சமூகத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்து வரும் நஜீப் பின் அமீர் ஆலிம்! - Sri Lanka Muslim

சமூகத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்து வரும் நஜீப் பின் அமீர் ஆலிம்!

Contributors

தர்கா நகர் அறிஞர்கள், மகான்கள், கொடை வள்ளல்கள் தோன்றி பிரகாசித்த பிரதேசமாகும். ‘இங்கும் அண்டிய ஊர்களிலும் காலத்துக்குக் காலம் கொடை வள்ளல்கள் வாழ்ந்து சமூகத்துக்கும் நாட்டிற்கும் நற்பணிகள் ஆற்றிய வரலாறு இப்பிரதேசத்திற்குண்டு. குறிப்பாக 1950களில் ‘ரப்பர் கிங்’ என்று போற்றப்படும் ஈ.எல். இப்ராஹிம் ஹாஜியார், 1960-–70களில் நளீம் ஹாஜியார், 1990- – 2000 ஆண்டுகளில் ஸெம் ரிபாய் ஹாஜியார் உள்ளிட்ட கொடையாளிகளால் கடல் கடந்த நாடுகளிலும் இப்பிரதேசம் புகழ் பெற்று விளங்கியதை நாம் அறிவோம்.

இவர்களின் அடிச்சுவட்டில் பயணிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கருளியதை எண்ணி முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன் என்று நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் அல்ஹாஜ் முஹம்மத் நஜீப் பின் அமீர் ஆலிம் கூறினார். தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தால் இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மூன்று நாள் இலவசக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

தர்கா நகர் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, அல்-ஹம்றா மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கற்கும் சுமார் 335 மாணவர்களுக்காக செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த முன்வந்துள்ளமை குறித்து நஜிப் ஹாஜியாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவரின் கருத்தில்,..

எனது சிறுபிராயத்தில் எனது வீட்டிலும் வறுமை கோரத்தாண்டவமாடியது. அதனால் ஏழைச் சிறுவர்கள் கல்வி பெறுவதில் உள்ள சிரமங்களை நான் அறிவேன். அத்தகைய சவால்களை முறியடித்தே நான் முன்னுக்கு வந்தேன். அதனால் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் தான் வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு கை கொடுப்பதற்காகவேதான் கல்விப் பணியில் கால் பதித்துள்ளேன்.

கேள்வி: உங்கள் கல்விப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்: முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு முதல் ஆயுதம் கல்விதான். அதற்காக நான் ஏற்கனவே பலதரப்பட்ட சமூகப் பணிகளிலும் அர்ப்பணிப்புச் செய்து கொண்ட நிலையில் சமூகத்தின் கல்வி விருத்தியை கருத்தில் கொண்டு தர்கா நகர் ‘லோட்டஸ் வீதியில் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம்’ என்ற பெயரில் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றை அமைத்து எனது பணியை முன்னெடுத்து வருகிறேன்.

கேள்வி: உங்கள் கல்வி நிலையம் ஊடாக ஆற்றி வரும் பணிகள் தொடர்பில்?

பதில்: எனது சொந்தக்காணியில் 2013ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு 2015 ஆம் ஆண்டு கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. எனது சமய, சமூகப் பணிகளின் ஒரு மைல்கல் என்றே இதனைக் குறிப்பிடலாம். இங்கு ஆரம்ப கட்டத்தில் பிரதானமாக மூன்று அம்சங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இன்னும் பலதரப்பட்ட சேவைகளும் விஸ்தரிக்கப்படவுள்ளன. அல்குர்ஆன் மத்ரஸா உள்ளிட்ட சன்மார்க்கம் சம்பந்தப்பட்ட போதனைகள் இங்கு இடம்பெறுகின்றன.

பாடசாலை கல்விக்கான துணைச் செயற்பாடுகள், உலக அறிவியல் தொடர்பான வழிகாட்டிகள் மற்றும் அறிவு விருத்திக்காக தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளிலான நாளிதழ்களும் பொது நூல்களும் அடங்கிய வாசிகசாலையொன்றும் இந்நிலையத்தில் இயங்கி வருகிறது. மூன்றாவது அம்சமாக சமூகநலப் பணிகளுக்கு திட்டமிடுவதற்கான மையமொன்றும் இங்கு அமையப்பெற்றுள்ளது. இவற்றின் மூலமே எனது பலதரப்பட்ட சேவைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்திலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் சகல மாணவர்களுக்கும் சான்றிதழ், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறேன். சமூகத்திற்கு அளப்பரிய பணிசெய்து வரும் ஊடகவியலாளர்களையும் எமது கல்வி நிலையம் பல தடவைகள் கௌரவித்துள்ளது.

