கல்முனை மாநகர மக்கள் தமது சிந்தனையை அடகு வைத்துள்ளனர் - Sri Lanka Muslim

கல்முனை மாநகர மக்கள் தமது சிந்தனையை அடகு வைத்துள்ளனர்

Contributors

(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் தமது வாக்குகளால் தமக்கொரு மேயரை தெரிவு செய்ய முடியாத அளவு தமது சிந்தனைகளை அடகு வைத்துள்ளனர் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அபதுல் மஜீட் தெரிவித்தார்.
தற்போது கல்முனை முதல்வர் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக கருத்துவெளியிடும்போது மேலும் அவர் குறிப்பிடும்போது,
சுமார் இருபத்தையாயிரம் வாக்குகளை வைத்துக்கொண்டு அந்த வாக்குப்பலத்தின் மூலம் கல்முனையை தலைமையாகக்கொண்ட கட்சியை பலப்படுத்தி தமக்குரிய மேயரை தாமே தீர்மானிக்க முடியும் என்றிருந்தும் அதனை செய்யாமல் மேயர் வேண்டும் எனக்கோரி கொழும்புக்கு படையெடுக்கும் கேவலமான நிலையில் கல்முனை முஸ்லிம்கள் உள்ளார்கள் என்பது கவலை தருகிறது.
கல்முனையின் வாக்குகளால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெல்ல வைக்க முடியும் என்றால் அதே வாக்குகளால் கல்முனையை தலைமையாக கொண்ட கட்சியை வெல்ல வைக்க முடியாதா? அவ்வாறு வெல்ல வைக்கும் போது கல்முனைக்கான மேயரை கல்முனை மக்களே தீர்மானிக்கலாம் அல்லவா என்ற சின்ன விடயத்தைக்கூட இப்பகுதி மக்கள் சிந்திக்க முடியாதவாறு தமது சிந்தனைகளை மாய வலைக்குள் அடகு வைத்துள்ளார்கள்.
இன்று யார் தென்னிலங்கை தலைமையை காக்காய் பிடிக்கிறாரோ அவருக்குத்தான் தேர்தலில் இடம் மற்றும் பிரதேச சபை தவிசாளர், மாநகர மேயர் என்ற நிலை உள்ளது. இது தனது சொந்த வேளான்மையை விதைத்து கஷ்டப்பட்டு களவெட்டி முடித்து நெல்லை அப்படியே கொண்டு போய் எங்கோ இருப்பவரிடம் இனாமாக கொடுத்து விட்டு எனக்கொரு பிடி அரிசி தா வாப்பா என்று பிச்சை கேட்பதைப்போன்ற நிலையில் கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை மக்களின் நிலை உள்ளது.
கல்முனைக்கு இறைவன் என்ன குறை வைத்துள்ளான்? இங்கு படித்தவர்கள் இல்லையா? பண்பானவர்கள் இல்லையா? அரசியல் சாணக்கியர்கள் இல்லையா? பணக்காரர்கள் இல்லையா? ஏழைகள் மீது இரக்கம் கொண்டோர் இல்லையா? இருந்தும் நாம் ஏன் நமக்கான கட்சியையும், நமது பிரதேச தலைமைகளையும் இனம் காணாமல் இருக்கிறோம் என கல்முனை மக்கள் இன்னமும் சிந்திக்கவில்லை. அல்லது அவர்களை சிந்திக்கவிடாமல் எட்டப்பர் கூட்டம் அடக்கி வைத்துள்ளது.
இதன் காரணமாக தங்களுக்கு எதுவும் முடியாது, தமது ஊர் தலைவர்களால் சாதிக்க முடியாது என்ற தாழ்வுச்சிக்கலில் இந்த கல்முனை மக்கள் மூழ்கியுள்ளார்கள். இதன் காரணமாகவே இன்று மேயர் பிரச்சினைக்கு ஆயிரமாயிரம் செலவு செய்து கொழும்புக்கு ஓடுகிறார்கள். ஊர்ப்பிளவுகளை உருவாக்குகிறார்கள்.
இந்தக்கேவல நிலை மாற வேண்டுமாயின் கல்முனை தொகுதியில் வாழும் முஸ்லிம்கள் கல்முனையை தலைமையாக கொண்ட முஸ்லிம் மக்கள் கட்சியுடன் ஒற்றுமைப்பட்டு அதனை வெற்றியடையவைக்க முன் வர வேண்டும். அப்போது நமக்கான மேயரை நாமே தீர்மானிக்க முடியும். இல்லையேல் இதுவே தலைவிதி மட்டுமல்ல தலைவலி என வாழ வேண்டியதுதான்.

Web Design by Srilanka Muslims Web Team