காத்தான்குடியில் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை சுற்றிவளைப்பு! - Sri Lanka Muslim

காத்தான்குடியில் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை சுற்றிவளைப்பு!

Contributors

மட்டக்களப்பு, காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பணை நிலையமொன்றின் களஞ்சியசாலையை இன்று(10) வெள்ளிக்கிழமை காலை  நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.

மேற்குறித்த களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி மூட்டைகளை மீட்டதுடன், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு பொது மக்களுக்கு விற்பணை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழ்காட்டலிலும், ஆலோசனையின் பேரிலும், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் அன்வர்சதாத் தலைமையில்,  அங்கு சென்ற அதிகாரிகள் குழு காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பணை நிலையமொன்றின் களஞ்சியசாலையை முற்றுகையிட்டது.

அங்கிருந்த அரிசி மூட்டைகளை மீட்டு, அவ்விடத்திலேயே குறித்த அரிசி மூட்டை அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யுமாறு உத்தரவையிட்டதையடுத்து, குறித்த அரிசியினை வைத்திருந்த கடை உரிமையாளர் பொது மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியினை விற்பனை செய்தார்.

குறித்த பல சரக்கு விற்பனை நிலைய உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் வியாபாரிகள் சிலர் அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கெப் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக நாங்கள் இவ்வாறான பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை சோதனை செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் அன்வர் சதாத் தெரிவித்தார்.

வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்தல், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்றல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் எமக்கு முறைப்பாடு செய்யலாம். நுகர்வோர் இதில் விழிப்புனர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

Web Design by Srilanka Muslims Web Team