கோர பேருந்து விபத்து: பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல் - Sri Lanka Muslim

கோர பேருந்து விபத்து: பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்

Contributors

ஆந்திராவில் சொகுசுப் பேருந்து எரிந்த விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
பெங்களூரில் இருந்து சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பலியான 45 பயணிகளில் 35 பேர் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களில் 28 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். 7 பேர் ஆந்திராவையும், ஒருவர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்.

பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் யாதவ் (45) என்பவரும் அவருடைய தங்கை அனிதா (38) ஆகிய இருவரும் இந்த விபத்தில் பலியானார்கள். பெங்களூர் கலாசிபாளையம் கோட்டே பகுதியில் வெங்கடேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

வெங்கடேஷ், மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடிகரும், மத்திய மந்திரியுமான சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள். மேலும் அகில கர்நாடக சிரஞ்சீவி ரசிகர் நலச்சங்கத்தின் தலைவராகவும் வெங்கடேஷ் இருந்து வந்தார். வெங்கடேஷின் சகோதரி அனிதாவும் சிரஞ்சீவியின் ரசிகை ஆவார்.

அனிதாவின் மூத்த மகளான அனுஜா பொறியியல் படித்து முடித்து விட்டார். அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சிரஞ்சீவிக்கும், ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கும் அனுஜாவின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெங்கடேஷும், அனிதாவும் அந்த பேருந்தில் பயணம் செய்து பலியாகி விட்டனர்.

தகவல் அறிந்ததும், அவர்களுடைய குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் தனி நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகளான பிரியங்கா என்பவரும் பலியானார். விபத்தில் பலியானவர்களில் 35 பேர் பற்றிய விவரம் தெரிந்தாலும், நேற்று மாலை வரை 4 பேருடைய உடல்கள் மட்டுமே அடையாளம் காண முடிந்தது. மற்ற உடல்கள், மரபணு பரிசோதனைக்கு பின்னர்தான் அடையாளம் காண முடியும் என்று தெரியவந்துள்ளது.

பேருந்தில் ஓட்டுனர், கிளீனர் தவிர 43 பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல முடியும். ஆனால் இரு ஊழியர்களுடன் மொத்தம் 52 பேர் அந்த பேருந்தில் ஏற்றப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

31s21.

Web Design by Srilanka Muslims Web Team