இதேபோன்று காலி மாவட்டத்தில் பனாபிட்டிய, பலபிட்டி, துந்துவை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு மேற்படி பணி 2013 ஆம் ஆண்டு முதல் வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கள, முஸ்லிம் நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கோடு தர்காநகர் மற்றும் அளுத்கம பகுதி சிங்கள பாடசாலைகளிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் நாம் கௌரவித்தோம். எனது பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றும் இந்த வருடம் முதல் மேற்கொண்டு வருகிறேன். எதிர்காலத்தில் களுத்துறை மாவட்டம் வரையில் இதனை விஸ்தரிக்கவும் உத்தேசித்துள்ளேன்.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்பகுதியில் உள்ள மூன்று பிரதான முஸ்லிம் பாடசாலைகளிலும் பயிலும் 300க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தரம் 5 புலமைப் பரிசல் பரீட்சைக்கான மூன்று நாள் இலவச முன்னோடி கருத்தரங்கை தலைசிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பிள்ளைகள் மாலை நேரங்களை வீண் பொழுது போக்குகளில் கழிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அல்ஹம்றா வித்தியாலய வளவில் சகல தேவைகளும் அமையப்பெற்ற பூரண அளவிலான ‘நஜீப் ஹாஜியார் சிறுவர் பூங்காவொன்று’ 2019 ஆம் ஆண்டு திறந்து திறந்து வைக்கப்பட்டது. அப்பூங்கா இன்று வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அளுத்கம வீதிய தர்கா நகர் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள், ஆசிரிய, ஆசிரியர்களுக்கு தொழுகைக் கடமையை நிறைவேற்றுவதற்காக அழகிய அமைப்பில் தொழுகை அறையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: கல்வி தொடர்பாக மேற்கண்ட பணிகள் செய்துள்ள நீங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள கல்விப் பணிகள் என்ன?

பதில்: கல்வி அழியாச் செல்வமாகும். அப்பணி ஸதக்கத்துல் ஜாரியாவில் அடங்குகிறது. ‘கற்பவனாக இரு; கற்றுக் கொடுப்பவனாக இரு; கற்பவனுக்கு உதவுபவனாக இரு; நான்காம் ஆளாக இருக்காதே;! அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிக்கொப்ப நான் கற்பவர்களுக்கு உதவுபவனாக இருந்து பணியாற்றி வருகிறேன். தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு இந்த வருடம் ஆரம்பித்துள்ள இலவச கருத்தரங்குகள் போன்று க.பொ.த. (சாதாரண) தர, உயர் தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் அவ்வப்போது முற்றிலும் இலவசமாக கருத்தரங்குகளை நடாத்தவும் உத்தேசித்துள்ளேன்.

க.பொ.த. (சாதாரண) தரம், உயர்தரம் வரை பூர்த்தி செய்து மேற்படிப்பை தொடர்வதில் தகைமை குறைவாக இருப்பவர்கள் மற்றும் கல்வியை இடை நடுவில் கைவிட்டவர்கள், தொழிலின்றி சமூகத்திற்கு பாரமாகாமல் இருக்க வைப்பதற்காக தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு வருகிறேன். சீனன்கோட்டையிலுள்ள இக்ராஃ தொழில்நுட்பக் கல்லூரியை முன்னோடியாகக் கொண்டு பணியை முன்னெடுக்கவுள்ளேன்.

குறிப்பாக மாதர் சமூகத்திற்கான தையல் உட்பட குடிசை கைத்தொழிலை விருத்தி செய்வதற்கான பயிற்சி உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதும் எனது எண்ணக்கருவில் உள்ளன. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் அரபு, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பயிற்சிகளை வழங்குதலும் எதிர்கால முன்னெடுப்பாக உள்ளது.

கேள்வி: அபூதாபியில் நீதித்துறையில் தமிழ், சிங்கள உரைப்பெயர்ப்பாளராக தொழில் பார்க்கும் உங்களால் மிகவும் பிரம்மாண்டமான பணிகள் தொடரப்படுவது எப்படி சாத்தியமாகிறது?

