கிழக்கில் அழிவடையும் கண்டல் தாவரங்கள்! - Sri Lanka Muslim

கிழக்கில் அழிவடையும் கண்டல் தாவரங்கள்!

Contributors

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் இயற்கையாக அமையப் பெற்ற கண்டல் தாவர சாகியம் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை, 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தமான சுனாமி போன்றவற்றினாலும் மனிதர்களின் சுயநலமான பாவனையாலும் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகி வருவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

உலர்நீரிலும் நன்னீரிலும் வளரக்கூடிய கண்டல் தாவரங்கள் ஏனைய தாவரங்களை விட வித்தியாசமானவை. சொனரேசியா ,புறூகைரா, அவிசீனியா, றைசோபோரா போன்ற தாவரங்கள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சியை காட்டுவதாக அமையும்.

கண்டல் தாவரங்கள் வளரும் சூழல் உவர்த்தன்மை அதிகமாக உள்ளதால், தாவரங்களின் வித்துக்கள் முளைப்பதில் பல சிக்கல்நிலை ஏற்படுவதால் மரத்திலிருக்கும் போதே முளைத்து சதுப்பு நீரில் மரம் விழுந்து முளைக்கக் கூடிய சீவச முளைத்தல் செய்முறையை மேற்கொள்ளக் கூடிய விசேட வகை முளைத்தலை ஏற்படுத்தி தனது இனத்தை பெருக்கிக் கொள்ளும்.

தாம் வாழும் சதுப்புநீரில் ஒட்சிசனின் அளவு குறைவாக இருக்கும் போது வேரினை புவியீர்ப்பிற்கு எதிராக மூச்சு வேர்களை தோற்றுவித்து மேல்நோக்கி திருப்பி வளிமண்டல ஒட்சிசனைப் பெற்று தாவர வளர்ச்சிக்கு உதவி புரியும்.

ஆதிகால மனிதன் சூழல் தொகுதிற்கு எந்தவிதமான தீங்கையும் விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப் பெற்று வந்தான். ஆனால் நவீன காலத்தில் வாழும் மனிதர்கள் பலவிதமான தீங்குகளை இச்சூழல் தொகுதிக்கு செய்து கொண்டே நன்மைகளைப் பெற்று வருகின்றார்கள்.

இக்கண்டல் தாவரங்களின் இளம் தளிர்கள் கரையோர மக்களினால் பெருமளவில் உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

கண்டல் தாவரங்களின் தண்டுகள் கட்டட பாவனைக்கு தடியாகவும், றைசோபோறா, அவீசீனியா, புறூகைறா போன்றவற்றிலிருந்து பெறப்படும் வெட்டுமரங்கள் படகு கட்டவும், மீன்பிடி உபகரணங்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உறிஞ்சக் கூடியனவாக இருப்பதனால் தாம் வாழும் நீர்ச்சூழலில் மாசுபடுத்தலை குறைக்கின்றன.கண்டல் காடுகள் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகலிடமாகவும் இருக்கின்றது.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்டல் தாவரங்களையும் அதன் சூழலையும் பார்வையிடுவதற்காக பெருமளவு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இந்த பிரதேசத்திற்கு பொழுது போக்கிற்காக வருகை தருகின்றார்கள்

இலங்கையை பொறுத்தளவில் 8800 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் வாயுவை குறைப்பதிலும், சூழலில் அதன் தாக்கத்தை குறைப்பதிலும் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றன.

இவ்வாறாக இயற்கை சூழல் சுழற்சிக்கு பங்களிப்பு செய்யும் கண்டல் தாவர சாதியத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உரித்தானது.

 

எம்.ஐ.எம்.அஸ்ஹர்

Web Design by Srilanka Muslims Web Team