கொம்பனி வீதி குடியிருப்பாளர்களை 1 ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறு உத்தரவு - Sri Lanka Muslim

கொம்பனி வீதி குடியிருப்பாளர்களை 1 ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறு உத்தரவு

Contributors

கொழும்பு-02 கொம்பனி வீதி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களை நவம்பர் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கொம்பனி வீதி பகுதியிலுள்ள மியூ வீதி, ஜயா ஒழுங்கை, ஜென்னா வீதி, மலே வீதி, சந்தை ஒழுங்கை, லீச்மன் ஒழுங்கை ஆகிய இடங்களில் வாழ்கின்றவர்கள் தமது வாழிடத்தை விட்டு வெளியேற தமது சொத்துகளை நவம்பர் 1 அன்று அல்லது அதற்கு முன்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்களான கே.சிறிபவன், எஸ்.ஈ.வணசுந்தர ஆகியோர் கொண்ட நீதியரசர் குழாமே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

கொம்பனி வீதி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவும் பாதிக்கப்பட்ட வீட்டுரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யவும் உயர் நீதிமன்றம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மார்ச் மாதம் 13 ஆம் திகதி அனுமதியளித்திருந்தது.

317 பேர் வாடகை பெற்று வேறிடத்தில் வாடகைக்கு குடியமரவும் 163 பேர் நட்டஈட்டை பெற்றுக்கொண்டு தங்களுடைய உடைமைகளை விட்டுவிட்டு அறுதியாக வெளியேறவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவரப்பட்டது.

கொம்பனி வீதி குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டு தெரிவுகளை அன்று வழங்கியிருந்தது.

இந்நிலையிலேயே வாடகை  குடியிருப்பாளர்களுடன் ஒப்பந்தத்தை செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உயர்நீதிமன்றம் அன்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.(tm)

Web Design by Srilanka Muslims Web Team