பதில்: இலங்கையில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து கல்வியை முடித்த கையோடு கோப்பி வியாபாரம், மாணிக்கம், மாசி வர்த்தகம் என்று பல தொழில்களிலும் ஈடுபட்டு கம்பளைப் பிரதேச பள்ளியொன்றில் பேஷ் இமாமாகவும் கடமையாற்றிய பின்னர் கூலித் தொழிலாளியாக அபுதாபி சென்ற பின்னரே எனது திறமை, ஆற்றலால் மொழிபெயர்ப்பாளராகி தற்போதுள்ள பதவியில் அமர்ந்துள்ளேன். எமது கல்வி நிலையத்தின் ஊடாக கல்வி, பள்ளிவாசல் நிர்மாணம் உள்ளிட்ட எனது பொதுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தர்கா நகர் லோட்டஸ் வீதியில் 25 பேர்ச்சஸ் காணி என்னால் கொள்முதல் செய்யப்பட்டு பிள்ளைகளுக்கு பகிர இருந்தேன். பின்னர் எனது மகன், மகள்மார்களின் விருப்புக்கமைய அந்நிலப்பரப்பிலே தான் எனது பெயரிலான கல்வி நிலையம் அமையப்பெற்று அது பொதுப்பணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறினால் நான் ஏழையின் மகன், எனது பிள்ளைகளோ செல்வந்தனின் பிள்ளைகளாக உள்ளனர். அவர்களும் இன்று எனது அடிச்சுவட்டில் பரோபகாரப் பணிகளில் என்னை பயணிக்கச் செய்வதோடு அவர்களும் பொது நல முயற்சிகளில் ஆர்வம் காட்டி வருவது எனக்கு மேலும் பெருமையைத் தருகிறது.

கேள்வி: கல்விக்கு புறம்பாக உங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் பற்றி சுருக்கமாக கூறினால்…

பதில்: 1978 ஆம் ஆண்டு கூலித்தொழிலாளியாக அபுதாபி சென்றபோதும் 1982 ஆம் ஆண்டு அங்குள்ள நீதித்துறையில் மொழிபெயர்ப்பாளராக வாய்ப்புக் கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றதோடு சம்பள உயர்வும் பெற்றேன். அன்றிலிருந்து எனது பொதுநலப் பணிகள் சிறுகச் சிறுக முன்னெடுக்கப்பட்டது. ஒரு தசாப்தத்தின் பின்னரே அதாவது 1999க்குப் பின்னரே எனது சேவைகள் கலை கட்ட ஆரம்பித்தன.

நான் கல்விக்கற்ற காலி மத்ரஸாவின் கட்டட புனரமைப்பு பணிக்கும் உதவி செய்யக்கிடைத்தது. 2001இல் தர்கா நகர் தெருவுப் பள்ளி மூன்று மாடிக் கட்டடமாக புனர்நிர்மாணித்து கொடுக்கப்பட்டது. 2004இல் தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரிக்கான புதுக்கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 2015 இல் திறந்து வைக்கப்பட்ட நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தின் தொழுகைக்கான அறை எனது தாயாரின் பெயரிலும் வாசிகசாலை எனது மனைவியின் பெயரிலும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்துள்ளேன். அதேபோன்று 2021ஆம் ஆண்டு வவுனியாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்திற்கும் கட்டடமொன்றை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பு கிட்டியது.

