க.பொ.த. (சா/த) பரீட்சையில் Spoken English கட்டாயம்! - Sri Lanka Muslim

க.பொ.த. (சா/த) பரீட்சையில் Spoken English கட்டாயம்!

Contributors

* 20 புள்ளிகள் வழங்க கல்வியமைச்சு தீர்மானம்
* பேச்சாற்றலை ஊக்குவிக்க திட்டம்

மாணவர்களிடையே ஆங்கில மொழி பேச்சாற்றலை அதிகரிக்கச் செய்யும் வகையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி பேச்சுக்காக 20 புள்ளிகளை வழங்குவதென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எழுத்துமூல பரீட்சைக்கு மேலதிகமாக ஆங்கில மொழி பேச்சு Spoken English  பரீட்சையும் வைக்கப்பட்டு 20 புள்ளிகள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இப் புதிய நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆங்கில மொழியில் சித்திபெற்றிருந்தாலும் அநேகமானோருக்கு ஆங்கில மொழியில் பேசுவதற்கு முடியாமல் உள்ளது. ஆங்கில மொழியில் சரளமாக பேசுவதற்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கிலேயே இந்நடைமுறை கொண்டுவரப்படவுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்தார்.

அத்துடன் ஆங்கில மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தை அதிகரிக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆங்கில மொழியை கற்பிக்க 22,000 ஆசிரியர்கள் உள்ள போதும் இவர்களில் அநேகமானோருக்கு ஆங்கிலத்தை பேசுவதற்கோ உரையாடுவதற்கோ முடியாது. ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் 1000 உள்ள போதும் 200 பேரே விண்ணப்பித்திருந்தனர்.

நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு 160 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டாலும் 52 பேர் மட்டுமே கடமைக்கு வந்தனர். ஆங்கில மொழியில் தரமான ஆசிரியர்கள் உருவாக்குதல் எளிதான விடயமல்ல என்றும் பிரதி அமைச்சர் கிரேரு தெரிவித்தார்.

-Thinakaran

Web Design by Srilanka Muslims Web Team