கிழக்கில் அநீதிக்கு உட்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? – கி. மா. சபை உறுப்பினர் சிப்லி கேள்வி - Sri Lanka Muslim

கிழக்கில் அநீதிக்கு உட்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? – கி. மா. சபை உறுப்பினர் சிப்லி கேள்வி

Contributors

பாதிக்கப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நியாயமான தீர்வைக் கொடுக்க வேண்டுமென என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொருளியலாளர் சிப்லி தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மட்டக்களப்பு காணிக் கச்சேரி தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், மண்முனைப் பற்று பிரதேச செலாளரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் பாலமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம்,கீச்சான்பள்ளம், மண்முனை, கர்பலா, கைராத் நகர், பொழுதிலைக் கேணி இது இப்பொழுது திருநூற்றுக் கேணி என்று அழைக்கப்படுகின்ற முஸ்லிம் கிராமங்கள். இப்பிரதேசங்களில் 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணப்கெடுப்பின் படி மொத்த சனத்தொகையானது 10710 நபர்களாகும். இது இப்பிரதேச மொத்த சனத்தொகையில் 29.75 வீதமாகும். இதன் ஆளுகைக்குட்டபட்ட மொத்த நிலப்பரப்பு 37 சதுர கிலோ மீட்டர்களாகும். இதனடிப்படையில் முஸ்லிம்கள் குடியிருக்கும் காணிப்பரம்பல் (3.134 சதுர கிலோ மீட்டர்கள்) 8.47 வீதமாகும். ஆக இந்த நிலப்பங்கீட்டைப் பார்க்கின்ற போது குறுகிய எல்லைக்குள் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவதைக் காட்டுகின்றது.

 

மண்முனை

 

இதில் உள்ள முதலாவது கிராமம் மண்முனையை எடுத்து நோக்கினால் மண்முனையில் வாழ்கின்ற மக்களில் வாழ்வுரிமையை பறிக்கின்ற விதமாக இங்கு முஸ்லிம்கள் வாழ்கின்ற காணிகள் எல்லாம் அரச காணி என்ற ஓர் பூதாகரத்தை ஏற்படுத்தி இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் அத்தியவசியத் தேவைகளான வீடு, நீர் வசதி, மின் இணைப்பு, மலசலகூடம் என்பவற்றை அமைக்கின்ற அல்லது பெறுகின்ற நடவடிக்கைகளுக்கு உரிய ஆவணங்களை சிபாரிசு செய்வதை மறுப்பதன் மூலமாக அங்கு வாழும் மக்களை அங்கிருந்து விரட்டுவதற்கும் புதிதாக தங்களுடைய இருப்பிடங்களை ஆக்கிக் கொள்ள விரும்புவர்களை வராமல் தடுக்கின்ற ஒரு முயற்சி அங்குள்ள கிராம சேவை உத்தியோகத்தராலும்,இப்பிரதேசத்திற்குரிய பிரசேத செயலாளராலும் திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது.

 

இதுவரை காலமும் அங்கு வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களில் 44 குடும்பங்களின் விபரமும் அவர்களுடைய வாழ்வுரிமையை உறுதிப்படுத்துகின்ற ஆவணங்கள் அத்தனையையும் உங்கள் பார்வைக்கு தேவையானால் இதோ என்னால் சமர்ப்பிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தி T. கோபாலரத்தினம் 153 A, மண்முனை பொறுப்பான கிரம சேவகர் உறுதிப்படுத்தி அதனை மேலதிகமாக T. தனபால சுந்தரம் பிரதேச செயலாளர், மண்முனைப்பற்று அங்கீகரித்துக் கொடுக்கப்பட்ட 2011.04.06 ஆம் திகதி ஒப்பமிட்ட ஆவணத்தை உங்கள் பார்வைக்கு என்னால் கொடுக்க முடியும்.

