காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி பேரவைத் தீர்மானம்! - கருணாநிதியும் கோருகிறார். - Sri Lanka Muslim

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி பேரவைத் தீர்மானம்! – கருணாநிதியும் கோருகிறார்.

Contributors

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று டெசோ சார்பில் வலியுறுத்தியுள்ளோம். ராமதாஸ், திருமாவளவன், கி.வீரமணி போன்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். கனடா இந்த மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வும் ஒருமுகப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கக் கூடாது என்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏகமனதாக நிறைவேற்றப்படும் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வலியுறுத்த வேண்டும்.

சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் புதன்கிழமை கூட உள்ளதாக ஆளுநர் கே.ரோசய்யா அறிவித்துள்ளார். பேரவை கூடுவது தொடர்பாக ஆளுநர் அறிவித்த பிறகு அரசு சார்பில் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை. பேரவையின் மாண்புக்குப் பெருமை சேர்ப்பதும் இல்லை. ஆனால் அரசு சார்பில் தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team