கொழும்பு போர்ட் சிட்டி அறிமுகப்படுத்தியுள்ள அபிவிருத்திக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள்! - Sri Lanka Muslim

கொழும்பு போர்ட் சிட்டி அறிமுகப்படுத்தியுள்ள அபிவிருத்திக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள்!

Contributors

போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது விசாலமான நகர அபிவிருத்தி ஒழுங்குமுறையான அபிவிருத்திக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் (DEVELOPMENT CONTROL REGULATIONS) சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், தற்போது அந்த ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. DCR பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு துறைமுக நகரத்தில் 09.06.2022 அன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது.

DCR ஆனது, CHEC Port City Colombo என்ற திட்ட நிறுவனத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய நகர்ப்புற, தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Surbana Jurong இனால், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முக்கிய பொறியியல் ஆலோசனை நிறுவனமான Atkins உடைய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

DCR ஆனது சுவீடனை தளமாகக் கொண்ட திட்டமிடல் ஆலோசகரான SWECO இனால் வடிவமைக்கப்பட்ட Port City master plan இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர், இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அது தொடர்பான அரச நிறுவனங்களால் DCR மேலதிக மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரியத் பந்து விக்கிரம நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், இலங்கையின் ஏனைய நகர அபிவிருத்திகளுக்கு ஒரு அளவுகோலாக இருக்கக் கூடிய DCR ஐ அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கினார். கொழும்பு துறைமுக நகரத்துக்குள் DCR ஐ நடைமுறைப்படுத்துவதில் மற்றைய அரசு பங்குதாரர் நிறுவனங்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்தும் கலாநிதி விக்கிரம விளக்கினார்.

கரையோரப் பாதுகாப்பு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ரணவக்க, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தேமிய சமந்த, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் / பணிப்பாளர் நாயகம் L.V.S. வீரக்கோன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், லலித் விஜேரத்ன மற்றும் தீயணைப்புத் திணைக்களத்தின் பிரதான தீயணைப்பு அதிகாரி PDKA வில்சன், தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி சிந்தக ரத்னசிறி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய ரத்நாயக்க, மத்திய சுற்றாடல் முகாமைத்துவ மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் N.S கமகே, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சட்டப் பணிப்பாளர், மஞ்சுள விமலசேன, CHEC port city நகர திட்டமிடல் முகாமையாளர் அருண பண்டார மற்றும் CHEC port city இன் ஆலோசகர் WADD விஜேசூரிய ஆகியோரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொழும்பு துறைமுக நகரத்துக்கான அபிவிருத்திக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அபிவிருத்தியாளர்கள், குடியிருப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகம் உட்பட ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக நகரத்தின் அடுக்குகளில் கட்டடங்களின் வளர்ச்சி வேகம், அமைப்பு மற்றும் உயரம் ஆகியவற்றை DCR ஒழுங்குபடுத்தும். தர்க்கரீதியான மற்றும் முறையான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இது ஒரு பயனுள்ள திட்டமிடல் கருவியாக செயற்படும். DCR ஆனது நில உரிமையாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கு நகரத்தில் உள்ள எந்தவொரு குறிப்பிட்ட நிலத்திலும் என்ன அமைக்கலாம் என்பது பற்றிய தெளிவான படிமத்தை வழங்குகிறது.

Web Design by Srilanka Muslims Web Team