குழந்தைத் தொழிலாளர்கள்: அதிர்ச்சி தரும் ஐ.நா. அறிக்கை! - Sri Lanka Muslim

குழந்தைத் தொழிலாளர்கள்: அதிர்ச்சி தரும் ஐ.நா. அறிக்கை!

Contributors

ch-270x170

chi

(நெல்லை சலீம்)

“என்னைப் போன்ற சிறுவர்களை விட்டு விடுங்கள். படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்” – இந்த வரிகள் நம்முடைய இதயங்களை கொள்ளை கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும். இப்பொழுது இந்த வரிகள் சிறுவர்களின் வாய்களிலிருந்து வருகிறது.

சமீபத்தில் வெளிவந்துள்ள ஐ.நா.வின் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான அறிக்கை அதிர்ச்சியை அளிக்கிறது.

உலகில் 16.8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஐ.நா. அதிர்ச்சி தரும் தகவல் வெளியிட்டுள்ளது. சிறார்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களுக்கு வருமானம் என்பது நிறுவனங்களுக்கு ஒரு பெரிய பொருட்டாகவே இருக்காது.

குழந்தைத் தொழிலாளர்கள் நாட்டில் பல்வேறு தரப்பிலும் இருக்கின்றார்கள். குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வறுமை, பெற்றோர் இன்மை, கலவரங்களினால் பாதிக்கப்படுதல் என்று குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதின் காரணங்கள் அதிகமாகும்.

அதுமட்டுமல்லாமல், நிறுவனங்கள் தங்களுடைய பொருளாதார பலத்தின் மூலம், சிறுவர்களை விலைக்கு வாங்கி கொள்கின்றனர். இது பெரும் முதலைகளால் விலைக்கு வாங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜுன்  12 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை எப்படி ஒழிப்பது, பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், கல்வி சம்பந்தமான ஆர்வத்தை அவர்களுக்கு எவ்வாறு ஊட்ட வேண்டும் போன்ற கருத்தரங்குகள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு என்பது கனவாகவே உள்ளது. சிறு கடைகள், ஹோட்டல்கள், மேன்ஷன்கள் போன்றவற்றிலிருந்துதான் குழந்தைகளை பணியிலிருந்து நிறுத்த முடியும். ஆனால், பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து அவர்களை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

கண்ணாடி தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரியும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், குழந்தைகள் பள்ளிக்கு செல்வது என்பது இன்றைய காலகட்டத்தில் குறைந்து கொண்டே வருகிறது. உலகில் 11 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. சர்வதேச அளவில் இப்போது 16 கோடியே 80 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

2000ம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து  உள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வேகமாகக் குறையவில்லை. 2000ம் ஆண்டில் சர்வதேச அளவில் 24 கோடியே 60 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். இப்போது, 16 கோடியே 80 லட்சமாகக் குறைந்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சர்வதேச மாநாடு பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடலுக்கும் உயிருக்கம் ஊறு விளைவிக்கும் பணிகளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதும், சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதும் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2000ம் ஆண்டில் 17 கோடியே 10 லட்சமாக இருந்தது. இப்போது 8 கோடியே 80 லட்சமாக குறைந்துவிட்டது.

உலகில் உள்ள குழந்தைகளில் 11 சதவீதம் பேர் இப்போதும் பள்ளிக்கு அனுப்பப்படõமல் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது கவலை தரும் விஷயம். சுரங்கப் பணி, கட்டுமானம், பட்டாசுகள் தயாரிப்பு, செங்கல் சூளை போன்றவற்றில் இவர்கள் வேலை செய்கின்றனர்.

இதுபோன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் குழந்தைகள் நீண்ட நேரம் தங்களுடைய உடலை வருத்தி வேலை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு கூலி என்பது மிகவும் குறைவாகவே கிடைக்கின்றது. ஆனால், பெரு நிறுவனங்களுக்கு இது நல்ல இலாபத்தை ஈட்டுத் தருகின்றது.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற விஷயத்தில் கவனமாக செயல்பட்டு, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க பாடுபட வேண்டும்.

 

Web Design by Srilanka Muslims Web Team