கென்ய அணிக்கெதிராக இலங்கை 'ஏ' அணிக்கு வெற்றி - Sri Lanka Muslim

கென்ய அணிக்கெதிராக இலங்கை ‘ஏ’ அணிக்கு வெற்றி

Contributors

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கென்ய அணிக்கும், இலங்கை ‘ஏ’ அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை ‘ஏ’ அணி வெற்றிபெற்றுள்ளது.

இன்று இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள 2 போட்டிகளில் முதலாவது போட்டியிலேயே இலங்கை ‘ஏ’ அணி வெற்றிபெற்றுள்ளது.

என்.சி.சி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ‘ஏ’ அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி சார்பாக தனுஷ்க குணதிலக 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 22 பந்துகளில் 24 ஓட்டங்களையும், லஹிரு திரிமன்ன 16 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கென்ய அணி சார்பாக நெஹேமியோ ஒடியம்போ, நெல்சன் ஒடியம்போ இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹிரேன் வரய்யா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கென்ய அணி, 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை
இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய கென்ய அணியால் அதன் பின்னர் ஓட்டங்களைக் குவிக்க முடிந்திருக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் கென்ய அணி சார்பாக இர்பான் கரிம் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், கொலின்ஸ் ஒபுயா 33 பந்துகளில் 26 ஓட்டங்களையும், டங்கன் அலன் 12 பந்துகளில் 21 ஓட்டங்களையும், றகெப் அகா 18 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை ‘ஏ’ அணி சார்பாக சீக்குகே பிரசன்ன 2 விக்கெட்டுக்களையும், ஷமின்ட எரங்க, ஜீவன் மென்டிஸ், கோசல குலசேகர, றமித் றம்புக்வெல்ல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்றைய இரண்டாவது போட்டி இன்று பிற்பகலில் ஆரம்பித்து இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team