சகோதரர் வபா பாரூக் அவர்களே ! உங்களிடம் ஒரு சில நிமிடங்கள்.... - Sri Lanka Muslim

சகோதரர் வபா பாரூக் அவர்களே ! உங்களிடம் ஒரு சில நிமிடங்கள்….

Contributors

தாங்கள் என்றும் சாணக்கியன் எம்பியின் ரசிகன் என்றும் உங்களை அடையாளப்படுத்தி உள்ளீர்கள் என்பதனாலயே உங்களிடம் சில கேள்விகள்……

* நீங்கள் உங்களுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தில் தந்தை செல்வாவினதும்,சாணக்கியன் எம்பியினதும் கொள்கைகள் ஒன்றே என குறிப்பிட்டிருந்தீர்கள். 1956ம் ஆண்டு திருமலை மாநாட்டில் வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரண்டு பிராந்திய சபைகள் அமையப்பேர வேண்டும் அந்த இரண்டில் ஒன்று முஸ்லிம் இனத்திற்குரியது என்று தெளிவாக தந்தை செல்வா குறிப்பிட்டு இருந்தார்.இதனாலேயே தலைவர் அஸ்ரப் அவர்களும் தந்தை செல்வாவின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டார்.எனவே வட-கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களுக்கு தனியான மாகாண சபை வழங்குவதற்கு தமிழ் தரப்பு சார்பாக சாணாக்கியன் எம்.பி குரல்கொடுப்பாரா?இல்லை எனில் நீங்கள் சாணக்கியனை கண்டிப்பீர்களா?

* தோப்பூர் உப பிரதேச செயலகம் தரம் உயர்வதை தடுத்து வைத்துக் கொண்டு இருக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன். இந்த உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு சாணாக்கியன் எம்.பி குரல் கொடுப்பாரா?

* கல்முனை விடயம் சம்மந்தமாக இதுவரை முஸ்லிம் தரப்பால் முன்வைக்கப்பட்ட பல முன்மொழிவுகளை சகோதர இனமான தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தே வந்துள்ளனர்.என்பதை தாங்களும் அறிந்திருப்பீர்கள்.இவ்வாறு இருக்கையில் அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்குங்கள் என கோருவது வியப்பிற்குரியதே!அதேநேரம் கல்முனை உப பிரதேச உருவாக்க எல்லைக்குள் முஸ்லிம்களின் காணிகள்,நகரங்கள், பள்ளிவாசல்கள்,கிராமங்கள், வர்த்தக நிலையங்கள், பலாத்காரமாக உள்வாங்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தினைத்தான் சாணக்கியன் எம்.பி கேட்டு நிற்கின்றார்.இந்த அநீயாயமான வேண்டுகோளினை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?அல்லது கல்முனை மண்ணின் மகன் என்ற ரீதியில் இதனை எதிர்ப்பீர்களா?

*)கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியில் முஸ்லிம்கள் 99.9 வீதமானவர்கள் வசித்து வருகின்றார்கள் அந்த வீதியினை தரவைப் பிள்ளையார் வீதியாகதான் இருக்க வேண்டும். என்று தமிழ் தரப்பு அடம்பிடிக்கின்றார்கள். அதே வீதியினை தங்களின் எல்லையாக பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். இதற்கு எதிராக உங்கள் சணாக்கியன் எம்.பி குரல் கொடுப்பாரா?அல்லது அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

* இலங்கையில் 7 மாகாணங்களில் 7 சிங்கள முதலமைச்சர்கள் ஆண்டு கொண்டு இருக்கின்றார்கள் அதேபோல் வடக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்து வருகின்றார். ஏன் கிழக்கு மாகாணத்தில் எல்லா இனங்களையும் ஒருமித்து கொண்டு செல்லும் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தமிழ் தரப்பு ஒருமித்து குரல் எழுப்புவதில்லை அதே நேரம் உங்கள் நேசமிக்க சாணாக்கியன் எம்.பி அதற்காக குரல் கொடுப்பாரா?

* உங்கள் சாணக்கியன் எம்.பி பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மத்திய பிரதேச செயலகத்திற்கு அரசாங்கத்தினால் வர்த்தமானி பிரகடனம் செய்யபட்ட 200 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட காணிகளை மீள வழங்குவதற்கு சாணாக்கியன் எம்.பி குரல் கொடுப்பாரா?

* அண்மையில் ஞானசார தேரர் முஸ்லீம்களின் தீவரவாத செயற்பாட்டிற்கு அல்லாஹ்தான் காரணம் என்று குறிப்பிடுகின்றார் அந்த கருத்தை முழுமையாக அடியெட்டி,ஆதரித்து தமிழ் RSS அமைப்பின் தீவர செயற்பாட்டாளர் சச்சியானந்தம் பேசுகின்றார்.எனவே RSS ற்கு எதிராக அல்லது சச்சியானந்தனுக்கு எதிராக சாணக்கியன் எம்.பி.குரல் கொடுப்பாரா?

* காரைதீவு பிரதேச தவிசாளர் அண்மையில் எமது நபி(ஸல்) அவர்களை நிந்தித்து பேசிய விடயத்தை அவரது முகநூலில் பகிர்ந்து இருந்தார்.அவருக்கு எதிராக சாணக்கியன் எம்.பி குரல் கொடுப்பாரா?

