கால நீடிப்பு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை கலைக்க கோரி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மகஜர்! - Sri Lanka Muslim

கால நீடிப்பு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை கலைக்க கோரி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மகஜர்!

Contributors

கால நீடிப்பு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை கலைக்க கோரி அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆறுபேர் கையெழுத்திட்ட மகஜரொன்றை கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் (ஸ்ரீ.ல. சு.கட்சி), உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். பஸ்மீர் (பள்ளிவாசல் சுயாதீன குழு), கே.குமாரஸ்ரீ (கோயில் சுயாதீன குழு), எஸ். நேசராஜா (த. தே. கூட்டமைப்பு), எம். ஜலீல் (அ.இ.ம.கா), கே.ஜெயதாஸன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள மகஜரில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின்கீழ் இயங்குகின்ற உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலமானது கடந்த 2022 பெப்ரவரி மாதத்துடன் நிறைவுபெற்ற போதும் தற்போதைய அரசாங்கத்தினால் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டு 2023 பெப்ரவரி வரை அதன் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள உறுப்பினர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு உள்ளிட்ட பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு காலநீடிப்பு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து அதனுடாக கிடைக்கும் கொடுப்பனவுகளை மக்களின் செயல்திட்டங்களுக்காக பயன்படுத்த காரைதீவு பிரதேசசபையின் உறுப்பினர்களாகிய நாங்கள் எமது முழுசம்மதத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முன்வைத்து அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அமைப்பும் கடந்த வாரம் பிரதமர், ஜனாதிபதி உட்பட பலருக்கும் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்-

Web Design by Srilanka Muslims Web Team