"கோப் 27" மாநாடு உயிரிகளுக்கு உகந்த சுற்றாடலை உண்டாக்குமா?  - Sri Lanka Muslim

“கோப் 27” மாநாடு உயிரிகளுக்கு உகந்த சுற்றாடலை உண்டாக்குமா? 

Contributors

உயிரிகளின் உயிர் வாழ்வுக்கு எகிப்துக் காலநிலை மாநாடு எந்தளவு உத்தரவாதமளிக்கும்? கோடிக் கணக்கில் பணம் கொட்டப்பட்டு நடாத்தப்படும் எகிப்து “கோப் 27” காலநிலை மாநாடு, இம்முறை நூறு பக்கங்களையுடைய அறிக்கையை அவைக்கு சமர்ப்பிர்த்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் வருடமொன்றுக்கு இரண்டு ட்ரில்லியன் டொலரைச் செலவிடாவிடின், பூமி எம்மை வாழவிடாது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. இல்லாவிடின் 2030க்குப் பின்னர் இத்தொகை இன்னும் அதிகரிக்குமாம்.

இந்தளவு நிதியை செல்வந்த நாடுகள்தான் வழங்க வேண்டும். முதலீட்டாளர்கள் இன்னும் பல்துறை அபிவிருத்தி வங்கிகளும் இதில் பங்களிக்கலாம். இத்தனைக்கும் இந்தக் கணிப்பில் சீனாவின் செயற்பாடுகள் உள்வாங்கப்படவில்லை.

புதிய தொழில்நுட்ப மோகத்தில் விண்வௌியில் வாழ ஆசைப்படும் சீனா, குரங்கு மற்றும் பல்லி உள்ளிட்ட உயிரிகளை அனுப்பி சுவாசிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்கிறது. இதுவே, இப்படியென்றால் பூமியில் சீனா எதைச் சாதிக்காமல் விடும்? இந்த மாற்றங்கள்தான் காலநிலையை சீரழித்து பூமியை வெப்பமடையச் செய்கிறது. இந்த வெப்பம் அதிகரித்தால் ஓசோன் படலத்தில் மேலும் ஓட்டை விரிந்து, நாம் வாழ முடியாத நிலை ஏற்படும்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெப்பநிலையில் இரண்டு பாகை செல்சியசையாவது குறைக்க வேண்டும் என்கிறது கோப் 27 அறிக்கை. இதற்காக வருடாந்தம் இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டொலரைச் செலவு செய்ய வேண்டுமாம். இரண்டு பாகை செல்சியசை குறைக்கும் காரியம் சாத்தியமில்லை என்பதால், 1.5 பாகையையாவது குறைக்கும் முயற்சியில் எகிப்து காலநிலை மாநாடு கவனம் செலுத்தியுள்ளது.

மனித செயற்பாடுகள் மட்டும்தான் காலநிலையை சவாலுக்கு உட்படுத்தவில்லை. இயற்கைத் தாண்டவமும் இதில் பிரதானமானதே! சூறாவளி, வௌ்ளம், சுனாமி, காட்டுத் தீ, பனிப்பாறை உருகுதல் மற்றும் எரிமலை வெடிப்புக்களும் இயற்கை தாண்டவம்தான். மனித சக்தியால்,l இவற்றை முற்றாகக் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், முடியுமான வரை முயன்று மட்டுப்படுத்த முடியும். இதுவும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே சாத்தியம். வறிய இன்னும் வளரும் நாடுகளுக்கு இவ்விடயம் சாத்தியமே இல்லை. இதற்காகவே, வருடாந்தம் தேவைப்படும் இரண்டு ட்ரில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

பிரதானமாக மனித அறிவால் உண்டாக்கப்படும் இயற்கை அழிவுகளை இல்லாதொழிக்க வழிகள் செய்யப்படல் அவசியம். வளர்ச்சியடை ந்த நாடுகளுக்கிடையில் நிலவும் கட்டுப்பாடற்ற தொழில் மயமாதல்தான் காலநிலையை மாற்றி, சுற்றாடலை சுருங்கச் செய்வதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் உரையாற்றினார். இதனால், பாதிக்கப்படும் வறிய, வளரும் நாடுகளுக்கு ஆக்கக் காரணிகள்தான் கை கொடுக்க வேண்டும் என்பதும் அவரது நிலைப்பாடு.

தனது தேவைகளுக்கு ஏற்ப இயற்கையை வளைத்தெடுக்குமளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் விஞ்சியுள்ள யுகமிது. ஆனால், பனிப்பாறைகள் உருகுதல், நிலச்சரிவு, சூறாவளி, காட்டுத் தீ, எரிமலை வெடிப்பு மற்றும் வௌ்ளம் போன்ற இயற்கையின் சில சீற்றங்கள், விஞ்ஞான வியூகத்துக்கு கட்டுப்படுவதாக இல்லை. இதனால், ஏற்படும் அழிவுகளை வளர்ந்த நாடுகள் ஈடு செய்யும். வளரும் நாடுகளும் வறிய நாடுகளும்தான் ஈடு செய்ய இயலாதுள்ளன.

எனவே, இயற்கை அழிவுகளை முன்கூட்டி அறியும் நவீன வசதிகள் இந்நாடுகளில் ஏற்பாடு செய்யப்படல் அவசியம். பெரும்பாலும், மனிதனை மட்டும் மையப்படுத்தியே காலநிலை மாநாடு நடைபெறுகிறது. ஊர்வன, பறப்பன, உலவித்திரிவனவை பற்றி யார் சிந்திப்பது?காட்டுத் தீயால் இவ்வகை உயிரிகளில் எத்தனை மாண்டிருக்கும். புயல், வௌ்ளம் உள்ளிட்ட சீற்றங்களில் குஞ்சுகள் மற்றும் பிஞ்சுகள் என எத்தனை செத்து மடிந்திருக்கும். இதிலுள்ள இரட்டிப்புக் கவலை இயற்கையால் மட்டுமன்றி மனித செயற்பாடுகளாலும் இவை மடிய மற்றும் மாள நேரிடுவதுதான்.

எனவே, காடுகளை அழிப்பது, கட்டடங்களை உடைப்பது என்றில்லாமல், காடுகளை வளர்ப்பது, நவீன தொழில்மயமாதலை தவிர்ப்பது என்பவற்றை கடைப்பிடித்தாவது, நமது சூழலை நாம் இயன்றவரை பாதுகாக்க வேண்டும்.

 

சுஐப் எம். காசிம்

Web Design by Srilanka Muslims Web Team