சக வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் ஷேன் வொற்சன் - Sri Lanka Muslim

சக வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் ஷேன் வொற்சன்

Contributors

3(1920)

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் பங்குபற்றவுள்ள அவுஸ்ரேலிய அணியின் இளம் வீரர்களுக்கு அவ்வணியின் சிரேஷ்ட சகலதுறை வீரரான ஷேன் வொற்சன் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

ஒற்றை டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டி, 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய இத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த மைக்கல் கிளார்க் இத்தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், இக்குழாமின் அனுபவ வீரராக ஷேன் வொற்சனே காணப்படுகிறார்.

இதன்காரணமாக இளம் வீரர்களுக்கு அவர் இந்திய ஆடுகள நிலைமைகள், எவ்வாறு சிறப்பாக விளையாடுவது போன்ற அறிவுரைகளை வழங்கி வருகிறார். விக்கெட் காப்பாளரான பிரட் ஹடினுடன் இணைந்து ஷேன் வொற்சன் இக்குழாமின் வழிகாட்டியாக செயற்படுவதாக அவ்வணியின் வீரர் அடம் வோகஸ் குறிப்பிட்டார்.

ஷேன் வொற்சன் ஒரு சிரேஷ்ட வீரர் எனக் குறிப்பிட்ட அடம் வோகஸ், அவர் இந்தியாவில் அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் கொண்டவர் எனவும், அதன் காரணமாக அவர் ஏனைய வீரர்களுக்கு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரலிய குழாமில் ஷேன் வொற்சன், மிற்சல் ஜோன்சன் இருவரும் மாத்திரமே 100 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு அதிகமாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team