வைத்தியசாலைகளில் தூர இடங்களில் சம்பவிக்கும் ஜனாஸாக்களை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக 24 மணி நேர இலவச அம்பியூலன்ஸ் சேவையொன்றை 2016ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறேன். களுத்துறை மாவட்டம் முழுவதற்கும் இச்சேவை கிடைப்பதுடன் காலி மாவட்டத்தின் அயல் ஊர்கள், கொழும்பு மாவட்டம் போன்றவற்றிற்கும் சில சமயங்களில் வழங்கப்படுவதுண்டு. தெருவுப்பள்ளி வளவில் ஜனாஸா குளிப்பாட்டும் அறையொன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தர்கா நகர் பெரிய பள்ளி, தெருவுப்பள்ளி, பேருவளை மருதானை பள்ளி, மக்கொன பள்ளி, காலி சோலைப் பள்ளி ஆகிய பள்ளி மையவாடிகளில் நடமாடும் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இது அபூதாபியில் உள்ள மையவாடியில் எனது மனைவி என்னுடன் பயணிக்கும்போது கண்ட காட்சியின் எண்ணக்கருவிலே உருவாக்கிக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தர்காநகர் அதிகாரிகொட மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிவாசல், தர்கா நகர் வெலிப்பிட்டிய தக்வாப் பள்ளி, பனாப்பிட்டி ஜும்ஆப் பள்ளி, தர்காநகர் ஹாஜிலேன் பள்ளி, அதிகாரிகொட நூர் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களும் புதுமெருகூட்டப்பட்டு புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு தர்கா நகரின் பெரிய பள்ளியின் மலசலகூடம், வுளுச் செய்யும் இடம் என்பன அபுதாபியை ஒத்ததான அமைப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே 2017 இல் தக்வா பள்ளியின் பழைய கட்டட அமைப்பை மாற்றி அழகிய முறையில் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இலங்கையில் முதலாவது பள்ளிவாசலான பேருவளை மருதானை அப்ரார் பள்ளிவாசலில் பெண்களுகளுக்கான பிரத்தியேக தொழுகையறை வசதி மற்றும் பலப்பிட்டியவிலுள்ள குர்ஆன் மத்ரஸாவின் புனரமைப்புக்கும் உதவிகளை செய்துள்ளேன்.

2021இல் வெலிப்பன்னைப் பகுதியில் 30 வீடுகளுக்கு நீர் பெறும் வகையில் பாரியளவிலான கிணறு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது. களுத்துறை அல்விஸ் பிளேஸில் சிறியளவில் இருந்த ஸாவியாவை விசாலப்படுத்தி 2021இல் நவீன அமைப்பில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதே ஆண்டு ஹபுகஸ்தலாவையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அங்குள்ள மக்கள் நீர் பெறுவதற்காக கிணறு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது.

கொழும்பு போபர்ஸ் லேன் புகாரி தக்கியாவின் மூன்றாம் மாடி நிர்மாணிப்பும் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட எனது பணிகளுக்கு எனது மனைவி, மகள் மற்றும் புதல்வர்களான நிஹ்மத்துல்லாஹ், ரஹ்மத்துல்லாஹ், ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் ஒத்துழைப்பும் அவர்களுக்கேயுரிய ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இவை யாவும் இணைந்தே எனது முயற்சிகளை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கின்றன என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: இறுதியாக நீங்கள் எமது சமூகத்துக்கு கூற விழைவதென்ன?

பதில்: எமது சமூகம் பல வழிகளிலும் உயர் கல்வியில் வளர்ச்சியடைவது அவசியமாகிறது. வசதி படைத்தோர் கல்விக்கும் பொருளாதார வசதிக்கும் கை கொடுத்துதவ வேண்டும். அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தனவந்தர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்னைப் போன்று தனவந்தப் பெருமக்களின் உதவியை நாடி பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எமது புத்திஜீவிகளும் இது விடயத்தில் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும்.

கிராமங்கள் தோறும் எமது வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன்னோடியாக நான் இந்த வருடம் ஆரம்பத்தில் ‘தர்கா நகரின் பொக்கிஷங்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளேன். தர்கா நகரின் சமய, சமூக மற்றும் கல்வி சார் நிறுவனங்களின் சுருக்கமான வரலாற்று குறிப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன. எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது இருப்பு குறித்து உணர்ந்து கொள்வதற்கும் நீண்ட காலமாக நாம் இங்கு வாழ்வதை உறுதிப்படுத்தவும் இத்தகைய வரலாறுகள் மிகவும் உறுதுணையாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இதேபோன்று ‘நெஞ்சம் நிறைந்த நஜீப் ஹாஜியார்’ என்னைப் பற்றிய நூலொன்றும் 2013இல் வெளிவந்தது. இதுவும் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கு பிறரைத் தூண்டும் ஒரு பொக்கிஷமாகும். இதனாலே ஊடகவியலாளர் சிலரால் என்னைப் பற்றி எழுத முன் வந்த போதும் அதனை நான் அங்கீகரித்தேன்’ என்றார்.

பேருவளை பீ.எம். முக்தார்
தினகரன் 

Web Design by Srilanka Muslims Web Team