 

1. அஹமது லெப்பை பல்கீஸ் உம்மா -பிறந்த ஆண்டு 1948. இடம் தாளங்குடா. வதிவிடம் 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் பிரகாரம் மண்முனை, காத்தான்குடி. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 44 குடும்பங்களுக்குரிய ஆதாரங்களை அடுக்கிக் கொண்டு செல்ல முடியும்.

 

இதில் இன்னுமோர் முக்கிய விடயத்தை இங்குள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் முன்வைக்கின்றேன். கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற மண்முனைப் பாலம் அதனோடு சேர்ந்த வீதிகள் அங்குள்ள நெற்பயிர்ச் செய்யும் காணியை விட 3 அடிக்கு மேல் உயரமாக இருப்பதால் அங்கு கட்டாயம் நீர் வடிந்து வாவிக்குச் செல்லும் அளவிற்கு ஒரு மதகு அமைக்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் அங்குள்ள நெற்பயிர்ச் செய்கைக்கான காணிகள் கால போகத்தில் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். அது முஸ்லிம்களுக்குச் செய்கின்ற ஒரு அநீதியாகவும் இருக்கும்.

 

காங்கேயனோடை

 

அடுத்த கிராமமாக காங்கேயனோடையை எடுத்து நோக்குகின்ற போது, முஸ்லிம்களின் வரலாற்று ரீதியாக பேசப்படுகின்ற ஒரு ஊராகிய இந்தக் காகேயனோடை தற்காலத்தில் திடீரென அரச காணியாய் மாற்றம் பெற்றிருப்பது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு உதாரணமாக முஹிதீன் பாவா அஹமது லெப்பை என்பவர் தன்னுடைய மகள் அஹமது லெப்பை நிஸாயாவிற்கும்,அவவினுடைய சகோதரிகளுக்கும் பிரித்துக் கொடுத்த காணியில் மின்சார இணைப்பை பெறுவதற்காக அஹமது லெப்பை நிஸாயா விண்ணப்பித்த போது இந்தக் காணி அரச காணி என்று கிராம சேவை உத்தியோகத்தர் G. பஞ்சாச்சரம் கூறி அந்த நிரலை நிரப்பி நிஸாயாவிற்கு சொந்தமான காணியை மறுத்து அரச காணி என்று கூறியுள்ளார். இதில் ஒரு விடயம் என்னவென்றால் இதற்கு முன் இவவினுடைய சகோதரிகள் மூவர் இதே பெயரில் தனது தகப்பனுக்கிருந்த காணிகளைப் பெற்றவர்கள். அவர்கள் மூவரினதும் மின்னிணைப்பு எடுக்கின்ற போது எழாத இந்தப் பிரச்சினை இவவிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் காணியை உறுதிப்படுத்துவதற்காக அவவினுடைய உறுதிப்பத்திரத்தின் தொடரினை எடுத்துப் பார்த்த போது 1964 களில் இருந்து இதற்கான தொடர் B 119/16 14.07.1964 இல் பதிவு செய்யப்பட்டதிலிருந்து மிகத் தெளிவாக இருக்கன்ற போது இதனை ஏற்க முடியாது என்று சொல்லி நிராகரிக்கப்பட்ட ஒரு கொடுமை நடந்திருக்கின்றது.

 

ஒல்லிக்குளம்

 

அடுத்ததாக இங்கு வாழ்கின்ற தம்பி மரைக்கார் மரியம் பிள்ளை தனது இருப்பிடத்திற்கு மின்சாரம் கேட்டு விண்ணப்பித்த போது கிராம சேவகர் P.பத்மநாதன் அவரின் காணியை தனியார் காணி என்று உறுதிப்படுத்தியபொழுதும் இதனை பிரதேச செயலாளர் அவர்கள் மறுத்து இதுவரையில் அவருக்குரிய மின்னிணைப்பைப் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் இவருடைய நிரந்தர வசிப்பிடம் மண்முனைப்பற்று ஒல்லிக்குளம் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதுடன் இவருடைய பிறப்பு1953.10.09 ஒல்லிக்குளம் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகமொத்தத்தில் பிறப்பிலிருந்து இன்று வரை ஒல்லிக்குளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் தாய்க்கு அவருடைய வாழ்வுரிமையைப் பறிப்பதன் மூலமாக அவரை அங்கிருந்து விரட்டுகின்ற ஒரு நடவடிக்கையாக இதை நான் பார்க்கின்றேன்.

