காத்தான்குடிக்கு படையெடுக்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்! - Sri Lanka Muslim

காத்தான்குடிக்கு படையெடுக்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்!

Contributors

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியை நோக்கி அண்மைக் காலமாக உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் காத்தான்குடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையை பார்வையிடுவதற்காகவும், புதிய காத்தான்குடியில் அல்அக்ஷா பள்ளிவாயலின் வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலை பார்வையிடுவதற்காகவும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அதே போன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆள்ளிவாயலையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதே போன்று காத்தான்குடி கடற்கரையையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை அமைந்துள்ளது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பாரம்பரியத்தையும் பூர்வீகத்தையும் சான்றுப்படுத்தும் பல்வேறு ஆவணங்கள் இந்த இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாக இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவதில் ஆற்றிய அளப்பரிய சேவைகள் பற்றியும் ஆவணரீதியான விபரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூதனசாலையை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையிலான காத்தான்குடி நகரசபை பொறுப்பேற்று பராமரித்து வருவதுடன், வருடத்தில் இரண்டு பெருநாள் தினங்களை தவிர ஏனைய அனைத்து தினங்களிலும் அனைவரும் இந்த நூதனசாலையை பார்வையிட முடியும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் தெரிவித்தார்.

வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் போயா உட்பட விஷேட விடுமுறை தினங்களிலும் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையும் இந்த நூதனசாலையை பார்வையிட முடியும். ஏனைய தினங்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5மணி வரை பார்வையிட முடியும். நகர சபை ஊழியர்கள் இந்த நூதனசாலையில் உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர்.

புதிய காத்தான்குடியில் அல்அக்ஷா பள்ளிவாயலின் வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலை பார்வையிடுவதற்காகவும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் இந்தப் பள்ளிவாயல் அமைந்துள்ளது. அதே போன்று காத்தான்குடி கடற்ரையிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கக் கூடிய விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் அமையப் பெற்றுள்ளன.

விடுமுறை தினங்கள் மற்றும் விஷேட முறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் காத்தான்குடியை நோக்கி வருகின்றனர்.

-எம்.எஸ்.எம்.நூர்தீன்-

Web Design by Srilanka Muslims Web Team