காட்டிக் கொடுப்பதில் போட்டியிடும் கட்சிகள்-ஆசிரியர் தலையங்கம்! - Sri Lanka Muslim

காட்டிக் கொடுப்பதில் போட்டியிடும் கட்சிகள்-ஆசிரியர் தலையங்கம்!

Contributors

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் சரியாக பன்னிரண்டு நாட்களே உள்ளது. இம்முறை இம்மாநாடு இலங்கையில் நடைபெறுவது எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதமாகவே கொள்ள வேண்டும். சுமார் முப்பது வருட காலப் பயங்கரவாதப் பிடியிலிருந்து எமது நாடு விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாகவே இதுபோன்ற மிகப் பெரிய உச்சிமாநாடுகள் இலங்கையில் நடைபெறச் சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகிறது என்றால் அது மறுக்கப்படாத உண்மை.

சர்வதேச நாடுகள் பலவும் கலந்து கொள்ளும் இப்பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், அது நடைபெற்றால் அதில் பங்குபற்றக் கூடாது எனவும் ஒரு சில நாடுகளில் பிரசாரங்கள் முன்னெ டுக்கப்பட்டுவரும் நிலையில் எமது நாட்டிலும் குறுகிய அரசியல் நடத்தும் சில கட்சிகளும் இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது வேதனை தரும் ஒரு விடயமாகவுள்ளது. தமது அரசியல் இலக்கை அடைவதற்காக நாட்டையும், நாட்டின் தனித்துவத்தையும் அடகு வைக்கும் செயலில் சில அரசியல் கட்சிகள் போட்டி போட்டுச் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத்தகைய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கையர் என்ற வகையில் இக்கட்சிகளின் செயற்பாடு குறித்து நாம் வெட்கப்பட வேண்டும். எமது நாடு சர்வதேச மட்டத்தில் தலைகுனிவைக் காண வேண்டும் என்பதில் இவர்கள் குறியாக உள்ளனர்.

இலங்கை எமது தாய் நாடு. அதனை சர்வதேசத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என இவர்கள் நினைத்திருந்தால் இவ்வாறான எதிர்ப்புப் பிரசாரங்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். அரசாங்கத்தைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் தமது தாய் நாட்டைத் தலைகுனிவடையச் செய்கிறார்கள். அதிலும் ஐ.தே.க, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசாங்கத்தின் மீது தெரிவிக்கும் எந்தவொரு குற்றச் சாட்டுக்களிலும் துளியளவும் உண்மை யில்லை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

தமது குறுகிய அரசியல் இலக்கை அடைவதற்காக இக்கட்சிகள் பொய்யான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசின் மீது சுமத்தி இம்மாநாட்டினைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து வருகின்றன. உள்நாட்டில் இடம்பெறும் ஒரு தேசிய மட்டத்திலான நிகழ்வை இவர்கள் புறக்கணித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தால் அதனை ஓரளவு மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அது உள்நாட்டு அரசியலாகவே அமையும். அவ்விடயம் எமது நாட்டிற் குள்ளேயே அடங்கிவிடும்.

ஆனால் சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரமான பொதுநலவாய மாநாட்டிற்கு இக்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது இவர்கள் துளியளவும் நாட்டுப் பற்றில்லாதவர்கள் என்பதனையும், நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பதனையுமே எடுத்துக் காட்டுகிறது. இக்கட்சிகள் இந்நிலையிலிருந்து தம்மைத் திருத்திக் கொள்ளாவிடின் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலை நிச்சயம் இவர்களுக்கு ஏற்படும். அத்துடன் இவர்கள் இந்நாட்டில் வாழவோ அரசியலில் ஈடுபடவோ தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர்.

இந்தியா, கனடா போன்ற சில நாடுகள் புலம்பெயர்ந்த வாழும் தமிழ் மக்களின் அழுத்தங்கள் காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ளும் தமது முடிவை இன்னமும் தீர்மானமாக எடுக்கவில்லை. எனினும் புலம்பெயர் தமிழரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து இந்நாடுகள் செயற்படுமாகவிருந்தால் அவை எதிர்காலத்தில் சர்வதேசத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையையே நிச்சயம் காணும். இலங்கையைப் பழிவாங்குவதாக அல்லது புறக்கணிப்பதாக எந்நாடுகளாவது எண்ணினால் அது தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு செயலாகவே அமையும்.

