சகோதரர் ரிஷாத் பதியுத்தீன் மீதான அரச அடக்குமுறை இலங்கை வரலாற்றில் எவர் மீதும் இல்லாத அளவு கட்டுக்கடங்காமல் தொடர்கின்றது..! » Sri Lanka Muslim

சகோதரர் ரிஷாத் பதியுத்தீன் மீதான அரச அடக்குமுறை இலங்கை வரலாற்றில் எவர் மீதும் இல்லாத அளவு கட்டுக்கடங்காமல் தொடர்கின்றது..!

Contributors
author image

Editorial Team

ஈஸ்தர் தாக்குதலுக்கு பதிலாக ரிஷாத் பதியுத்தீனின் உயிரை பலி எடுப்பதில் வெறி பிடித்தவராக அதி வணக்கத்துக்குரியவர் இருப்பதே ரிஷாத் மீதான அடக்கு முறைக்கும் கெடுபிடிகளுக்கும் பிரதான பின்னணியாகும்.

புலம் பெயர்த்தப்பட்ட வட புல பூர்வீக முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட்டுவிடக்கூடாது என்பது பிராந்திய தேசியவாதத்தின் நிலைப்பாடாகும்.

எப்படியாயினும் ரிஷாத் பதியுத்தீனை ஏதாவதொரு குற்றச்சாட்டில் சிக்கவைக்க வேண்டும் என்று;
சதோசவில் ஊழல் செய்தார்,
அரிசி இறக்குமதி/விற்பனையில் ஊழல் செய்தார்,
கொட்டைப்பாக்கு இறக்கி ஏற்றினார் என்று தனிப்பட்ட ரீதியாக அடுக்கிய குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்யென விசாரனைகளின் போது கண்டறியப்பட்டதால் வேறு வழியின்றி காடழிப்பு குற்றச்சாட்டை கையிலெடுத்து தண்டித்து விடலாம் என முயல்கின்றனர்.

வில்பத்து காட்டின் எல்லைகளை முஸ்லிம்களின் பூர்வீக காணிகளையும் உள்ளடக்கியதாக வர்த்தமானி பிரகடனம் செய்ததை சட்டத்துக்கும் மனசாட்சிக்கும் விரோதமான நடவடிக்கை என தள்ளுபடி செய்திருக்க வேண்டிய வழக்கை விசாரணைக்கு எடுத்ததே அடிப்படையில் தவறாகும்.

விவாத நிலையில் இருக்கும் போது வழக்கு விடையமாக கருத்துக்கூறுவதை தவிர்ந்து கொண்டாலும் தீர்ப்பு வெளியாகியதன் பின்னர் அதை விமர்சனத்துக்குள்ளாக்கும் உரிமையை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

அதனால்தான் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தும் உரிமையை அரசியல் அமைப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தீர்ப்புகள் மீதும் தர்க்கவியல் விமர்சனங்களை செய்யலாம்.

பொதுவாகவே இலங்கையின் சட்டவாக்கல்கள், வர்த்தமானிகள் எல்லாம் இயற்றப்படும்,பிரசுரிக்கப்படும் தறுணத்தின் பின்னரே நடைமுறைக்கு வரும் என்பது பொதுவான புரிதல்.

கடந்த காலத்துக்கும் பிரயோகிக்கப்படவேண்டுமாயின் அது விஷேடமாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் என்பதை சட்ட அடிப்படை கோட்பாடுகளூடாக அறிந்து கொள்ள முடிகின்றது..

விஷேடமான சொற்பதங்களூடாக முன்னோக்கிய பிரயோகமும் பின்னோக்கிய பிரயோகமும் சட்ட நூல்களில் காணக்கிடைக்கின்றது.

அதையெல்லாம் இங்கு ஆங்கிலத்தில் குறிப்பிட்டு வாசகர்களை குழப்ப தேவையில்லை.

விடையம் என்னவென்றால், மீள் குடியேற்றத்துக்கென ஏற்கனவே ஒதுக்கிக்கொடுக்கப்பட்ட காணிகளை வில்பத்து காடாக வர்த்தமானியூடாக பின்னாட்களில் பிரகடனம் செய்வதும் அந்த வர்த்தமானியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதும் காரசாரமான விமர்சனத்துக்குள்ளாக்க பட வேண்டியது.
நீதி மன்ற தீர்ப்புக்களை மதிக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அதற்கு கட்டுப்படவேண்டும் என்பதே தவிர அத்தீர்ப்புகளை விமர்சிக்கவோ சவாலுக்கு உட்படுத்தவோ கூடாது என்பதல்ல.
அதனால்தான் மேல் நீதிமன்ற மீழாய்வை சட்டம் அனுமதித்துள்ளது.

ரிஷாத் பதியுத்தீனின் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டு தேர்வுகளே ரிஷாதின் மீதான அரச அடாவடித்தனங்களுக்கு வழி சமைத்தன என்ற வாதத்தை மறுப்பதற்கில்லை.

ஆனால் தனக்கு சரியெனப்படும் அரசியல் நிலைப்பாட்டை சுதந்திரமாக எடுக்கும் உரிமையை கேள்விக்கும் சவாலுக்கும் உட்படுத்தி தண்டிக்க முனைவது பாஷிசத்தின் பண்பாகும்.

ரிஷாத் பதியுத்தீன் மீது இன்று பிரயோகிக்கப்படும் சட்ட, உளவியல் அழுத்தங்கள் எல்லாம் பாஷிச வெறியாட்டங்களேயன்றி வேறில்லை.

மறுபுறம், ரிஷாத் பதியுத்தீன் மீதான இந்த கெடுபிடிகள் தனிப்பட்ட ரீதியானது, சமூகம் தொடர்பானதல்ல என இனியும் எவராவது கூறுவார்களேயானால் அவர்கள் ஒன்றில் ரிஷாத் பதியுத்தீன் மீது காழ்ப்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது அரசியல் பாலகர்களாக இருக்க வேண்டும்

ரிஷாத் பதியுத்தீனுக்கு அவ்வளவு இலகுவாக நீதி கிட்டுமென்று நம்பவில்லை.

ஆதலால் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் இந்த நடு நிசியில் கையேந்திவிட்டு உங்களை சாட்சிகளாக்கின்றேன்.

‘அத்ல்’ எனும் நீதி கோர்டிலிருந்து வராது
அர்ஷிலிருந்துதான் வரும்

-அரசியன்-

Web Design by The Design Lanka