கல்முனை மாநகர சபை மேயர் பதவி! – பார்வை - Sri Lanka Muslim
Contributors

(M.S.M.பாயிஸ்)

கட்சி அரசியலில் ”வெளிப்படைத்தன்மை” என்பது மிக முக்கியமானதாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத அரசியல் செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு மற்றுமொரு உதாரணமே கல்முனை மாநகர சபை மேயர் பதவிக்கான இழுபறி விவகாரமுமாகும்.

தற்போதைய மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் அவர்கள் ஒரு சிறந்த செயல் வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அதே இடத்தில் பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் மிகவும் ஆளுமை மிக்க ஒருவர் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

மேயர் பதவிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிஸாம் காரியப்பர் அவர்கள் சொற்ப விருப்பு வாக்கு அடிப்படையில் சிராஸ் மீரா சாஹிப் அவர்களிடம் தோல்வி கண்ட போது ஏற்பட்ட முறுகலை சமாளிக்க அப்பதவி இரு வருடங்களுக்கு அதிக விருப்பு வாக்குகள் பெற்ற சிராஸ் அவர்களுக்கும் அடுத்து வரும் இரு வருடங்களுக்கு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை எடுத்த நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும் வழங்கப்படும் என அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளால் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வருட முடிவில் தற்போது அந்த சுழற்சி முறைப் பதவிக்கான நேரமும் இழுபறியும் வந்திருக்கிறது.

”பதவி என்பது ஒரு அமானிதமாகும்”. இரண்டு வருடங்களில் அப்பதவியை சகோதரர் நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு விட்டுக் கொடுப்பேன் என சகோதரர் சிராஸ் மீரா சாஹிப் அவர்கள் கூறியோ அல்லது அதற்கு இணக்கம் தெரிவித்தோ இருப்பாரேயானால் அப்பதவியை கண்டிப்பாக ”வாக்குறுதியை காப்பாற்றுதல்” என்ற அடிப்படையில் அவர் நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். சிராஸ் மீரா சாஹிப் அவர்களின் ஆதரவாளர்களின் விருப்புக்கு அப்பால் கல்முனை – சாய்ந்தமருது என்ற ஊர்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேச வாதத்துக்கு வித்திட்ட பிரதியமைச்சர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த அதே வரலாற்றுத் தவறை சகோதரர் சிராஸ் மீரா சாஹிப் அவர்களும் செய்து விடக்கூடாது என்பதே அதிகமான புத்தி ஜீவிகளின் கருத்தாகும்.

இலங்கையிலேயே சட்டத்தரணிகளை கும்பமாக (அதிகமாக) வைத்துள்ள ஒரு கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இரண்டு ஊர்களையும் மோதவிட்டு கொழும்பில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறதா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சந்தேகமும் இருக்கிறது. சுழற்சி முறை பதவியை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்கும் போது கையாளப்பட வேண்டிய வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் இவர்களிடம் இல்லை. குறைந்தது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மை கூட தலைமைத்துவத்திடம் இல்லை. இதன் விளைவுதான் இன்று பிரதேச வாதமாக தோற்றம் பெறும் அபாயகரமான சூழ்நிலைக்கு அந்தப் பிரதேச மக்களை தள்ளிவிட்டிருக்கிறது.

அல்-குரானையும் அல்-ஹதீஸையும் யாப்பாக கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் குறைந்தது கட்சியில் உயர் பதவிகளில் உள்ள உறுப்பினர்களுக்காவது இஸ்லாமிய சட்ட நடைமுறைகளையும் பேணுதலையும் வாக்கு மீறுதலில் உள்ள பாவங்களையும் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும்.

மேயர் பதவி நிஸாம் காரியப்பரின் கைகளுக்கு செல்லும் பட்சம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உடைக்க அரசாங்கம் சகோதரர் சிராஸ் மீரா சாஹிப் அவர்களுக்கு ஒரு பாராளுமன்ற கதிரையை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சகோதரர் சிராஸ் மீரா சாஹிப் அவர்கள் இந்தப் பதவியை விட்டுக் கொடுத்து பிரதேச வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பாரேயானால் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் தனித்துவமிக்க ஒரு பிரதிநிதியாக அவர் வரலாற்றில் இடம் பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Web Design by Srilanka Muslims Web Team