கல்வி அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த மருதமுனை அபுல் கலாம் பழீல் மௌலானாவின் ஒன்பதாவது நினைவு தினம் இன்று! - Sri Lanka Muslim

கல்வி அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த மருதமுனை அபுல் கலாம் பழீல் மௌலானாவின் ஒன்பதாவது நினைவு தினம் இன்று!

Contributors

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை முதுசங்களில் அபுல் கலாம் பழீல் மௌலானாவும் ஒருவர். சிறந்த கல்விமானாகவும், சமூக சமயப்பற்றாளராகவும், அரசியலில் ஈடுபாடுடையவராகவும் விளங்கிய இவர், சிறந்த கவிஞரும் பன்முக ஆளுமையுமாவார். அவர் மருதமுனை மண்ணுக்குக் கிடைத்த பெருமையாவார். இவர் தொடர்பில் முதுபெரும் கல்விமானான அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ. மத்தியூ. ‘அன்றைய கல்வி அதிகாரிகள் மத்தியில் அபுல் கலாம் மௌலானா ஒர் இலக்கியமாக வாழ்ந்து காட்டினார். இன்றைய கல்வி அதிகாரிகளுக்கும் அவர் ஓர் இலக்கணம், அவர் ஒரு தொல்காப்பியம்’ என்றுள்ளார்

இந்த வரிகள் ஆழம் நிறைந்தவை. இலக்கியம் என்பது அழகியல். அதுவொரு இரசனை. உயிருடன் இருக்கும் போது தனது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டியவர். ஒரு கல்வி அதிகாரி எவ்வாறிருக்க வேண்டுமென விருப்போடு ஒரு இரசனையாய் தன் பணியைச் செய்தவர். இலக்கணம் மாறாத் தன்மையுடையது. அவரின் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றாது வாழ வேண்டுமென இன்றைய கல்வி அதிகாரிகளை வலியுறுத்துகின்றார்.

1865 ஆம் ஆண்டளவில் தென்அரேபிய நாடான யெமனின் ஹழ்ரமௌத் பள்ளத்தாக்கிலிருந்து செய்யித் உத்மான் அல்-அஹ்தல் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமுனை கிராமத்திற்கு வருகை தந்து ‘யாகுவ’ குடியைச் சேர்ந்த ஷரீபா உம்மா எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1869 இல் ஐதுரூஸ் மௌலானா என்னும் பெயரில் மகன் பிறந்தார். ஐதுரூஸ் மௌலானாவின் பரம்பரையில் வந்தவர்களில் ஒருவரே பழீல் மௌலானா.

ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா தனக்கு தரம் -01 முதல் தரம் -09 வரை கல்வி புகட்டிய ஆசிரியர்களை ஞாபகத்தில் வைத்திருந்தாரென குறிப்பிட்டுள்ள விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.வஸீல் மௌலானா, மருதமுனையின் முதலாவது பயிற்றப்பட்ட தலைமை ஆசிரியரும், பயிற்றப்பட்ட ஆசிரியருமென்ற இரட்டை அந்தஸ்துக்குரியவர் அவர் என்கிறார். அதுமட்டுமன்றி மருதமுனையின் முதலாவது ஆங்கில அதிபரும் அவராவார் எனக் கூறுகின்ற விரிவுரையாளர் வஸீல், 1959 ஆம் ஆண்டில் ஐ.ஏ. ஹமீட் என்பவர் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றமை இவருடைய பாடசாலைக்கு கிடைத்த பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இளம் பராயத்திலேயே அல்-குர்ஆனை ஓதக் கூடியவராக இருந்தார். இவர் அல் குர்ஆனை ஒதும் இனிமையை செவியேற்ற அன்றைய மட்டக்களப்பு தெற்குத் தொகுதி சட்டவாக்க சபை உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான சேர் முஹம்மது மாக்கான் மாக்கார் வெள்ளி நாணயத்தைப் பரிசாக வழங்கி கௌரவித்தார். பின்னாளில் ‘மௌலானா மாஸ்டர்’ என அவர் கள்-எலியவில் அழைக்கப்பட்டார். இவர் கடமையாற்றிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சமயம் தொடர்பான ஒழுக்கவிழுமியங்களை அதிக சிரத்தையோடு கற்றுக் கொடுக்கக் கூடியவராக இருந்தார்.

கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மர்ஹூம். ஐ.ஏ. ஹமீட் தமது மாணவப் பருவ அனுபவத்தை விபரிக்கையில் ‘எனக்கு இலகுவாகவும் சரளமாகவும் புனித அல்-குர்ஆனை ஓத முடியாது என்பதை அறிந்த பழீல் மௌலானா பெரிதும் கவலையடைந்ததோடு அல்-குர்ஆன் பிரதியொன்றை அன்பளிப்பாகவும் வழங்கினார். 1960 இல் அநுராதபுரம் கொட்டியாவௌ முஸ்லீம் மகாவித்தியாலய அதிபராக கடமையேற்ற இவர், அப்பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்கு உழைத்ததோடு அப்பிரதேச மக்கள் ஐவேளை தொழுகையை நிறைவேற்ற வலசதியளிக்கும் வகையில் பள்ளிவாசல் ஒன்றையும் நிறுவினார்’ எனக் குறிப்பிடுகின்றார்.

இவர் இளைஞராக இருக்கும் போது முஹம்மத் அலி ஜின்னாஹ் முன்னெடுத்த பாகிஸ்தான் போராட்டம் அவரைக் கவர்ந்தது. அதனால் பத்திரிகைகளில் வரும் முஹம்மத் அலி ஜின்னாஹ் பித்தனாக இருந்தார். தனது மகனொருவருக்கு ஜின்னாவின் பெயரையும் அவர் சூட்டினார். இவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு அவரது ‘வாழ்வும் பணிகளும்’ என்ற பெயரில் நூலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறாக பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கினார் மர்ஹும் அபுல் கலாம் பழீல் மௌலானா.

 

பாத்திமா ஸூபா (எம்.ஏ.சமூகவியல்)
ஆசிரியை ஸாஹிறா கல்லூரி, கல்முனை

Web Design by Srilanka Muslims Web Team