 

பாலமுனை

 

வன்செயலினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்னுமொரு சமூகம் பாலமுனை சமூகமாகும். சுனாமி காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அம்மக்களை குடியேற்றவென காத்தான்குடியைச் சேர்ந்த முஹைதீன் ஹாஜியார் என்பவர், தனக்கு சொந்தமான காணியை அரசுக்கு அளிப்புச் (Vast) செய்து அதனை நோர;வே நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமாகிய Forut 71 வீடுகளை அமைத்து கையளித்தது. இதற்கான ஆவணங்களை உரிய பயனாளிகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக 31.07.2009 திகதியிடப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் S.அருமைநாயகம் அவர்களுடைய கடிதம், மாகாணக் காணி ஆணையாளர், காணி நிருவாகத் திணைக்களம், கிழக்கு மாகாணம், திருகோணமலை என்று முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் இதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவுபெற்றுவிட்டதாகவும் தன்னால் இதற்கான சிபாரிசுகள் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது என்ற அந்த கடிதத்தின் பிரதி ஒன்றினை பிரதேச செயலாளர், மண்முனைப்பற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரைக்கும் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் அந்த 71 குடும்பங்களும் தமது வாழ்விடத்துக்கான உறுதிகள் உறுதி செய்யப்படாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

நேற்று (17.11.2013) நடந்த சம்பவம் ஒன்றில் செல்வா நகர் கிழக்கிற்குப் பொறுப்பான கிரம உத்தியோகத்தர் சற்குணம் என்பவர் அங்கு தனிமையில் வாழ்ந்துவரும் ஒரு ஏழைத் தாயிடம் சென்று உன்னுடைய காணி அரச காணி. உன்னுடைய வீடுகளையெல்லாம் உடைத்து உன்னை வெளியேற்றுவேன் என்று மிக மோசமாகவும் அநாகரிகமாகவும் ஒரு பெண் என்று கூடப் பார்க்காமல் மோசமாக ஏசியிருக்கின்றார். அந்தத் தாய் இருப்பது ஒரு அரச காணியாக இருக்கும் என்று ஒரு எடுகோள் எடுத்தாலும் அரச காணி என்பது வெறுமனே ஓர் இனத்துக்கு மாத்திரம் தான் சொந்தம் என்கின்ற ஒரு எண்ணப்பாடு மட்டக்களப்பு தமிழ் அதிகாரிகளிடம் இருப்பது போல் எனக்குத் தோன்றுகின்றது. அரச காணி என்பது நியாயமாகவும், நீதியாகவும் எல்லா இனங்களுக்கும் அவர்களது வாழ்வுரிமைக்காக மனிதாபிமான ரீதியில் கொடுக்கப்படவேண்டியது. இதை விடுத்து அரச அதிகார பலத்தினூடாக ஓர் இனத்துக்கென்று மட்டுப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அக்பர் ஹாஜியார் என்பவர் கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இரும்புத் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்காக சகலவிதமான ஆவணங்களையும்,அனுமதிகளையும் பெற்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவில் செலவு செய்து தொழிற்சாலையை கட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றபோது அவருக்கான மின்னிணைப்பை பிரசேத சபை கொடுப்பதற்கு அனுமதி வழங்கியும் பிரதேச செயலாளர் அதனை இடைநிறுத்துமாறு கோரி இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டதன் மூலம் அந்த மின்னிணைப்பை பெறாமல் தடுத்து வருகின்றார்.இவருடைய இச்செயற்பாட்டினால் அந்த தொழிற்சாலையை சுற்றியிருக்கும் 150 பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைளின் மூலம் எதை சாதிக்க முற்படுகின்றார். இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் அக்பர் ஹாஜியார் என்பவர் வினவிய போது நீங்கள் முகம் தொரியாத ஒரு நபரின் பெயரைச் சொல்லி இதற்கான ஓர் சம்மதத்தை எடுத்து வந்தால் என்னால் உங்களுக்கான அனுமதி தர முடியும் எனக் கூறியிருக்கின்றார். இங்கு எனக்கு ஓர் சந்தேகம் ஏற்படுகின்றது. மண்முனைப் பற்றினுடைய அரச நிருவாகம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒருவரின் அதிகாரத்திலா இந்த மாவட்ட செயலாளரினால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது? இதை நீங்கள் எனக்கு விளக்க வேண்டும்.

