கிழக்கில் நீரில் மூழ்கி இறப்போரின் தொகை அதிகரிப்பு! - Sri Lanka Muslim

கிழக்கில் நீரில் மூழ்கி இறப்போரின் தொகை அதிகரிப்பு!

Contributors

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சமீப காலமாக நீரில் மூழ்கி இறப்போரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது.

ஆறு , குளம் , நீச்சல்தடாகம் மற்றும் கடலில் மூழ்கி இறப்போரில் இளைஞர்களின் தொகையும் சிறுவர்களின் தொகையும் அதிகமாகவே காணப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நீரில் மூழ்தலுடன் தொடர்புடைய இறப்புகள் மற்றும் நீர்ப்பாதுகாப்பின் தேவை போன்றவற்றின் அடிப்படையிலான அறிக்கையின்படி சர்வதேச அளவில் இலங்கையில் நீரில் மூழ்கி இறப்போரின் தொகை அதிகமாகவே காணப்படுகின்றது.

மது அருந்திக் கொண்டு நீர்நிலைகளில் நீராடச் செல்வது , எச்சரிக்கை அறிவித்தல்கள் அபாயகரமான பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தும் நிலைமையே காணப்படுகின்றது. மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்குவதற்காக ஆறுகள் , நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடலில் விடுமுறை நாட்களில் அதிகமானோர் ஒன்றுகூடுவது வழமையானது.இதனால் தமது பாதுகாப்பை எவரும் ஒரு பொருட்டாக கவனத்திற் கொள்ளாமையே இவ்வாறான விபரீதங்களுக்கு பிரதானமான காரணமாக அமைகின்றது.

இலங்கையில் அதிகமான கடற்கரை பிரதேசங்கள் காணப்பட்டாலும் அவை யாவும் மக்கள் நீராடுவதற்கு உகந்தைவையாக இருப்பதில்லை.இருந்தும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி, உப்புவெளி, அரிசிக்கடல், பளிங்குக்கடல், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை போன்ற அழகான பாதுகாப்பான கடற்கரைகள் நீராடுவதற்கு காணப்படுகின்றன.

நீர் வளத்தை பாதுகாப்பது மட்டும் மனிதர்களுடைய கடமையல்ல. அந்த நீர் வளத்தை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் கையாள்வது என்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நீச்சல் மற்றும் நீராடுவதற்கு பொருத்தமற்ற மற்றும் அபாயகரமான பகுதிகளை இனங்கண்டு அவற்றை அடையாளப்படுத்த வேண்டிய அவசரத் தேவை தற்போது எழுந்துள்ளது.

வெளிப்பிரதேசங்களில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுலா வரும் இளைஞர்கள் குழு மற்றும் குடும்பத்தினர் தாம் நீராடும் இடங்களை அப்பிரதேசத்திலுள்ள மக்களிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். தமக்கு பரிச்சயம் இல்லாத இடங்களில் நீர்நிலைகளின் ஆழம், கடல்அலையின் வேகம், கடல்கொந்தளிப்பு, காலநிலை அவதான நிலையம் விடுத்திருக்கும் அறிவித்தல்களை அறிந்திராமையும் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு காரணமாக அமைகின்றது.

சில சந்தர்ப்பங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழக்கும் சந்தர்பங்களையும் நாம் அறிந்துள்ளோம். ஒரு குடும்பத்தில் பலர் உயிரிழப்பதால் அந்தக் குடும்பம் அனுபவிக்கும் துன்பங்களை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. குளங்களில் மற்றும் நீர்வீழ்ச்சியில் நீராடும் போது அதன் மேற்பகுதியில் அதிக மழை பெய்யும் வேளையில் அல்லது வான்கதவுகள் திறக்கும் வேளையில் தீடீரென்று நீர்மட்டம் அதிகரிக்கக் கூடும். அந்த வேளையிலும் திடீர் அனத்தம் ஏற்பட்டு உயிரிழந்தவர்களும் உள்ளனர்.

நீராடும் போது பல பேர் ஒரேயடியாக கைகோர்த்துக் கொண்டு நீரில் இறங்குவதாலும், ஒருவர் நீரில் மூழ்கும் போது மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற செல்வதாலும் அதிகமான இழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் போது உதவிக்குச் செல்வோரும் நீரின் உள்ளே இழுபட்டு செல்லும் நிலையும் ஏற்படும்.

அத்தோடு நீராடும் போது விளையாட்டாக நீருக்குள் தள்ளிவிடுதல், அமிழ்த்துதல், நீர்நிலைகளுக்கு அருகாமையில் கையடக்க தொலைபேசியில் செல்பி எடுத்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் நீராடும் போது மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை பாவிப்பதனை தவிர்க்க வேண்டும்.

எனவே நீச்சலின் போதும் ஏனைய நீர் விளையாட்டுகளின் போதும் பாதுகாப்பான உயிர்காப்பு உடைகளை அணிந்து கொள்வது அவசியமாகும். பெரும்பாலானோர் அபாயகரமாக பகுதிகள் என அறிந்திருந்தும் ஆறு குளங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற இடங்களுக்கு நீராடச் செல்வதால் ஒருசில நிமிடங்களில் தமது வாழ்வை இழக்க வேண்டிய பரிதாபம் ஏற்படுகின்றது.

 

எம்.ஐ.எம். அஸ்ஹர்

Web Design by Srilanka Muslims Web Team