ஒருவேளை இந்நாடுகள் மாநாட்டில் பங்குபற்றாவிடின் அதனால் இலங்கைக்கு ஒருவிதமான பாதிப்புமே கிடையாது. அந்நாடுகள் சர்வதேசத்தில் தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டதாகவே அமையும். அத்துடன் இதன் மூலமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் எந்தவிதமான அனுகூலத்தையும் அடைந்துவிடப் போவதுமில்லை. இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களும் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கில் மாகாண ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதையே எதிர்ப்பதாகக் கூறி அறிக்கை ஒன்றை விட்டுள்ளது. அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான சுமந்திரன் இக்கருத்தைத் தனது பெயரில் தெரிவித்திருந்தார். உண்மையில் இவரதும், இவரது கட்சியினதும் இக்கூற்றுக் குறித்துத் தமிழ் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நடத்தும் தேர்தல்களில் பங்கு பற்ற வேண்டும். வெற்றி பெற்று அரசாங்கத்தின் சகலவிதமான வரப்பிரசாதங்களையும் ஒன்றுவிடாது அனுபவிக்க வேண்டும். அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில்கள், வெளிநாட்டுச் சுற்றுலாக்களை அவர்களும், அவர்களது குடும்ப உறவுகளும் அனுபவிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தை மட்டும் எதிர்க்க வேண்டும், நாட்டைச் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க வேண்டும் என்பதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் உள்ளது.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் அரசாங்கத்தை வசைபாடி வந்தது. அவ்வப்போது சில வெளிநாடுகளுக்குச் சென்றும் அரசை வசை பாடியது. அது அவர்களது குறுகிய அரசியல் எனக் கூறி அவற்றை மன்னிக்கலாம். ஆனால் உலகமே எம்மைத் திரும்பிப் பார்க்கும் ஒரு சர்வதேச மாநாடு எமது நாட்டில் நடைபெறுகின்றபோது நாம் பிறந்த எமது தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பது போன்று செயற்படுவதை ஒருபோதும் மன்னிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது. அதற்கு மன்னிப்பே கிடையாது.

என்னதான் வெறுப்பு, மனஸ்தாபம், கோபம், பழிவாங்கும் எண்ணம் இருந்தாலும் தாய்நாட்டைப் பிறருக்குக் காட்டிக் கொடுப்பது என்பது ஒரு துரோகமான ஈனச்செயலாகும். உலக நாடுகள் பலவற்றை நாம் எடுத்துப் பார்த்தால் அந்நாடுகளில் உள்நாட்டுப் போர், மதச் சண்டைகள், மாநிலச் சண்டைகள், இனரீதியாக முறுகல்கள் எனப் பல மோதல்கள் காணப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட தமது தாய் நாட்டின் மீது இன்னொரு நாடு குறை கூற அல்லது ஆக்கிரமிக்க அவர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

அந்நிலை இலங்கையில் காணப்படாமை உண்மையிலேயே துரதிஷ்ட மானதொன்றே. இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலமே நாட்டில் இன்று சமாதானமான அமைதி நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நாட்டின் எப்பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வரக் கூடியதாகவுள்ளது.

உலக நாடுகள் போன்று எமது நாட்டிலும் சகோதரச் சண்டையாக உள் நாட்டில் எது நடந்தாலும் வெளிநாடுகளுக்கு அதனைக் காட்டிக் கொடுக்காத நிலையில் சகோதரர்களாக தாய் நாட்டுப் பற்றுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே சகலரதும் அவாவாகும். கொடிய உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும்கூட நாம் இன்னமும் திருந்தாமலிருப்பது வேத னைக்குரிய விடயமே.

Web Design by Srilanka Muslims Web Team