்போது உண்மையில் பாதிக்கப்பட்டது சாய்ந்தமருது மக்கள்தான்.

மாட்டுவண்டி ஊர்வலத்தின்போது நாங்கள் சண்டைபிடிப்பதற்காக செல்லவில்லை. கல்முனையைச் சேர்ந்த சிலர்தான் எங்களது பேரணிக்குள் கலந்து கலவரத்தை உண்டாக்கினார்கள். இதன்போது, எங்களுடைய 3 இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது, ஒருசில இளைஞர்கள் செய்தவற்றை பெரிதுபடுத்தாமல் விடுமாறு கூறி அவர்களுக்கு மருந்துகட்டி அனுப்பிவைத்தோம். ஆனால், அவர்கள் சாய்ந்தமருது பள்ளிவாசல்தான் இந்த கலவரத்தை உருவாக்கியதாக பொய்யான வழக்கு தொடர்ந்தார்கள். தற்போது அது வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

கேள்வி: வீதிகளில் இறங்கி தொடராக போராடுவதன் மூலம் என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: பல தடவைகள், பலரிடம் பேசிப் பார்த்தவிட்டோம். இனி பேசுவதில் பயனில்லை என்று தெரிந்த பின்னர்தான் தற்போது நாங்கள் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளோம். இப்போது எங்கள் பிரச்சினை நாடுமுழுவதும் தெரிந்துவிட்டது. எங்களது கோரிக்கை நியாயமானது என்பதை தமிழர்கள் மாத்திரமின்றி சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு உள்ளூராட்சிசபை வழங்கும்வரை தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம். அதுபோல எங்களது போராட்டங்களும் ஓயப்போவதில்லை.

கேள்வி: உங்கள் போராட்டங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் எப்படியான ஆதரவை வழங்குகிறார்கள்?

பதில்: சாய்ந்தமருதில் பெரும்பான்மையான மக்கள் போராட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு வழங்கிவருகின்றனர். எஞ்சியிருக்கின்ற மாற்றுக்கொள்கையாளர்களும் விரைவில் எம்முடன் இணைந்துகொள்வார்கள். போராட்டங்களுக்கு தேவையான பணத்தை மக்கள் கொண்டுவந்து மக்கள் பணிமனையில் ஒப்படைக்கின்றனர். அதுபோல நாங்கள் கூறுவதுபோல, வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு அவர்களது அன்றாட நடவடிக்கைளை தியாகம் செய்கின்றனர். படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் ஒரே நோக்கத்துடன் போராடிக்கொண்டிருக்கிறனர். குறிப்பாக இளைஞர்கள் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறனர்.

கேள்வி: சாய்ந்தமருது – கல்முனை விவகாரத்தினால் இப்போது இரு ஊர்களுக்கு மத்தியிலும் பிரதேசவாதம் தலைத்தோங்கியுள்ளதே. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றீர்கள்?

பதில்: இதுதொடர்பில் இருதரப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கிறோம். எங்களது போராட்டம் வேறு. இதைவைத்து பிரதேசவாதத்தை உருவாக்கக்கூடாது என்று நாங்கள் உடன்படிக்கை செய்திருக்கிறோம். நாங்கள் கல்முனை மக்களிடம் எதைக் கேட்கவும் இல்லை, எதை பிடுங்கவும் இல்லை. எங்கள் உரிமையை மாத்திரம்தான் கேட்கிறோம்.

கேள்வி: இந்த வயதான காலத்திலும் இப்படியான புரட்சிமிக்க போராட்டங்களில் எப்படி ஈடுபடுகிறீர்கள்?

பதில்: ஊர் என்ற வகையில் பள்ளிவாசல் தலைவராக இருக்கின்ற காரணத்தினால் என் தலையில் பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. அதை சுமக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் நான் தீவிரமாக செயற்பட்டால்தான் மக்களும் உற்சாகத்துடன் இருப்பார்கள். சுகயீனம் காரணமாக கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு நினைத்தாலும், போராட்டத்தை இடைநடுவில் விட்டுவிட்டு செல்லமுடியாத நிலையில் இருக்கின்றேன். இதனை ஒரு பாரமாக பார்க்காமல், எனது மண்ணுக்கு செய்யும் ஒரு கடமையாகப் பார்க்கிறேன். எங்களின் நியாயமான போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

கேள்வி: கல்முனை மக்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை நாங்கள் கல்முனை மக்களிடம் கேட்கவில்லை. அதுபோல கல்முனையின் உரிமையை நாங்கள் பறிக்கவுமில்லை. எங்கள் உரிமையை நாங்கள் வாக்களித்த அரசாங்கத்திடம் கேட்கிறோம். எங்கள் கோரிக்கைக்கு குறுக்காக வரவேண்டிய எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை. ஒற்றுமையாக இருந்த நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரவேண்டும். சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் வந்தால் கல்முனைக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதை நாங்கள் புள்ளிவிபர ரீதியாக நிறுவி அவர்களுக்கு அனுப்பியும் இருக்கிறோம்.

Web Design by Srilanka Muslims Web Team