 

கர்பலா

 

காலத்திற்குக் காலம் கர்பலாக் கிராமம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய இடமாக மாறுவதும் மக்கள் பீதியுடனும் அச்சத்துடனும் வழ்வதென்பது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாள் முதல் இதுவரையில் அங்குள்ள எல்லைக் காணிகளில் தொடர்ந்தும் பிரச்சினைகள் நீண்டு கொண்டேதான் இருக்கின்றது. பிரதானமாக அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவருகின்ற யூனுசருடைய தோட்டம் என்று அழைக்கப்படும் முஹைதீன் பாவா முஹம்மது முஸ்தபா என்பருக்கு சொந்தமான காணியின் எல்லைப் புறங்களை அவ்வப்போது அத்துமீறுவதும் ஆக்கிரமிப்பதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது. யூனுசருடைய தோட்டம் என்பது மட 36 என்ற வரைபடத்தில் TP 91556 TP 915577>TP 91529> TP 397003 ஆகிய அடங்கலாக இதனை 1948, 1950 களில் கிரையமாகவும், நன்கொடையாகவும் பெறப்பட்ட உறுதி இலக்கங்களான 9052, 5089 மூலமாக அவரது சொந்தமும் ஆட்சிக்குரியதுமாகும். அதுமட்டுமல்லாது மட 36 வரைபடத்தில் Lot No. 20 எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்ற காணியானது மிகத் தெளிவாக மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் உள்ள காணிப்பதிவிலும், மட்டக்களப்பு நில அளவைத் திணைக்களத்தின் பதிவகத்திலும் இந்தக் காணி முஹைதீன் பாவா முஹம்மது முஸ்தபா (யூனுசர் என்று அழைக்கப்படுபவர்) என்பவருக்குரியதென அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க இந்தக் காணியினை அரச காணி என்றும் எங்களுக்கு சொந்தமிருக்கின்றது என்ற எந்தவிதமான அடிப்படையுமில்லாத ஆக்கிரமிக்கின்ற இந்த முயற்சிக்கு அப்பகுதி கிராம சேவகரும் பிரதேச செயலாளரும் முழு ஆதரவுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு சம்பவத்தின் போது கிராம சேவகர் தர்மலிங்கம் (GS) (ஆரையம்பதி கிழக்கு – 2) அங்கு அடைக்கப்பட்டிருந்த முஹைதீன் பாவா முஹம்மது முஸ்தபா என்பவருடைய மகனுக்குச் சொந்தமாயிருந்த காணியின் வேலிக் கம்பங்களை தள்ளிவிட்டு சேதப்படுத்தியிருக்கின்றார். அவர் பொறுமை காத்ததன் விளைவாக அங்கு எவ்விதமான கைகலப்புமில்லாமல் அங்கிருந்து உரிய இருவர்களும் வெளியேறியிருக்கின்றார்கள். அன்று இந்தச் செயலுக்கெதிராக காணி உரிமையாளர் ஏதும் தாக்குதல் நடாத்தியிருந்தால் இது ஓர் கேவலமான செயலாக மாறியிருக்கும். ஆக அதிகாரிகளின் கௌரவத்தை அவர்களே பாதுகாக்கும் விதமாக இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மண்முனைப் பற்று பிரதேச செயலாளரின் எல்லைப் பிரிவிற்குள் தமிழ் மக்களுக்கான மயானம் பல ஏக்கர் காணி வர்த்தமானி பிரசுரிப்புடன் கல்முனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்தது. காலாகாலமாக