கிழக்கு மாகாண சில அரசதுறைகளில் நடைபெறும் ஊழல் மோசடிகள் - ஏ.எம்.ஜெமீல் - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண சில அரசதுறைகளில் நடைபெறும் ஊழல் மோசடிகள் – ஏ.எம்.ஜெமீல்

Contributors

 

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிகார மூர்க்கத்துடன் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் குற்றம் சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார, கூட்டுறவுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்ற இவ்விவாதத்தில் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது;

“எமது கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார, கூட்டுறவுத்துறை அமைச்சர் மன்சூர் இந்த அமைச்சு மூலம் நமது மாகாணத்திற்கும் மக்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றார்.

கூட்டுறவுத்துறையில் பாரிய ஊழல், மோசடி!

அதேவேளை எமது மாகாணத்தின் கூட்டுறவுத்துறை ஊழல், மோசடிகள் நிறைந்து- மிகவும் பின்னடைவான நிலைக்கு சென்றுள்ளது. பெரும்பாலான பிரதேச கூட்டுறவுச் சங்கங்கள், அவற்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்தாக- அவர்களது சுயநலன்களுக்காக  பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இக்கூட்டுறவுச் சங்கங்கள் மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்துள்ளதுடன் ஊழல், மோசடிகள் தாண்டவமாடும் குகைகளாக மாறியுள்ளன.

இந்த நிலையை உடனடியாக மாற்றியமைப்பது மிகவும் அவசியமாகும். கூட்டுறவுச் சங்கங்கள் வெளிப்படைத் தன்மையுடனும் மக்கள் பங்களிப்புடனும் இயங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

கூட்டுறவுத் துறையை ஊழல் மோசடிகளில் இருந்து விடுவித்து- செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைத்து பொது மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக கட்டியெழுப்புவதற்காக மாகாண கூட்டுறவு அதிகார சபை ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேவேளை மாகாண சுகாதாரத் துறை சிறப்பான நிலையில் இருக்கின்ற போதிலும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இப்பகுதி வைத்தியசாலைகள் விடயத்தில் தான் விரும்பியவாறு அடாவடித்தனமான தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றார்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு இந்த வருடம் என்னால் ஒதுக்கப்பட்ட நிதியை கூட நான் கூறிய வேலைத் திட்டத்திற்கு பயன்படுத்தாமல் அவர் விரும்பியவாறு செலவு செய்துள்ளார். கடந்த வருடமும் அவர் இவ்வாறே தன்னிச்சையாக வேலைத் திட்டத்தை மாற்றியமைத்தார்.

இது குறித்து அவருடன் எனது செயலாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி செய்வதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மிக மோசமான செயற்பாடாகும்.

சாய்ந்தமருது வைத்தியசாலை சத்திர சிகிச்சை உபகரணங்கள் எங்கே?

சுனாமியால் அழிவடைந்து- மீள் கட்டுமானம் செய்யப்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்குரிய மிகப் பெறுமதி வாய்ந்த சத்திர சிகிச்சை உபகரணங்களைக் கூட இந்தப் பணிப்பாளர் எவருக்கும் தெரியாமல் வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார் என்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

வைத்தியசாலை அபிவிருத்தி சபை எம்மிடம் முன் வைக்கின்ற   வேலைத் திட்டங்களுக்கே நாம் நிதி ஒதுக்கீடு செய்கின்றோம். ஆனால் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், தான் எதையும் செய்ய முடியும் என அதிகார மூர்க்கத்துடன் செயற்பட்டுக் கொண்டு எமது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

கடந்த மாகாண சபையில் அப்போது உறுப்பினராக இருந்த ஒருவர் iகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாலரைக் கண்டித்து- இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பிரேரணை கொண்டு வந்த போது நானே முன்னின்று அவரைக் காப்பாற்றினேன்.

ஏனெனில் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதனால் ஆகும். ஆனால் அவர் தான்தோன்றித்தனமாக நடப்பதை மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. விரைவில் அவர் ஓய்வுபெற்றுச் செல்கிறார் என்பதற்காக எதையும் செய்து விட்டுப் போகலாம் என நினைக்கக் கூடாது.

இவரது இந்த செயற்பாடு குறித்து மாகாண சுகாதார அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன். அதிகாரிகள் ஒருபோதும் அரசியல் வாதிகள் போன்று செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முற்பட்டால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உயர் அதிகாரிகள் எப்போதும் மக்கள் சேவைக்காக- மனிதாபிமானத்துடன்- விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்  அப்போதுதான் அரசாங்கமும் மக்களும் எதிர்பார்க்கின்ற அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்தக் கோட்பாட்டை மீறும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களை இடமாற்றம் செய்து தண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை இந்த உயர் சபையில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று ஜெமீல் குறிப்பிட்டார்.

 

Web Design by Srilanka Muslims Web Team