'சவால்களுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்று நடத்தும் ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்' - அலி சப்ரி - Sri Lanka Muslim

‘சவால்களுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்று நடத்தும் ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்’ – அலி சப்ரி

Contributors

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய சவால்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளாரென தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, சவால்களை வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதிக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை 03 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு முறையான செயன்முறை மற்றும் திட்டமிடல் அவசியம்.

19ஆவது அரசியல் திருத்தத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்த போதும் அது இரு பக்கமும் வெட்டக் கூடிய வாள் என்பதால் அதன் மூலம் ஆட்சியைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலையே காணப்பட்டது.

இலகுவாக தேர்தல்களை வெல்ல முடியுமெனினும் நாடு தொடர்பில் முறையாக செயல்படுவதற்கு திட்டமிடலுடனான வேலைத்திட்டங்கள் அவசியம்.

எதிர்வரும் இரண்டரை வருடங்கள் புதிய ஜனாதிபதிக்கு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

06 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரித்துள்ளது. 199 அரச நிறுவனங்கள் பெரும் நட்டத்தையே எதிர்நோக்கியுள்ளன.

அந்த வகையில் டெலிகொம் நிறுவனம் மற்றும் எயார் லங்கா நிறுவனம் போன்றவை தொடர்பில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த நிறுவனங்கள் மூலம் அரசாங்கத்துக்கு கிடைக்கக் கூடிய இலாபம் எவ்வளவென பார்க்க வேண்டும்.

அனைவரும் இணைந்த முறையான வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிக நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய சவாலை பொறுப்பேற்றுள்ளார். அதற்கு கால அவகாசம் வழங்குவது அவசியம். புரட்சிகள்,போராட்டங்கள் இடம்பெறுகின்ற போதும் ஜனநாயகம், அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். எந்த நடவடிக்கைகளையும் அரசியலமைப்பை மீறி மேற்கொள்ள முடியாது.

நாட்டில் 90 வீத மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதையடுத்தே அவர்கள் வீதிகளில் இறங்கினர்.

இது இயல்பாக நடக்கக்கூடிய விடயமே. எனினும் அதனை வாய்ப்பாகிக் கொண்டு ஜனநாயகத்தை மதிக்காத சில தரப்பினர் மிக மோசமாக செயல்பட்டனர். மக்களின் உணர்வுகளை வைத்து அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செய்யப்பட்டனர். 70 வருட காலமாக நாட்டில் புரட்சி செய்தவர்கள், பல்வேறு மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள் சிலர் மட்டுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென கூறுவது விந்தையானது. அவ்வாறு கூறுவதை ஏற்க முடியாதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Web Design by Srilanka Muslims Web Team