மயானமாக இருந்த இடம் இப்பொழுது அபிவிருத்திப் பணிக்காக எடுக்கப்பட்டிருக்கின்ற அதே வேளை 2006 ஆம் ஆண்டு பாலமுனைக்குச் சொந்தமான மையவாடிக் காணியினை தங்களுக்கும் தங்களது பிரேதங்களை அடக்குவதற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற ஓர் கோஷமும் அத்துமீறலும்LTTE இனர் தமது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில் முன்வைக்கப்பட்டது. இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முஸ்லிம் மக்கள் தமக்குச் சொந்தமான மயானத்தில் அரைவாசியை இன நல்லுறவைப் பேணுவதற்காகவும் இன முறுகல்களைத் தவிர்ப்பதற்காகவும் பெருமனது கொண்டு அந்தக் காலகட்டத்தில் பிரதேச செயலாளராக இருந்த அமலநாமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு உறுதியான ஒப்பந்தத்துடன் அதை விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் அது தற்பொழுது ஒரு மைதானமாக மாற்றம் பெற்று இப்பொழுதும் பாவனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வ நகர் கிழக்கு சிவா வித்தியாலய வீதியில் இன்னுமோர் காணியை மயானமாகப் பிரகடனப்படுத்தி அதில் பிரேதங்களை அடக்கி வந்தார்கள். இதனைத் தொடர்ந்து பாலமுனை வீதியின் கிழக்குப்பக்கமாக உள்ள காணியில் இரவோடு இரவாக சவங்களைப் புதைத்து தங்களது மயானம் இதுவென்று, நான்காவது மயானத்தினை உருவாக்கினார்கள். இதற்கு எல்லையிடப்பட்டிருந்தும் அதை அண்மித்து இருக்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியில் அத்துமீறி அவ்வப்பபோது அவர்களுடைய பாதுகாப்பு வேலியை உடைப்பதும், எதுவித ஆதாரமுமில்லாமல் இது எங்களுடைய காணி என்று சொல்லி அதை ஆக்கிரமிக்க முயல்கின்ற ஒரு முயற்சிக்கு அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தரும், பிரதேச செயலாளரும் பக்கபலமாகச் செயற்படுகின்றார்கள். இதிலுள்ள காணிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருக்கையில் எதிலுமே முதிர்ச்சி அடையாத எங்கோ இருந்து இங்கு வந்து அறிக்கை விடுகின்ற, வரலாறு தெரியாத,அப்பாவித்தனமானதிருவாளர் அருண் தம்பிமுத்து அவர்களே! உங்கள் அரசியல் பயணத்தை தொடர்வதற்கு இதைவி;ட சிறந்த ஒழுக்கமுள்ள ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். அதைவிடுத்து சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி குரோதங்களை வளர்த்து இனவாதத்தைத் தூண்டி நீங்கள் அரசியல் இலாபம் தேட விழையாதீர்கள். எதையும் பேசுவதற்கு முன் அதுபற்றி அறிந்ததன் பின்பு பேசப் பழகுங்கள். ஆங்கிலப் பத்திரிகைக்கு அறிக்கை விட எங்களுக்கும் தெரியும். ஆனால் பிரித்தாளும் ஒரு அரசியலை செய்வதற்கு நாங்கள் எப்போதும் விரும்புவதில்லை.

