“கோட்ட கோ கம” கூடாரங்கள் அகற்றப்படமாட்டாது' - சட்டமா அதிபர் உறுதி! - Sri Lanka Muslim

“கோட்ட கோ கம” கூடாரங்கள் அகற்றப்படமாட்டாது’ – சட்டமா அதிபர் உறுதி!

Contributors

ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை, கொழும்பு – காலிமுகத்திடல் “கோட்ட கோ கம”வில் உள்ள தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், குறித்த கூடாரங்கள் அகற்றப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு தேவையான ஆலோசனைகளை விரைவில் வழங்குவதாகவும், சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோத கூடாரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்களத்திலிருந்து சுயவிருப்பின் பேரில் வௌியேற விரும்பும் நபர்களுக்கு, இந்த இணக்கப்பாட்டினால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து இன்று மாலை 05 மணிக்கு முன்னர் வௌியேற வேண்டும் என பொலிஸாரால் விடுக்கப்பட்ட பணிப்புரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (௦5) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் இந்த உறுதியுரை வழங்கப்பட்டது.

காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் இன்று (05) மாலை, 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு, கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், போராட்டக்கள பகுதிக்கு நேற்றைய தினமும் சென்றிருந்த பொலிஸார் குறித்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர். இதேவேளை, மீண்டும் இன்றைய தினமும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இதற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team