
காரணமின்றி உள்ளூராட்சிமன்ற பதவிக்காலத்தை நீடித்தமை தவறு – பெப்ரல் கடும் எதிர்ப்பு..!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாரச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்தாலும் அதற்கான நியாயமான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கினால் அதன் விளைவு வேறுவிதமாக வெளிப்படும். உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒருவருட காலத்துக்கு அரசாங்கம் ஒத்திவைத்திருக்கின்றது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமையவே அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தேர்தலை பிற்போடுவதற்கு தீர்மானித்திருக்கின்றார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு எடுத்த தீர்மானத்தை பெப்ரல் அமைப்பு நியாயப்படுத்தப்போவதில்லை. பிற்போடுவதற்கான நியாயமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன் கொரோனா தொற்று பரவும் என்ற காரணத்துக்காக தேர்தலை பிற்படுத்தி இருப்பதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றது, கொரோனா தொற்று பரவும் அபாயம் மற்றும் மக்கள் மத்தியில் அதுதொடர்பான அச்சம் இருந்த காலகட்டத்திலாகும்.
நாடாளுமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தற்போதை எதிர்க்கட்சி அன்று ஆளும் கட்சியாக இருந்து நடவடிக்கை எடுத்தபோதும் அப்போதைய காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளும் கட்சி தேர்தலை நடத்துவதற்கு தொடர்ந்து போராடி வந்தது. ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்களும் அதற்கு ஆதரவாக இருந்தோம்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கொரோனா தொடர்பான அச்சுறுத்தல் இருக்கின்ற போதும் மக்களுக்கு அது தொடர்பில் பெரிதளவில் அச்சம் இருப்பதாக தெரியவில்லை.
அதேபோன்று மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் எந்த பாதிப்பும் இல்லாம் சுமுகமாக இடம்பெற்றுகின்றன. அவ்வாறான நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு கொரோனா தொற்று காரணமாக தெரிவிக்க முடியாது.
அதேபோல் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் பல மில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்படுகின்றது. அதன் பாதிப்பும் மக்களுக்கே ஏற்படுகின்றது.
அதனால் எந்த நிலைமையிலும் நாட்டு மக்களுக்கு அடிக்கடி தனது ஆட்சியாளர்களை தெரிவுசெய்துகொள்ள மற்றும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க இருக்கும் உரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றே நாங்கள் நம்புகின்றோம்.
அந்த சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கினால் அது வேறுவிதமாக வெளிப்படும் அபாயம் இருக்கின்றது. எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை அமைச்சர் அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஒத்திவைத்திருப்பதை எம்மால் சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் செல்வதில் பயனில்லை.
தேர்தலை ஒத்திவைப்பதற்கான நியாயமான காரணத்தை தெரிவிக்காததால், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் நோக்கில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கமுடியும். அதுதொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.