 

அத்தோடு காத்தான்குடி ஜாமியுள் ழாபிரீன் என்று அழைக்கப்படும் பள்ளிக்குச் சொந்தமான ஒரு காணிப்பகுதியில் Ehed நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென கட்டப்பட்ட வீடு அமைந்துள்ளது. ஆனால் இதற்கு எதிராக குறிப்பிட்ட அந்தப் பள்ளிவாயல் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. காரணம் அந்த மக்கள் பாதிக்கப்பட்வர்களாக இருந்தால் மீண்டும் அவர;களை அங்கிருந்து குடி பெயரச் செய்து அகதிகளாக ஆக்க மனிதாபிமான ரீதியாக விரும்பவில்லை. அதனால் அவர்கள் அவ்வாறே விட்டுவிட்டார்கள். இது ஓர் நல்லெண்ண அடிப்படையில் நடந்த விடயமாக இருக்கலாம். ஆகவே இவ்வாறு விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத்தன்மையுடனும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துவமாக சேர்ந்து வாழ நினைக்கின்ற ஓர் சமூகத்தின் மீது இவ்வாறு மிக மோசமான அடக்குமுறைகளை பிரயோகிப்பதென்பது எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

கைராத்

 

கைராத் நகர் என்கின்ற ஒரு பிரதேசம் பன்நெடுங்காலம் தொட்டு முஸ்லிம்கள் வாழந்து வந்த ஒரு பிரதேசமாகும். அவ்வப்போது இடம்பெற்ற வன்செயலின் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களை துப்பாக்கி முனையில் துரத்துவதும் அவர்களுடையை உடமைகளை எரிப்பது என்கின்ற தொடரேச்சியான சம்பவங்கள் இடம்பெற்று வந்ததால் அந்த மக்கள் அங்குமிங்கும் அகதிகளாகவும், உறவினர்களின் வீட்டிலும் வாழ்ந்து வந்தார்கள். சுனாமிக்குப் பிற்பாடு தங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அவர்களுக்காக சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இவர்களுக்கான இருப்பிட வசதிகளை செய்து கொடுத்திருக்கின்ற வேளையில் அந்த மக்கள் மீது அநீதி இழைக்கப்படுவதென்பது எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

இவர்கள் குடியிருக்கும் காணி மட 36 என்கின்ற வரைபடத்தில் TP இல. 86924 ஆகும். இந்த இலக்கக் காணி 1872 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29 ஆம் திகதி 86924 என்ற அளிப்பின் ஊடாக (Grant) அஹமது லெப்பை மீரா லெப்பை அவருக்கும் உதுமா லெப்பைக்கும் வழங்கப்பட்ட 09 ஏக்கர் 03 றூட் 32 பேச்சர்ஸ் இந்தக் காணியின் எல்லைகள் அவ்வப்போது சுரண்டப்பட்டு இப்பொழுது 05 ஏக்கருக்கும் குறைவாகவே உள்ளது. எஞ்சிய காணியில் குடியிருக்கின்ற மக்களுக்கு திட்டமிடப்பட்ட வகையில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர், இதற்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தரும் இணைந்து அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுகின்ற ஒரு கட்சிதமான காரியத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதை நீங்கள் உடனடியாக உங்களது கவனத்திற்கு எடுத்து உரிய தீர்வைத் தர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

 

இதற்கு இன்னுமோர் உதாரணமாக SM. நமீறா பீவி, கைராத் லேன், ஆரையம்பதி என்ற ஒரு சகோதரி தனது வீட்டை அமைப்பதற்காக விண்ணப்பித்த போது அதற்கான அனுமதியினை மறுத்து இதுவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தச் சகோதரி மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு சோலை வரி செலுத்தி வாழ்ந்து வரும் ஒருவர். அதுமட்டுமல்லாது இவரின் வாழ்விடத்தை உறுதி செய்து கிராம சேவை உத்தியோகத்தர் K. தர்மலிங்கம் உறுதிப்படுத்தியதை பிரதேச செயலாளர் சார்பாக K.குருநாதப் பிள்ளை சிபாரிசு செய்திருக்கின்றார். இவ்வாறிருக்கையில் ஏன் இந்த சகோதரியினுடைய விண்ணப்பம் அனுமதி வழங்கப்படாமல் இருக்கின்றது? இதை நீங்கள் இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்திக் குழு தவிசாளர் என்ற வகையில் நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 

