சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்!- பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச - Sri Lanka Muslim

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்!- பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச

Contributors

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு தாம் ஒத்துழைக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் ஒத்துழைப்பதற்கு எதுவும் கிடையாது. ஏனெனில் அது சரியானதல்ல. நாங்கள் செய்த எவ்வளவு விடயங்களைப் பார்த்த பின்னரும் ஏன் இலங்கையரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? நாங்கள் என்ன தரக்குறைவானவர்களா?

நீங்கள் ஏன் அமெரிக்கா மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளவில்லை. ஆப்கான் அதிபர் சொல்லியிருக்கிறார் அங்கு நடந்த மொத்தமான போரில் கொல்லப்படவர்களை விட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களே அதிகம் என்று. அப்படியிருக்கையில் நீங்கள் ஏன் அமெரிக்காவைக் கேட்கவில்லை. அவர்கள் பலமிக்கவர்கள் என்பதாலா?

பயங்கரவாதத்தை எவ்வாறு ஒடுக்குவது என்பதை நாம் உலகுக்கு காட்டியிருக்கிறோம். போருக்குப் பின்னரான நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாம் காட்டியிருக்கின்றோம். அவற்றை எவரும் அங்கீகரிப்பது கிடையாது.

ஆனால் ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். காணாமல்போனோர் குறித்து நான் பல விசாரணைகளை நடத்தியிருக்கின்றேன். ஆனால் எவரும் முன்வரவில்லை. தமது ஆட்களை இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கான சாத்தியங்கள் போரின் போது இருந்திருக்கவில்லை. இந்தப் போரின் கடைசி இரண்டு வருடங்களில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இறந்திருக்கிறார்கள்.

இது ஒரு கடுமையான போர். இதில் இரண்டு தரப்பினரிலும் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். நானே எனது பல அதிகாரிகளை இழந்திருக்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் சடலங்களை மீட்க முடியாமல் போய்விடும். அதனால்தான் பலர் காணாமல் போனதாக பலரும் கூறுகின்றனர்.

இலங்கை நிலைமை புரியாததால் தான் இப்படி நடக்கிறது. தமது பிள்ளை மோதலில் இறந்து விட்டது என்பதை பெற்றோர் நம்ப மறுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காணாமல் போய்விட்டதாக நினைக்கின்றார்கள். எங்கள் தரப்பிலும் இந்த நிலைமை இருக்கின்றது.

நான் செய்தது நாட்டுக்கான எனது கடமையைத் தான். சமூகத்திற்கான எனது கடமையே.

அமெரிக்காவிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் நாட்டுக்கு வெளியே சென்று தான் சண்டை போட்டார்கள்.

நான் எனது நாட்டிலே தான் போராடினேன். 30 வருட கால மனித குழுக்களை நான் தடுத்து நிறுத்தினேன். இன்று மக்கள் இறப்பதில்லை. சிறார் போராளிகள் பாடசாலைக்கு செல்கிறார்கள். பல பொருளாதார இலக்குகள் புலிகளால் தாக்கப்பட்டன. இவையெல்லாம் இன்று நடப்பதில்லையே.

நாட்டில் ஜனநாயகத்தை திரும்பச் செய்திருக்கின்றோம். மக்களை விரைவாக மீளக் குடியமர்த்தியிருக்கின்றோம். முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கி விடுவித்திருக்கின்றோம். எந்தவொரு நாடும் இந்தளவுக்குச் செயற்பட்டதில்லை. என்றார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.(lw)

Web Design by Srilanka Muslims Web Team