சப்ரகமுவ மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் பெண் சட்டத்தரணியாக திகழ்ந்த மர்ஹூமா குரைஷியா ஜவ்பர்! - Sri Lanka Muslim

சப்ரகமுவ மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் பெண் சட்டத்தரணியாக திகழ்ந்த மர்ஹூமா குரைஷியா ஜவ்பர்!

Contributors

கேகாலை மாவட்டத்தில் மாத்திரமின்றி சப்ரகமுவ மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் பெண் சட்டத்தரணி என்ற பெருமைக்குரிய அப்துல் வாஹித் குரைஷியா 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அப்துல் வாஹித் இஸ்ஸதுல் ஐன் தம்பதியினருக்கு மகளாக ருவன்வெல்லை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கன்னத்தோட்டை கிராமத்தில் பிறந்தார்.

கன்னத்தோட்டை சுலைமானியா கல்லூரியில் கல்வி பயின்ற அவர், கல்வி நடவடிக்கைகளில் மாத்திரமின்றி இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிகாட்டியுள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனைகள் படைத்த அவர், பல தடவை சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பேச்சுத்திறமை மிக்க அவர், எதிர்த்தரப்பினரும் போற்றும் அளவுக்கு வாதத்திறமை மிக்கவராக விளங்கினார்.பாடசாலை விவாதக் கழகத்தில் பல வருடங்கள் தலைவராக செயற்பட்டுள்ளார்.

உயர்கல்வியைத் தொடர்ந்து சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை தொடர்ந்தார். அங்கு கல்வி பயிலும் காலத்தில் தமிழ் மன்றம், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றில் நிர்வாக சபை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். சட்டக்கழக விவாதக் குழுவிலும் அங்கத்துவம் வகித்தார். சட்டப் படிப்பை நிறைவு செய்த அவர், 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தனது சட்டப் பயிற்சிக்கென அவிசாவளை நீதிமன்றத்தில் இணைந்து கொண்டார். சட்டத்தரணி குரைஷியா மும்மொழியையும் சரளமாகவும் பேசும் திறன் கொண்டிருந்தார்.அவரின் சரளமாகச் சிங்களம் பேசும் திறன் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சமூக சேவைகளிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். பொறுமை, பல்துறை சார் அறிவு, அர்ப்பணிப்பு, நிதானம், தலைமைத்துவப் பண்புகள் போன்றவற்றை அவர் கொண்டிருந்தார்.

கன்னதோட்டையைச் சேர்ந்த ஏ.எஸ். எம் ஜவ்பருடன் திருமண வாழ்வில் இணைந்தார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். சட்டத்தரணி குரைஷியா, முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் யூ.எல்.எம் பாரூக்கின் சகோதரியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2000 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் சகிதம் கனடா சென்ற அவர் அங்கு குடியுரிமை பெற்றார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் தனது 67 ஆவது வயதில் காலமானார்.

சிறந்த சமூக சேவையாளராகத் திகழ்ந்த பெண் ஆளுமை சட்டத்தரணி மர்ஹுமா குரைஷியா அவர்களை அவரது பிரதேச மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர்.

 

எம்.ஆர்.எப்.ரிப்தா (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

Web Design by Srilanka Muslims Web Team