காத்தான்குடி

 

காத்தான்குடி எல்லை சம்பந்தமாக அடிக்கடி அறிக்கை விடுகின்றவர்கள் உண்மைகளைத் தெரிந்து எல்லைகள் சம்பந்தமான ஆவணங்களை நன்கு படித்து தெளிவு கண்டதன் பின்பு அறிக்கை விட வேண்டும். மிக நீண்ட காலத்திற்கு முன் வர்த்தமானி பத்திரிகையினூடாக வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அற்ப அரசியல் இலாபத்திற்காக இரண்டு சமூகங்களை மூட்டிவிட்டு அதில் அரசியல் இலாபம் தேடுகின்ற வங்குரோத்து அரசியல்களைச் செய்கின்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போன்றவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 12.05.1987 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரசுரத்தையும் அதனைத் தொடர்ந்து 04.07.1997 இதற்குப் பிந்திய, 17.12.1998 திகதிகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளதாவது: காத்தான்குடியின் தெற்கு எல்லை என்பது தெற்கு எல்லை வீதி என்று குறிப்பிடப்பட்டிருக்கையில் மக்களை பிழையாக வழிநடாத்தி எவ்வாறு LTTE இனர்இனத் துவேஷத்தினூடான தங்கள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தார்களோ அதே பாதையில் TNAஉறுப்பினர்களும் தமிழ் மக்களின் வாக்குகளை இவ்வாறான பொய்ப் பிரச்சாரத்தினூடாக பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெற்கு எல்லைக்குப் பதிலாக டீன் வீதி என்று ஓர் அறிக்கை விட்டிருக்கின்றார். அவர் வாசித்த அந்த வர்த்தமானிப் பத்திரிகையை எனக்கும் கொடுத்தால் எதிர்காலத்தில் நானும் தெளிவு கண்டு கொள்ள முடியும். இன்னுமொரு அறிக்கையில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்பது பெயர் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் மட்டக்களப்புப் புகையிரத நிலையம் காத்தான்குடிப் புகையிரத நிலையம் என்று பெயர்மாற்றம் பெறும் என்று கூறியிருந்தார். இதே வசனங்களை 25 வருடத்திற்கு முதல் புரட்டிப் பார்த்தால் பாலமுனை – காத்தான்குடி என்றும், மண்முனை – காத்தான்குடி என்றும் இப்போது அமைந்துள்ள ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை கூட காத்தான்குடி வைத்தியசாலை என்றும் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் மாற்றம் அடைந்து பாலமுனை – ஆரையம்பதி, காங்கேயனோடை – ஆரையம்பதி, ஆரையம்பதி வைத்தியசாலை என்று எல்லாமே பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

 

ஆக, இந்தச் சபையினை வழிநடாத்தும் கௌரவ தவிசாளர் அவர்களே! நீங்கள் சார்ந்த சமூகத்திற்கு சாதகமாக நியாயம் கூற வேண்டும் என்றோ அல்லது நடுநிலை தவறியோ உங்கள் தீர்ப்புக்கள் இருக்க வேண்டும் என்றோ உங்களை நான் கூறவில்லை.

 

ஆகவே, தவிசாளர் அவர்களே, என்னுடைய நியாயங்களை ஆராய்ந்து, சரி கண்டதன் பிறகு இங்கு பாதிக்கப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நியயமான தீர்வை கொடுக்க வேண்டுமெனக் கேட்டு என்னுடைய உரையை முடிக்கின்றேன்.(meel)

Web Design by Srilanka Muslims Web Team