கைபேசி பற்றரிக்குள் தங்கம்; மேலும் இருவர் மடக்கிப் பிடிப்பு - Sri Lanka Muslim

கைபேசி பற்றரிக்குள் தங்கம்; மேலும் இருவர் மடக்கிப் பிடிப்பு

Contributors

விமானம் மூலம் இந்தியாவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இரு சந்தேக நபர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் பட்டறிக்கு அடியிலும் மற்றையவர் தனது பயணப் பையின் (பாக்) வயர் கம்பிகளைப் போன்றும் மறைத்தே கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் சட்டப் பணிப்பாளரும், பேச்சாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இவர்கள் இருவரிடமிருந்து மொத்தமாக 294 கிராம் எடையுள்ள 14 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கங்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்றுக் காலை 7.05 மணியளவில் சென்னை நோக்கி பயணமாக இருந்த யூ. எல். -121 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக மேற்படி இருவரும் வருகை தந்துள்ளனர்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பயணி விமானத்திற்குள் ஏறுவதற்கு முற்படும் போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ஸ்கான் கருவி இயங்கியுள்ளது. இதன் போது, குறித்த பயணியின் கையடக்கத் தொலைபேசியின் பட்டறிக்கடியில் தங்க பிஸ்கட் ஒன்றை மறைத்து வைத்துள்ளமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இவரிடமிருந்து 100 கிராம் எடையுடைய 5 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டை மீட்டெடுத்துள்ளனர். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 50ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மற்றைய நபர் தனது கைப்பையில் 4 தங்க கம்பிகளை மறைத்து கொண்டு சென்றள்ளார்.

194 கிராம் எடையுடைய 9 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க கம்பிகளை மீட்டெடுத்துள்ளனர். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இவரிடமிருந்த தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப் பட்டுள்ளது.th

Web Design by Srilanka Muslims Web Team