கல்முனை மேயர் விவகாரம்; சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம் - Sri Lanka Muslim

கல்முனை மேயர் விவகாரம்; சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்

Contributors

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனை மேயராக கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் சிராஸ் மீராசாஹிப் செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பினை அடுத்து சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களிற்கும் அமைச்சர் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது கல்முனை மேயர் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை சிராஸ் மீராசாஹிபினால் சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் அமைச்சர் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொடர்ச்சியாக சிராஸ் மீராசாஹிப்பினை கல்முனை மேயராக செயற்பட அனுமதிக்குமாறு சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கோரிக்கையினை அமைச்சர் ஹக்கீம் நிராகரித்துள்ளார். அத்துடன் கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமுமில்லை என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில்  மீண்டுமொரு தடவை சமரச பேச்சில் ஈடுபடலாம் என பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சர் ஹக்கீமிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். “மேயர் விவகாரத்தில் சமரச பேச்சிற்கு நான் தயார். ஆனால் ஒக்டோபர் 31ஆம் திகதியிற்கு சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா கடிதம் வழங்க வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“கல்முனை மேயர் விவகாரம்  தொடர்பில் கட்சி மிகத் தெளிவாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது. கட்சியின் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் கடந்த ஒரு வார காலமாக சிராஸ் மீராசாஹிப்பினால் மேற்கொள்ளப்பட்ட  செயற்பாடுகளை அங்கீகரிக்க முடியாது. இரண்டு ஊர்களிற்கு இடையில் பிரச்சினைகளை தூண்டும் வகையில் அவர் செயற்பட்டுள்ளார். இதனை அங்கீகரிக்க முடியாது
என அமைசச்ர் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, மேயர் விவகாரம் தொடர்பில் தன்மீது நம்பிக்கையற்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பலரை சந்தித்து சிராஸ் மீராசாஹிப் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் இந்த சந்திப்பில் சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team