
கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்
கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை ஒலுவில் கிரீன் வில்லாஸ் விடுதியில் நடைபெற்றது.
ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் நிதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனோம்பு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தயாரிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு- அவை குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன் இவ்வரவு- செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மாநகர சபையின் கணக்காளர் எல் ரீ.சாலிதீன் விளக்கமளித்ததுடன் அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகர ஆணைடாளர் ஜே.லியாகத் அலி தெளிவுபடுத்தினார்.
அதேவேளை மாநகர சபை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை உள்வாங்குவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு- முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.(metmir)