கல்முனை மண்ணில் நல்லாட்சியொன்றை நடத்துவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் – மேயர் நிசாம் காரியப்பர் - Sri Lanka Muslim

கல்முனை மண்ணில் நல்லாட்சியொன்றை நடத்துவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் – மேயர் நிசாம் காரியப்பர்

Contributors

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வகுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர முதல்வராக பதவியேற்றுள்ள  சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொதுக் கூட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனைக்குடி நகர மண்டப்பத்திற்கு அருகில் இடம்பெற்ற போது ஏற்புரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினர் எம்.எஸ்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு முதல்வர் நிசாம் காரியப்பர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

“எனக்கு இந்த முதல்வர் பதவி கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு அடுத்த படியாக எமது தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களே காரணம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அதற்காக இந்த பகிரங்க மேடையில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் கூறிக் கொள்கின்றேன்.

முதல்வர் பதவி என்பது பெரும் சுமையானதும் விமர்சனத்திற்கு உரியதும் என இம்மேடையில் சிலர் கூறினர். உண்மையில் அதையெல்லாம் தெரிந்து கொண்டே நான் இப்பதவியை ஏற்றுள்ளேன்.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு எமது மாநகர சபையின்உறுப்பினர்களையே நான் முழுமையாக நம்பியிருக்கின்றேன். அவர்களது முழுமையானஆலோசனைகளைப் பெற்றே இந்த மாநகர சபைக்குரிய அனைத்து வேலைத் திட்டங்களையும்தயாரிக்கவுள்ளேன்.

அத்துடன் எமது தேசியத் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலுடன் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் எனக்கு பக்க பலமாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.

ஆகையினால் தான் எந்த அச்சமும் இல்லாமல் மிகவும் தையரியத்துடன் நான் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு களமிறங்கி உள்ளேன்.

கல்முனை மாநகர சபை என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஒரு மாநகர சபையாகும். முஸ்லிம் சமூகத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் முக வெற்றிலையாகத் திகழ்கின்ற இந்த கல்முனையை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு நல்ல வழிகாட்டலும் திட்டமிடலும் அவசியமாகும்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்தவன் என்ற ரீதியில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ள நான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இந்த மண்ணில் நல்லாட்சியொன்றை நடத்துவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.

 

அதேவேளை பல்லின சமூகங்களையும் பல ஊர்களையும் உள்ளடக்கிய கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தை எவ்வித இனப்பாகுபாடும் பிரதேச வேறுபாடுகளுமின்றி முன்னெடுப்பதற்கு நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

 

ஆகையினால் இந்த மண்ணின் நல்லாட்சிக்கும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சகல தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்குவீர்கள் என திடமாக நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்,கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், மு.கா. மூத்த துணைத் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத்,கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அசீஸ், கல்முனை மாநகரஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.றக்கீப்,ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், உமர் அலி, எம்.எம்.முஸ்தபா உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team