காணிகள் முஸ்லிம், கிறிஸ்தவரிடையே சமமாக பகிரப்பட வேண்டும் - முதலமைச்சர் - Sri Lanka Muslim

காணிகள் முஸ்லிம், கிறிஸ்தவரிடையே சமமாக பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர்

Contributors

மன்னார் மாவட்டத்தில் பொன்தீவு கண்டல் பூவரசங்குள பிரதேசத்தில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் காணிகள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களிடையே சமமாகப் பகிரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் நானாட்டான் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் அண்மையில் மன்னாருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். அவ்விஜயத்தின் போது குறிப்பிட்ட பொன்தீவு கண்டல் பூவரசங்குள பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்து இரு சமூக மக்களையும் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்ததன் பின்பே முதலமைச்சர் பிரதேச செயலாளரிடம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மன்னாருக்கு முதலமைச்சர் தலைமையில் விஜயம் மேற்கொண்ட குழுவில் வட மாகாண அமைச்சர்கள் தனேஸ்வரன், சத்தியலிங்கம், குருகுலராஜா என்போரும் மாகாணசபை உறுப்பினர்களான டாக்டர் குணசீலன், சிராய்வா, ஜயூப் அஸ்மின் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரயீஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர்கள் விஜயத்தில் பங்கு கொள்ளவில்லை.
பொன்தீவு கண்டல் பூவரசங்குள பகுதி கிறிஸ்தவ முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்கு உட்படாது இன முறுகல்களை வளர்த்துக் கொள்ளாது இருக்க வேண்டும். அப்போதே சிறுபான்மை மக்களின் உரிமைகளை வெற்றி கொள்ள முடியும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என்போரையும் சந்தித்து பிரச்சினைகள் உடனடித்தேவைகள் பற்றி கலந்துரையாடினார்கள்.
மன்னார் ஆயருடனான சந்திப்பில் இராணுவத்தினரது பிரசன்னம் நில ஆக்கிரமிப்பு மற்றும் நிலங்களை மீட்டெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்படது.
மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை குழுவினர் கேட்டுத் தெரிந்து கொண்டனர் இந்திய மீனவரின் வருகை, வடக்கில் சிங்கள மீனவரின் ஆக்கிரமிப்பு, இதனால் தமிழ், முஸ்லிம் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பன விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மன்னாரில் தமிழ் முஸ்லிம் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் என்பன விவசாயிகளினால் குழுவினரிடம் தெளிவுபடுத்தப்பட்டன. குளங்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையினால் நீர்ப்பாசன வசதிகள் தூர்ந்து போயுள்ளமை பற்றி முறையிடப்பட்டது.
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கு வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன. இந் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் ஒற்றுமையாக ஐக்கியமாக இருத்தல் பிரச்சினைகளை இலகுவில் வெற்றிகொள்ள முடியும் எனத்தெரிவித்தார்.
வரவேற்பு நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் உரையாற்றுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக வட மாகாண சபையில் இடம் கிடைத்தமைக்கு மன்னார் மாவட்ட மக்களின் பங்களிப்பு பெருமளவு கிடைத்தது. மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
இதுவிடயத்தில் அவர்களது ஒற்றுமையே முக்கியமானதாகும். வட மாகாண சபை இன்று பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது. எனவே, மக்கள் சோர்ந்துவிடாது தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு சவால்களை முறியடிக்க வேண்டும் என்றார். (vidi)

.

Web Design by Srilanka Muslims Web Team