சந்தியா எக்னெலியகொட; வீர பெண்மணியின் விடாத பயணம்! – ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்!

Read Time:4 Minute, 26 Second
பெண்ணுரிமையென அற்ப விடயங்களுக்காக அலட்டிக்கொள்ளும் பெண்களே அதிகம். சந்தியா எக்னெலியகொட அப்படியான ஒருவரல்ல. தனது கணவனின் மரணத்திற்காக தொடர்ச்சியாக 12 வருடங்களாக போராடி வருகிறார். அவரை முதுமை நெருங்கிய போதும், அவரின் செயற்பாடு முதுமையையும் மிஞ்சியதாகவே காணப்படுகிறது. நிச்சயம் இவர் வாழ்த்தப்பட வேண்டிய ஒரு பெண். இவருக்கு வழங்கப்பட்ட வீரதீர பெண்மணிக்கான விருது, அவ் விருதுக்கே பெருமை சேர்க்கும்.
அண்மையில் தனது கணவனுக்கு நீதி கேட்டு, தமிழ் மத நம்பிக்கையின் அடிப்படையில், தனது முடியை மழித்துள்ளார். அவரது இச் செயற்பாடு இறை நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், அச் செயற்பாடு இவ் விடயம் தொடர்பான மக்கள் விழிப்புணர்வுக்கும் பெரிதும் வழிகோலியுள்ளது. போராட்டம் என்பது ஒரு தடவை போராடுவதல்ல, தீர்வு கிடைக்கும் வரை போராடுவதே பயனுள்ள போராட்டமாகும். அதனையே சந்தியா எக்னெலியகொட செய்து வருகிறார். ஒரு பெண், தனது தலை முடியை மழிப்பது துறவறம் பூண்தலுக்கு ஈடானது. ஒரு வயது சென்ற தாய், தனது தலையை மழித்து, போராடுவது மனதுக்கு மிகக் கடும் கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்.
ஞானசார தேரருடன் மோத அதிகமானோருக்கு ஒரு தயக்கம் இருக்கும். ஞானசர தேரரை வென்ற ஒரு பெண்ணாகவும் சந்தியா எக்னெலியகொடவை நோக்கலாம். எல்லாரிடம் வாய் விடுவது போன்று இவரிடம் ஞானசாரர் விளையாட நினைத்தார். அவரை சிறையனுப்பி பதிலடி கொடுத்திருந்தார். இந்த தைரியம் அலாதியானது என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.
பிரகீத் எக்னெலியகொட ஒரு மிக தைரியமான ஊடகவியலாளர். அதற்கு கிடைத்த பரிசே அவரது மரணமெனலாம். ஒருவரின் தைரியமான செயற்பாட்டின் பின்னணியில், அவரது குடும்ப பின்னணி பெரும் தாக்கம் செலுத்தும். குடும்பத்தினர் துணிவற்றிருந்தால், நிச்சயம் ஊடகவியலாளர் போன்ற துணிவான பயணத்தை தொடர இயலாது. பிரகீத் எக்னெலியகொடவின் துணிவான பயணத்தில், அவரது மனைவியின் பங்கை, தற்போதைய சந்தியா எக்னெலியகொடவின் செயற்பாடு துல்லியமாக்கின்றது.
ஒரு பெண் தனியே போராடுகிறாள். எந்த பெண்ணிய இயக்கமும் அவருக்கு பெரிதான ஆதரவு வழங்கியதாக தெரியவில்லை. தேவையற்ற விடயமென்றால் தெருவில் நின்று போராட பலரும் வந்திருப்பார்கள். ஒரு ஊடகவியலாளன் மரணித்துவிட்டான். ஊடகங்களின் போராட்ட வீரியமும் மிக குறைவானதாகவே அவதானிக்க முடிகிறது. உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. நாம் என்ன தான் சமூகத்திற்கான தலை கீழாக நின்று போராடினாலும், எமக்கு ஏதுமென்றால், எமது குடும்பமே இறுதி வரை நிற்கும் என்ற பலமான செய்தியும் இதன் பின்னாலுள்ளது.
சந்தியா எக்னெலியகொடவின் துணிவு அலாதியானது! அவரது கணவர் பற்றி அளவிட இயலாதது! ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமனது! பிரகீத் எக்னெலியகொடவின் நீதிக்கு அனைவரும் பங்களிப்போம்!
துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வந்தடைந்தார்!
Next post மட்டக்களப்பில் தனியார் பஸ்களுக்கு இடையில் தொடரும் முரண்பாடு; பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் பயணிகள்!