குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தாவரங்களுடன் துபாயில் பிரமாண்ட பூங்கா - Sri Lanka Muslim

குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தாவரங்களுடன் துபாயில் பிரமாண்ட பூங்கா

Contributors

q97

இஸ்லாமியர்களின் புனித  குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதங்களை எல்லாம் முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடிய விதத்தில் புனித  குர்ஆனில் வரும் 54 வகையான தாவரங்களில் 51 வகைகளைக் கொண்ட ஒரு மாதிரி பூங்காவை துபாய் அரசு உருவாக்கி வருகின்றது.

 

கடந்த 2013 ஆம் ஆண்டின் துவக்கத்தில் துபாய் நகராட்சியின் தொழில்நுட்பக் குழுவின் ஆயிரமாவது கூட்டம் நடைபெற்றபோது 7 மில்லியன் அமெரிக்க டாலர் திட்ட மதிப்பீட்டுடன் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த குர்ஆன் பூங்கா, 158 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது.

 

பூங்காவின் முதல் கட்டத்தில் கட்டுமானக் கழிவுகளையும், மறுமுறை பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்ட கழிவுப் பொருட்களையும் கொண்டு நிலத்தை சமப்படுத்தியதன் மூலம் திட்ட மதிப்பீடான 7 மில்லியன் அமெரிக்க டாலரில் 3.2 மில்லியன் டாலர் தொகை சேமிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டாவது கட்டத்தில் 32 ஹெக்டேர் நிலப்பரப்பில் தாவரங்கள் பயிரிடப்பட்டு மற்ற வசதிகளும் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தாவரங்களில் 15 வகைகளுக்காக கண்ணாடி அறை ஒன்றும் இதில் கட்டப்பட்டுள்ளது. மற்ற தாவரங்கள் பல்வேறு தோட்டங்களாகப் பயிரிடப்பட்டுள்ளன.

 

தற்போது இறுதிக் கட்டமான மூன்றாவது கட்டப் பிரிவின் பணி நடைபெற்று வருகின்றது. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் அத்தி, மாதுளை, ஆலிவ், சோளம், அல்லி மலர் இனத்தைச் சார்ந்த செடி வகை, பூண்டு, வெங்காயம், பருப்பு, பார்லி, கோதுமை, இஞ்சி, பூசணி, தர்பூசணி, புளி, திராட்சை, வாழை, வெள்ளரி, துளசி உள்ளிட்ட 54 வகைகள் உள்ளன.

 

இவற்றில் 31 வகை தாவரங்கள் இந்தப் பூங்காவில் பயிரிடப்பட்டுள்ளன. குர்ஆனில் குறிப்பிட்டுள்ளவற்றில் மூன்று மட்டும் தற்போது பூமியில் இல்லை. அவை தவிர மீதி 20 வகை தாவரங்களும் மூன்றாவது கட்டத்தில் பயிரிடப்படும் என்று அந்நாட்டின் பொது திட்டங்கள் துறையின் இயக்குநர் முகமது நூர் மஷ்ரூம் தெரிவித்துள்ளார்.

 

இந்தப் பூங்காவில் குளிரூட்டப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு அதில் புனித நூலில் வரும் கதைகளும், அற்புதங்களும் காட்டப்பட உள்ளன. மேலும் இந்தப் பூங்காவின் மத்தியில் கண்கவர் மரங்கள் மற்றும் மணற்பரப்புடன் அமைந்துள்ள ஏரியானது பாலைவனச்சோலை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மஷ்ரூம் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team