
கல்வித் துறையில் நீண்ட கால சேவை புரிந்த அப்துல் சமட்!
கல்வியியல் செயற்பாட்டில் நீண்ட கால சேவை புரிந்த அப்துல் சமட் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். சாய்ந்தமருதில் மீராசாஹிபு முகம்மது ஹுஸைன் மற்றும் மீராலெப்பை கதீஜா உம்மா தம்பதிகளுக்கு ஏகபுதல்வனாக அப்துல் சமட் 1940.01.13 இல் பிறந்தார். கடந்த 32 வருட காலமாக அவர் கல்கிசையில் வாழ்ந்து வந்தார்.
அப்போதைய நிந்தவூர் யூனியர் ஆங்கிலப் பாடசாலையில் (தற்போதைய அல் அஸ்ரக்) தரம் 01 முதல் 05 வரை ஆரம்பக் கல்வியைக் கற்றார். தரம் 06 முதல் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் மருதூர்க்கனி, மருதூர் கொத்தன், யூ.எல்.ஏ. மஜீட் ஆகியோரின் சக மாணவராவார். SSC பரீட்சையில் சித்தியெய்திய எம். எச். ஏ. சமட் 1961 இல் ஆசிரியராக நியமனம் பெற்று, மாவடிப்பள்ளி முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியர் கடமையை ஆரம்பித்து ஒரு வருடம் கடமையாற்றினார். பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1962 முதல் 1964 வரையில் பயிற்சி பெற்று, சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ், கல்முனை சாஹிறா கல்லூரி, அநுராதபுரம் விவேகானந்தா கல்லூரிகளில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றினார்.
தொடர்ந்து அநுராதபுரம், மிகிந்தலையிலுள்ள மிகிந்து சிங்கள மகாவித்தியாலயத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தைக் கற்பித்தார். ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த இக்காலப் பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்திய இவருக்கு பேராதனை பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.
அநுராதபுரத்தில் இருந்து கொண்டு கண்டியில் பட்டப்படிப்பை தொடர முடியாத காரணத்தினால் கண்டி உடதும்பர ஜாமிஉல் அஸ்ஹர் மகாவித்தியாலத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டு முழு நேரமும் பல்கலைக்கழத்தில் கற்க முடியாத காரணத்தினால் வெளிவாரியாக பட்டப்படிப்பை தொடர முடியுமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல்கலைக்கழகப் படிப்பை தொடர்ந்தார்.
பல்கலைக்கழத்தில் முதல் வருடம் பொருளியல் பாடத்தில் இவர் பெற்ற A சித்தி காரணமாக அப்பாடத்தை விசேடமாக ஆங்கிலத்தில் கற்றார். இதன் காரணமாக இறுதி வருடத்தை முழு நேரமாக கற்பதற்கான கற்கும் விடுமுறை (study leave) இச்சந்தர்பபத்தைப் பயன்படுத்தி B.Com கற்கையை நிறைவு செய்தார்.
பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் வரையில் பாடசாலை ஆசிரியராக சுமார் 12 வருடங்கள் தொழில் புரிந்து வந்த இவர், பின்னர் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் வணிக விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். சில வருடங்கள் இங்கு கடமையாற்றிய பின்னர் நாவலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொலைக் கல்வி நிறுவனத்திற்கு (தற்போதைய திறந்த பல்கலைக்கழகம்) தமிழ்மொழிப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அக்காலத்தில் கொழும்பில் ஏற்பட்ட கலவர சூழல் காரணமாக சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று 1977 முதல் 1980 வரையில் பணிபுரிந்தார். கல்விப் பயிற்சிக்காக வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர், 1980 களில் நைஜீரியா, கம்பியா ஆகிய நாடுகளில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.
1983 இல் நாடு திரும்பி சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அதிபராகவும் 1990 வரை கடமையாற்றினார். 1990 முதல் 1991 வரையில் தெஹிவளை தொழில்நுட்பக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் தமிழ்ப் பிரிவொன்று அமைப்பதில் முன்னின்று செயற்பட்டார்.
புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் ஆலோசகராக 6 வருடங்கள் கடமையாற்றினார். சமூக அக்கறையோடு கடமையாற்றியவர் இவர். தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வமின்றி இருந்த முஸ்லிம் மாணவர்கள் விழிப்புணர்ச்சி பெறும் வகையில் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சிப் பேட்டிகள் நடத்தினார். ஓய்வு பெற்ற பின்னர் நழீம் ஹாஜியார் வேண்டுகோளுக்கமைய இக்றா தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்தாபக அதிபராக 1992 முதல் 1995 வரை பணியாற்றினார். முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப்பின் விஷேட ஆலோசகராகவும் பணியாற்றினார்.
ஊடகத்தில் பணிபுரியும் காலத்தில் அதிகம் எழுதினார். அப்துல் சமட் அவர்கள் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் மூலம் அரும்பணியாற்றி படைப்பாளர்களை உலகின் பல பாகங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 1962இல் சாய்ந்தமருதைச் சேர்ந்த முகைதீன்பாவா ஹவ்வா உம்மாவைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
எம்.எச். அப்துல் சமட் அவர்களின் ஜனசா 31.01.2022 தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கல்முனை
பறக்கத்துல்லாஹ்