கல்முனை மேயர் பதவியில் சிராஸ் நீடிக்க முடியாது – ஹக்கீம் திட்டவட்டம்! - Sri Lanka Muslim

கல்முனை மேயர் பதவியில் சிராஸ் நீடிக்க முடியாது – ஹக்கீம் திட்டவட்டம்!

Contributors

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் எந்த வகையிலும் அப்பதவியில் நீடிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேயர் விடயத்தில் கட்சி மேற்கொண்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமைச்சர் ஹக்கீம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பினால் கடந்த புதன்கிழமை கூட்டப்பட்ட விசேட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது மேயர் கூட்டிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் அடங்கிய மகஜரும் அமைச்சர் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முன்வைத்த கோரிக்கையை முற்றாக நிராகரித்த அமைச்சர் ஹக்கீம், மேயர் பதவியில் இருந்து சிராஸ் ராஜினாமா செய்யாதவரை அவர் தொடர்பில் எத்தகைய பேச்சிலும் ஈடுபடுவதற்கு கட்சியோ தலைமைத்துவமோ தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியிருப்பதாவது;

“இரவோடு இரவாக திடீரென பதவி விலகுமாறு நாம் அவருக்கு உத்தரவிடவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதவி கொடுக்கும் போது உடன்பட்டதன் பிரகாரமே கட்சி அவரை ராஜினாமா செய்யுமாறு பணித்தது. அதற்குக் கூட ஒரு வார காலம் அவகாசம் வழங்கினோம். நடந்தது என்ன? அவர் ஊரில் எவ்வாறான பித்தலாட்டங்களில் ஈடுபட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். சாய்ந்தமருதில் பிரதேச வாதத்தை தூண்டி- தனது பதவியைப் பாதுகாப்பதற்கு அதனை மூலதனமாக பாவிக்க முற்பட்டுள்ளார்.

மக்களை கட்சிக் கெதிராகவும் அடுத்த ஊருக்கு எதிராகவும் தூண்டி விட முயற்சித்தார். இதற்கெல்லாம் நாம் அஞ்சவில்லை. எந்த ஊர் மக்களும் அவரது நடவடிக்கையால் பித்னாவில் ஈடுபடாமல் பொறுமையாக உள்ளனர். ஆனால் அவ்வாறு ஏதும் நடந்திருந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

சிராஸ் மீராசாஹிப் உடன்பாட்டை மீறி விட்டார்- கட்சியின் நம்பிக்கையை இழந்து விட்டார்- எனக்குத் தந்த வாக்குறுதியை மீறி விட்டார்- கட்சிக்கும் தலைமைத் துவத்திற்கும் மாறு செய்து விட்டார்.

பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் மேற்கொண்ட உபாயத்தை பார்த்தீர்களா? அவரது அணுகுமுறை முற்றிலும் பிழையானது. இந்த கட்சியில் தனி நபர் ஆட்டங்களுக்கு இடமில்லை. அவரது செயற்பாடுகளை எம்மால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

இரண்டு வருடங்கள் முடிவதற்கு சில வாரங்களுக்கு முன்பதாகவே- நான் உத்தரவிட முன்னரே மேயர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய போன்றோரை சந்தித்து சட்டம் படித்துள்ளாராம்.

இதற்காக எமது கட்சியின் எதிரிகளின் உதவிகளை அவர் பெற்றுள்ளார். சிராசைக் கொண்டு கட்சிக்குள் குழப்பங்களையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தி விட்டு- அதில் குளிர்காய்வதற்கு எதிரிகள் கங்கணம் கட்டியுள்ளனர். அதற்கு இவர் துணை போயுள்ளார்.

கட்சி அமானிதமாகக் கொடுத்த பதவியை வைத்துக் கொண்டு மக்கள் தந்த அமானிதம் என்று பித்தலாட்டம் போடுகிறார். பந்தை மக்கள் பக்கம் அடித்து விட்டு ஊடகங்களுக்கு அவர் கொடுக்கும் செய்திகளைப் பார்த்தீர்களா? அவரது நடத்தைகள் சரி என்கிறீர்களா?

அவர் தனது குறுகிய அரசியல் லாபத்திற்காக ஊர்களிடேயே முரண்பாடுகளைத் தோற்றுவித்து- வீண் குழப்பங்களுக்கு வழி வகுக்க முற்படுகிறார். குறுகிய கால பதவிக்கு ஆசைப்பட்டு நீண்ட கால அரசியல் எதிர்காலத்தை இழந்திருப்பது அவரது துரதிருஷ்டமாகும்.

முஸ்லிம் காங்கிரசை என்றும் முழுமையாக ஆதரித்து வருகின்ற சாய்ந்தமருதைப் பொறுத்தவரை கட்சி அதற்குரிய கௌரவத்தையும் அந்தஸ்த்துகளையும் பதவிகளையும் காலத்திற்குக் காலம் வழங்கியே வருகிறது. அது என்றும் இருக்கும். ஆனால் சிராஸ் என்கிற தனி நபருக்காக ஊரை விலை பேச முடியாது” என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

-ada derana

Web Design by Srilanka Muslims Web Team