காதிமுல் இல்ம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்று! - Sri Lanka Muslim

காதிமுல் இல்ம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்று!

Contributors

தென்னிந்தியா அதிராம்பட்டினத்தை பிறப்பிடமாகவும், இலங்கையின் காத்தான்குடியை மார்க்கப்பணியாற்றும் தளமாகவும் கொண்டிருந்த மர்ஹூம் அல்லாமா ஷெய்குல் பலாஹ் எம்.ஏ அப்துல்லாஹ் ஆலிம் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும்.

ஆறு வருடங்களானாலும் அவரது நினைவுகள் மக்கள் உள்ளத்தில் நிழலாடுகின்றன. தன் வாழ்நாளை காத்தான்குடிக்காக அர்ப்பணித்த பெருந்தகை அவராவார். மாணவர்களின் கல்வி மற்றும் பௌதீக செயற்பாடுகளில் கவனம் கொண்டிருந்தவர் அவர்.

யுத்த சூழலின் போது அமைதி, சமாதானம் சகவாழ்வு வேண்டி அவர் பாடுபட்டார். மர்ஹூம் ஷைகுல் பலாஹ் அவர்களுடன் அஷ்ஷஹீத் அகமது லெப்பை அவர்கள் பக்கபலமாக இருக்க மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்கள், உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மற்றும் யுத்த தரப்பினரையும் சந்தித்து பேசி இனஉறவுக்காக அவர் பாடுபட்டார். எதிர்காலத்தில் மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக, சுபீட்சமாக வாழும் சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவர் பெரிதும் உழைத்தார். இந்திய அமைதிப்படை இலங்கையில் தங்கியிருந்த வேளையில் பாரிய முறுகல் நிலைமை ஏற்பட்ட போது அவர் அமைதிக்காகப் பாடுபட்டார். இந்திய அமைதிப்படையைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த முறுகல் நிலைமை சுமுகமாக முடிந்தது. மர்ஹூம் ஷைகுல் பலாஹ் அவர்களுக்கு அமைதிப்படை உயர் அதிகாரிகள் உயர்ந்த மரியாதையும் செல்வாக்கும் அந்த வேளையில் கொடுத்தார்கள்.

மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் ஆன்மீக லௌகீக வழிகாட்டல்களை மக்களுக்கு தனது இறுதிக் காலம் வரை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் எளிமையான வாழ்வு வாழ்ந்து காட்டினார்.

மர்ஹூம் ஷைகுல் பலாஹ் மரணித்தாலும் அவர்கள் நாமம் இப்பிரதேசத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

அவரது தந்தை அபூபக்கர் புகழ்பெற்ற ஆலிம் ஆவார். மர்ஹூம் ஷைகுல் பலாஹ் காதிமுல் இல்ம் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும் (09.08.2022). நிரந்தர ஸதகதுந் ஜாரியாவாக தோற்றுவித்த ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரிக்காக அவர் இறுதி மூச்சுவரை பாடுபட்டார்.

 

மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா பலாஹி – (உறுப்பினர்)மஜ்லிஸுல் பலாஹிய்யீன் மாணவர் சங்கம்

Web Design by Srilanka Muslims Web Team