காகம் கலைத்த கனவு - Sri Lanka Muslim
Contributors

சோலைக்கிளியின் காகம் கலைத்த கனவுகள் புத்தகத்திலிருந்து

 

கைவேறு
கால்வேறாய்
அங்கங்கள் பொருத்திப் பொருத்தி
மனிதர்கள் தயாரிக்கப்படுவதை
நேற்று என் கனவில் கண்டேன்.

கண்கள் இருந்தன ஒரு பைக்குள்
மூக்கும் இருந்தது இன்னொன்றில்
முழங்கால் பின் மூட்டு
விலா குதி எல்லாமே
ஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-
தம்பதியார் வந்தார்கள்
புரட்டிப் புரட்டிச் சிலதைப்
பார்த்தார்கள் பின்னர்
விரும்பியதை எடுத்தார்கள்
கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள்.

வானம் புடவையாய் வெட்டுண்டு
கிடந்தது வீதியாய்
நான் நின்ற பாதை.

ஒருவன் வந்தான்
துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்
பார்த்துப் புன்னகைத்தான்
அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்து
காலில் இருந்த இருதயத்தைக் கழற்றி
மனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான்.

வெயிலோ கொடுமை
எரிச்சல் தாங்கவில்லை
அவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்த
பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.
இரவு!
உடனே சூரியன் மறைந்தது
நிலவு!

நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால்
ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்து
தன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்
மனிசி!
காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லை
எங்கியிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்
கத்தியது
இடையில் நின்று முக்கியது
கா…..கா….

Web Design by Srilanka Muslims Web Team