சட்டவிரோத பள்ளிவாசல் கடைத் தொகுதியை உடைக்க தீர்மானம் - Sri Lanka Muslim

சட்டவிரோத பள்ளிவாசல் கடைத் தொகுதியை உடைக்க தீர்மானம்

Contributors

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ  பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதி சட்டவிரோத கட்டிடம் என காத்தான்குடி நகர சபையின் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத கட்டிடத்தை உடைப்பதற்கும் காத்தான்குடி நகர சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகர சபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸபர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதி சட்டவிரோத கட்டிடம் எனவும் இதை அகற்ற வேண்டுமெனவும் சபை உறுப்பினர்களிடையே விவாதம் இடம்பெற்றது.

இதன் பின்னர் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பில் பள்ளிவாசலின் கடைத் தொகுதி சட்டவிரோதமானது எனவும் அதை உடைப்பதற்கும் ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர்களான நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், உறுப்பினர்களான எம்.அலிசப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாத் ஆகிய ஐந்து பேரும் வாக்களித்தனர்.

எனினும் கடைத் தொகுதியை உடைப்பதற்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் றஊப் ஏ மஜீட், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்களான ஏ.எல்.எம்.சபீல், எம்.எச்.எம்.நசீர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா ஆகியோரும் வாக்களித்தனர்.

இந்த கட்டிடத் தொகுதிக்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்கவில்லையெனவும் நகர சபையின் அனுமதியினை பெறாமலே இந்த கட்டிடம் நிர்மானிக்கப்படுவதாகவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.இந்த கடைத்தொகுதி தொடர்பில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.tm

Web Design by Srilanka Muslims Web Team