சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க திட்டம்? - Sri Lanka Muslim

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க திட்டம்?

Contributors

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அடுத்த பிரதமராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு முன்னர் அவரது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அவ்வாறான முதலாவது நிகழ்ச்சித் திட்டம் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரத்னவின் உடல் நிலைமை காரணமாக அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.

எனினும் இதற்கு வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் ராஜபக்ஷவினருக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தலைமை வகிப்பதால் பிரதமரை பதவியில் இருந்து நீக்கிட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் டி.எம். ஜயரத்ன, தனது மகன் அனுராத ஜயரத்னவுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொடுக்க போராடியதுடன் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷசீந்தர ராஜபக்ஷவுக்கு ஊவா முதலமைச்சர் பதவியை வழங்க முடியும் என்றால் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதால், தனது மகனுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் இருப்பதற்கு எந்த காரணங்களும் இல்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

தமது மகனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கப்படாததை அடுத்து கண்டியில் நடைபெற்ற அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரத்ன நேரடியாக கலந்து கொண்டிருந்தார்.

அவர் கலந்து கொண்ட அந்த போராட்ட பேரணியின் காணொளி ராஜபக்ஷவினருக்கு கிடைத்ததுடன் அதன் பின்னர் ராஜபக்ஷவினர் அவர் மீது அதிருப்தி கொண்டதாக பேசப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த விடயங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கண்டியில் பிரசாரத்தில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவி பறிக்கப்படும் திட்டம் இருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(lw)

Web Design by Srilanka Muslims Web Team