* முஸ்லிம்களும் தங்களை போன்று இந் நாட்டில் எதிரணி அரசியல் செய்ய வேண்டும் என்ற சாணக்கியனின் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?

* முஸ்லிம் தேசியம் ஒரு இனம் அல்ல என்ற நிலைப்பாட்டை ஏற்று கொள்ளுகின்றீர்களா?

* வட-கிழக்கில் இந்தியா அரசினை தவிர எந்த நாட்டையும் தலையிட அனுமதிக்க மாட்டேன் என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு என்றால் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரடியாக வந்து தலையீடு செய்தததனால்தான் அந்த ஜனாஸா நல்லடக்கம் சம்மந்தமான விடயம் வெற்றிகண்டது.அவ்வாறு இருக்கையில் வட-கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் விடயத்தில் பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகள் தலையீடு செய்வதை சாணக்கியன் எம்.பி எதிர்கின்றார்.இந்தியாவுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என கூறுகின்றார்.அண்மையில் இலங்கை வந்த இந்தியா வெளியுரவு செயலாளர் முஸ்லிம்களை சந்திக்கவில்லை இந்தியா 1987ம் ஆண்டைப் போன்று கைவிட்டு விட்டுவிட்டது. எனவே பாக்கிஸ்தான் வட-கிழக்கு முஸ்லிம்களுக்காக பேசுவதனை சாணக்கியன் எதிர்கின்றாரா? இந்த காராணங்களுக்காக சாணக்கியனை கண்டிப்பீர்களா?அல்லது ஆதரிப்பிர்களா?

* இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினை முஸ்லிம் தலைமை ஒருவரால்தான் வழி நடத்தப்பட்ட வேண்டுமா?அல்லது சாணக்கியன் போன்றோராலும் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்தப்பட்ட வேண்டுமா?

* 1889ம் ஆண்டு முதலாவது முஸ்லிம் சட்டசபை உறுப்பினராக ஆகுவதற்கு எம்.சி அப்துல் ரகுமான் முயற்சித்த போது அதற்கு சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் முஸ்லிம்கள் தனி இனம் அல்ல அவர்களும் தமிழர்கள் தான் அவர்களுக்கு என்று தனிப் பிரதிநிதித்துவம் வழங்கத் தேவையில்லை. என வாதிட்டார் இதனை சாணக்கியன் எம்.பி கண்டிப்பாரா?

* 1987ம் ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் வட-கிழக்கு இணைப்பில் முஸ்லிம்கள் அடிமையாக்கப்பட்டனர்.இந்த துரோகத்தினை செய்தவர்கள் இந்தியா அரசும்,தமிழ் கூட்டமைப்பும்தான் அவ்வாறு என்றால் இந்த செயற்பாட்டினை செய்த இந்தியா அரசிக்கு எதிராக சாணாக்கியன் எம்.பி பேசுவாரா?

* கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சாணக்கியனின் கருத்திற்கு நீங்கள் உடன்படுகின்றீர்களா?

* அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு ஓர் மடல் வரைந்திருந்தீர்கள் அதில் கல்முனை மேயர் பதவியை சகோதர இனமான தமிழ் தரப்புக்கு வழங்க வேண்டும் என கேட்டிருந்தீர்கள்.70 வீதத்திற்கு அதிகமாய் வாழும் முஸ்லிம்களை 23வீதம் வாழும் சகோதர இனமான தமிழ் தரப்பு ஆள்வதை விரும்புகிறீர்களா?

* கல்முனையை பிரித்து சகோதர இனமான தமிழ் தரப்பிற்கு நியாயமான நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்பதில் முஸ்லிம் தரப்பு உறுதியாக உள்ள நிலையில் முஸ்லிம் தரப்பு அதை மறுதலிக்கின்றது என்னும் கூற்றுப்படி உங்களின் கருத்து அமைந்திருந்தது.எல்லைகள் வகுக்கப்பட்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தீர்கள்.நீங்கள் குறிப்பிடும் நியாயமான எல்லைகள் எது என உங்களால் குறிப்பிட முடியுமா?

* முஸ்லிம்கள் கோரி நிற்கும் கரையோர மாவட்டத்தை தாங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?ஏற்றுக் கொண்டால் நீங்கள் ரசிக்கும் சாணக்கியன் எம்பியினால் ஏன் அதனை வலியுறுத்த முடியவில்லை?

* திருக்கோவில் வட்டமடு விவசாய காணியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் காணியினை பயிர் செய்கை பண்ணவிடாமல் தமிழ் தரப்பினர் தடுக்கின்றனர்.இதனை சாணாக்கியன் எம்.பி.யினைக் கொண்டு கண்டிப்பீர்களா? முஸ்லிம்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பீர்களா?

சகோ வபா பாரூக் அவர்களே !

அரசியல் கலைஞர்களை ரசிப்பதை விடுத்து அரசியல் ஞானிகளின் பால் ஈடுபாடு கொள்ளுங்கள் வெற்றி பெறாவிட்டாலும் சுதந்திர காற்றையாவது சமுகம் சுவாசிக்கலாம் என்பது எமது கருத்தாகும்.

நன்றி
இப்படிக்கு
ஏ.ஆர்.எம் பஸ்மீர்
உறுப்பினர்
பிரதேச சபை காரைதீவு.

Web Design by Srilanka Muslims Web Team