காலி முகத்திடல் : முஸ்லிம்களின் அடிமைத்தனமும் ஆர்ப்பரிப்பும்..! - Sri Lanka Muslim

காலி முகத்திடல் : முஸ்லிம்களின் அடிமைத்தனமும் ஆர்ப்பரிப்பும்..!

Contributors

தற்போது காலி முகத்திடலில் குவிந்துள்ள முஸ்லிம்களின் செயற்பாடுகள் பற்பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன. சில விமர்சனங்களை நோக்குகையில் சரியானதாகவும், இன்னும் சில விமர்சனங்களை நோக்குகையில் பிழையானதாகவும் அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் இரு வகையான மனநிலையில் உள்ளனர். ஒன்று அடிமைத்தனத்திலுள்ளவர்கள், மற்றையது அளவுக்கு மிஞ்சிய செயற்பாடுகளுடையவர்கள். இவ் இரண்டு வகையினரும் ஆபத்தானவர்கள்.

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். எமது செயற்பாடுகள் இதனையும் கருத்தில் கொண்டதாக இருத்தல் வேண்டும். தற்போது இலங்கை நாட்டில் பலவிதமான இன ரீதியான முரண்பாடுகள் மக்களிடையே இருப்பது மறுதலிக்க முடியாத உண்மைகளில் ஒன்று. தற்போது அது படிப்படியாக குறைவடைய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இச் சூழலை நாம் இன்னும் வாசமிக்கதாக மாற்ற முயற்சிப்பதே சாதூரியமானது. இதனை ஆழமாக கிழறி நாற்றமடிக்க செய்வது அறிவுடமையாகாது.

தற்போது காலி முகத்திடலில் இப்தார் நேரம் நோன்பு திறக்கும் காட்சி பெரும் ஊடக பேசு பொருளாக காட்சி படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. அங்கு அதான், தொழுகை, பயான் என ஒரு குட்டி பள்ளிவாயலாகவே இவ்விடம் மாற்றப்பட்டுள்ளது. இது அழகிய காட்சி என்பதை மறுப்பதற்கில்லை. இச் சம்பவம் ஒரு முஸ்லிம் நாட்டில் நடைபெற்றிருப்பின், இதனை யாரும் அலட்டி கொண்டிருக்க மாட்டார்கள். மத முதிர்ச்சியுடைய சிந்தனையாளர்கள் உள்ள நாடாக இருந்தாலும், இதனை யாரும் கணக்கில் கொண்டிருக்க மாட்டார்கள். தற்போதே இலங்கையில் மத நல்லிணக்கம் துளிர் விட ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் இது பொருத்தமானதல்ல.

நோன்பு திறத்தலை பிரமாண்ட உணவுப் பண்டிகை போன்று காட்ட வேண்டிய தேவையுமில்லை. அது இஸ்லாமுமல்ல. நோன்பு திறக்க தண்ணீரும், ஈச்சம் பழமும் போதுமானது. தொழுகையை நடு வீதியில் தொழுதிருக்க தேவையில்லை. காலி முகத்திடலின் ஒரு ஓரத்திலோ அல்லது பள்ளியிலோ தொழுதிருக்கலாம். அதான், பயான் எதற்கு என்ற வினாவிற்கான பதில்கள் தெரியவில்லை. அதற்காக இது ஒரு போதும் செய்ய கூடாது என கூற வரவில்லை. இலங்கை முழுமையான நல்லிணக்க நாடாக மாறினால், இதனை அனைவரும் முஸ்லிம்கள் செய்யும் காரியம் என சாதாரணமாக எடுக்கும் நிலை இருந்தால், இதனை யாரும் கணக்கில் கொள்ள மாட்டார்கள். அந் நிலை இப்போது இல்லை என்பதால், தற்போதைக்கு இதனை தவிர்ப்பதே சிறப்பு. இக் காட்சியை அனைத்து மதத்தினரும் சாதாரணமாக பார்க்கும் மனநிலையை உருவாக்க நாம் முயற்சிக்க வேண்டும். தற்போது நடந்தேறி கொண்டிருக்கும் எமது செயற்பாடுகள் அதனை முளையிலேயை கிள்ளி எறியும் வகையிலேயே அமைந்துள்ளன.

தற்போது ஒரு கூட்டம் இப் போராட்ட திசை திருப்பலுக்கு ஏதாவது ஒரு வழியை தேடிக்கொண்டிருக்கின்றது. பெரும் மூலதனமற்ற இலகு வழி இனவாதம் என்பது நாமறிந்ததே! அதிலும் முஸ்லிம்களை குறி வைத்து நகர்த்துவது மிக இலகு. இப் போராட்டத்தை முறியடிக்க இனவாதத்தை கிளறும் பாரிய முயற்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் சூழ்ச்சிகளுக்கு எமது செயற்பாடுகள் வலுச் சேர்ப்பதாக அமைந்துவிட கூடாது.

நாம் அஞ்சிய போன்று, இன்று நடைபெற்றிருந்த அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களை பிரதானமாக கொண்ட இனவாத பிரச்சாரம் கிளறப்பட்டிருந்தது. இதற்கு எமது சில செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருந்தமை கவலைக்குரியது. அதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல வேண்டாம் என யாரும் கூறவில்லை. எமது நோக்கம் தூய்மையாக இருந்தால் அதுவும் அமலே. ஆர்ப்பாட்டம் செல்ல வேண்டாமென கூறுவது அடிமைச் சிந்தனைகளில் ஒன்று. முஸ்லிம்களிலுள்ள மொட்டுக்களின் முட்டு சிந்தனையில் ஒன்று. இது எமது நாடு. இந் நாட்டை அழிக்கும் சிந்தனையுடையோருக்கு எதிராக செயற்படுவது எமது கடமையாகும்.

காலி முகத்திடலில் நடைபெறும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு இலங்கை பிரஜையாக பங்கெடுப்பது எமக்கும் கடமையே. அங்கு முஸ்லிம்கள் என்று பிரித்து காட்டும் வகையிலான செயற்பாடுகள் இயன்றவரை தவிர்ந்துகொள்வதே பொருத்தமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team