
கூடங்குள அணுக்கதிர் கசிவு இலங்கையை பாதிக்காது
தமிழ் நாடு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் கசிவு ஏற்படுமாயின் அது இலங்கையை பாதிக்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே கேட்ட வாய்மொழி மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேள்வியை கேட்ட அனோமா கமகே நேற்று சபையில் இல்லாததால் அமைச்சர் சம்பிக்க பதிலை சபையில் சமர்ப்பித்தார். தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சர் சம்பிக்க சமர்ப்பித்த விடையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கதிரியக்கத் தாக்கமானது பல காரணிகளை கொண்டுள்ளது. அவையாவன,
1. அனர்த்தம் ஏற்பட்ட இடத்திலிருந்து இலங்கையுள்ள தூரம்
2. சூழலிற்கு விடுவிக்கப்பட்ட கதிர்த் தொழிற்பாட்டுடைய பதார்த்தங்களின் அளவு
3. வளிமண்டலத்திற்கு கதிர் தொழிற்பாட்டுடைய பதார்த்தங்கள் விடுவிக்கப்படின் இலங்கையை நோக்கியதாய் காற்றின் திசையும் வேகமும்
4. மழை பெய்யுமா இல்லையா
5. சமுத்திரத்திற்கு விடுவிப்பு செய்யப்படும் கதிர்த் தொழிற்பாட்டுடைய பதார்த்தங்களின் அளவு.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கதிரியல் ஒழுகல் ஏற்படின் அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அளவினை அறிந்துகொள்வதற்கு இலங்கையானது, சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்து டனும் மற்றும் இந்த அணு சக்தி ஒழுங்கு விதிகள் சபையுடனும் தொடர்பு கொண்டு இது தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் மேற் கூறப்படும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும் அதேநேரத்தில், கதிரியல் வீச்சால் தாக்கப்பட்டதாக அனுமானிக்கப்படும் இடங்கள் எந்தளவு தூரத்திற்கு மாசடைந்துள்ளது என்பதை கணிப்பதற்கு அந்தப் பிரதேசங்களின் கதிரியல் மட்ட அளவானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் கூட்டிணைந்து அளவீடு செய்யப்படும்.
2. இலங்கையை தொடர்ச்சியாக பாதிக்கக்கூடிய கரு அனர்த்தத்தை இனம் காண்பதற்கும் சூழலில் கதிர்த் தொழிற்பாட்டினை அளவீடு செய்வதற்கும் முன் எச்சரிக்கை முறைமையானது நிறுவப்பட்டதுடன், இதன் மூலம் பெறப்படுகின்ற தரவுகளாவன அணுசக்தி அதிகார சபையில் நிறுவப்பட்டுள்ள பிரதான கட்டுப்பாட்டு முறைக்கு தன்னியக்கமாகவே பரிமாற்றம் செய்யப்படும்.
கதிரியக்க அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்ட பதவியணியினரை அணுசக்தி அதிகார சபை தற்போது கொண்டுள்ளது.
இதைவிட இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய ஏனைய நிறுவகங்களைச் சேர்ந்த பதவியணியினரான இலங்கை பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கூட்டிணைப்பு அலுவலர்கள், தீயணைக்கும் படையினர், இலங்கை இராணுவத்தினர், கடல் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆ (1) சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் சட்ட ரீதியான சட்டத்தின் படி அணு மின் நிலையம் அமைக்கும் போது இலங்கைக்கு அறிவிக்க வேண்டுமென்றோ அல்லது இணக்கப் பாட்டை பெற வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தப்படத் தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.