சண்முகா விவகாரம்: பஹ்மிதா ஆசிரியைக்கு எதிராக அதிபரால் பொய் முறைப்பாடு - இரு பொய் வழக்குகள் பதிவு! - Sri Lanka Muslim

சண்முகா விவகாரம்: பஹ்மிதா ஆசிரியைக்கு எதிராக அதிபரால் பொய் முறைப்பாடு – இரு பொய் வழக்குகள் பதிவு!

Contributors

 அதிபரை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாக ஒரு வழக்கும் வழக்கும், ஆசிரியை பஹ்மிதா சம்பவ தினத்தன்று தாக்கப்பட்டமை சம்பந்தமாக இன்னொரு வழக்கும்  கொண்டு வரப்பட்டிருந்தன.

ஆசிரியை பஹ்மிதா சார்பாக குரல்கள் இயக்க (Voices Movement) சட்டத்தரணிகள் ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜராயிருந்ததுடன், இதுவொரு சோடிக்கப்பட்ட பொய்யானதொரு வழக்கு என்றும் ஆசிரியை பஹ்மிதா அவர்கள் அதிபரை ஒரு போதும் தாக்கயிருக்கவில்லை என்றும் கூறி ஏற்கனவே நிலுவையில் இருக்கின்ற வழக்கினை தடுக்கவே இம்முறைப்பாடு தாக்கல் செய்யபட்டிருப்பதாகவும், இவற்றை வழக்கு விளக்கத்தின் போது தம்மால் இலகுவில் நிரூபிக்க முடியும் எனவும் தமது சமர்ப்பணங்களை செய்திருந்தனர்.

அதேபோன்று மற்றைய வழக்கிலும் ஆசிரியை சார்பான வாதங்களை சட்டத்தரணிகள் முன்வைத்திருந்தனர். எதிர்தரப்பு சட்டத்தரணிகளும் தமது பக்க வாதங்களை முன்வைத்து சமர்ப்பணங்களi மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியை பஹ்மிதா சார்பாக என்று கூறிக்கொண்டு  இன்னுமொரு கனிஷ்ட சட்டத்தரணியொருவர் சடுதியாக ஆஜராகியதுடன், இவ்வழக்கு  செல்வாக்கிற்கு உட்பட்டு இம்மன்றில் நடாத்தப்படுகின்றது என்றொரு வாதத்தை முன்வைத்திருந்தார்.

அதற்கு கௌரவ மன்று குறித்த சட்டத்தரணியினை கடுமையாக எச்சரித்து தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தது.

அச்சமர்ப்பணத்திற்கும் ஆசிரியை அவர்களின் உத்தியோகபூர்வ சட்டத்தரணிகளாக தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இவை அனைத்தையும் கவனமாக செவிமடுத்த கௌரவ மன்றானது பிணக்கின் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு சமாதானம் ஒன்றிற்கு வருவதற்கான வாய்ப்புக்களையும் சாதகமாக பரீசிலிக்குமாறு இரு தரப்பனரையும் வேண்டியதுடன் பிணையினையும் வழங்கி வழக்குகளையும் விளக்கத்திற்காக 22.05.2023 ஆம் திகதியிற்கு நியமித்தது.

குரல்கள் இயக்கம் ஆசிரிய பஹ்மிதா றமீஸின் கலாச்சார உரிமை மீட்புக்காக ஆரம்பம் முதல் சட்ட ரீதியாகப் போராடிக் கொண்டு வருகிறது.

 

Raazi Mohamed

Web Design by Srilanka Muslims Web Team