சந்திரிகாவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்து சரத் பொன்சேகா பேச்சு - Sri Lanka Muslim

சந்திரிகாவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்து சரத் பொன்சேகா பேச்சு

Contributors

எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்தாலோசித்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஊழல் நிறைந்திருக்கிறது. வீதி அபிவிருத்தி உட்பட அனைத்து வேலைத் திட்டங்களிலும் நிதிக் கையாடல் அதிகரித்துள்ளது. மக்களின் வரிப்பணம் சிலரது பைகளுக்கு செல்கிறது.

தனிப்பட்டவர்களின் நன்மைகளுக்காக பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு என்பன சீரழிந்து போகின்றன.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நன்மதிப்பு குறைந்து வருகிறது.

எனவே அக்கட்சியைப் பாதுகாப்பதற்காக பல்வேறு அதிரடித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அண்மையில் சந்தித்த போது என்னிடம் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது அரச அமைச்சர்கள் உறுப்பினர்களில் பலர் தன்னுடன் இணைந்து செயற்பட உறுதியளித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

என்னுடனும் இணைந்து அடுத்த வருடம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான விசேட முன்னெடுப்புக்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை மீட்பதற்கான எனது நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுமாறு ஏற்கனவே அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நாங்கள் இருவரும் நடத்தி வருகிறோம்.

எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து விரைவில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. விரைவில் எங்களது பலத்தை வெளிப்படுத்துவொம் என்றார். lw

Web Design by Srilanka Muslims Web Team