கிழக்கில் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்டெடுக்க ஒரு கலந்துரையாடல் ! - Sri Lanka Muslim

கிழக்கில் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்டெடுக்க ஒரு கலந்துரையாடல் !

Contributors

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தியாளர்களின் கால் நடைக்கான மேய்ச்சல் தரை மற்றும் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்டெடுத்தல் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி,கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.

இவ் அமர்வில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலப்பதி, மற்றும் கிழக்குமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், அமைச்சு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளும் அத்துடன் பாதிக்கப்பட்ட பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டத்திலும் உள்ள காணி பிரச்சனைகளை அம்மாவட்டங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மூலமாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் முன்னிலையில் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் 30 வருட கால யுத்தத்தின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட இடர்பாடுகளினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலைக்குள்ளாகினோம். இருந்தபோதிலும் பல தீர்வுகளை கண்டு வருகிறோம்.

தற்போது யுத்த நிலைக்கு தீர்வு காணப்பட்டு நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டு ஐந்து வருடங்களாகிய நிலையில் நாங்கள் இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் இதற்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளுக்கமைய ஒன்று கூடப்பட்ட இந்நிகழ்வில் மக்களின் பிரச்சனையை இன, மத, மொழி வேறுபாடுகளின்றி உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுக்கும் முயற்சியினை மேலும் முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி சமாதான சூழலோடு வாழ்வதற்கு உரிய சகல நடவடிக்கைகளையும் செய்து தருவதாகவும் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.lm

Web Design by Srilanka Muslims Web Team