சவுதியில் இருந்து திரும்பி வரும் கேரள மாநிலத்தவருக்கு வட்டியில்லா கடன் - Sri Lanka Muslim

சவுதியில் இருந்து திரும்பி வரும் கேரள மாநிலத்தவருக்கு வட்டியில்லா கடன்

Contributors

சவூதி அரேபிய அரசு நிடாகட் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க முயன்று வருகின்றது.
இதனால் அங்கு தங்கிப் பணிபுரியும் ஏராளமானவர்கள் தங்களுடைய தாய்நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் ஏராளமான இந்தியர்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். அதிலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கு உதவும் முயற்சியாக கேரளா அரசு சிறப்பு திட்டங்களை தீட்டியுள்ளதாக முதலமைச்சர் உம்மன் சாண்டி நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் சவுதி அரசு குறிப்பிட்ட பொது மன்னிப்பு காலம் முடிந்தது. இதுவரை 14,000 பேர் அங்கிருந்து கேரளாவிற்குத் திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் விதமாக சவூதி அரேபியா தவிர மற்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பணக்கார கேரளா வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.

ஏற்கனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இறுதிச் சுற்றும் நடைபெற்று அவர்களிடமிருந்து உறுதியான வேலை வாய்ப்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கேரளா அரசு இவ்வாறு திரும்பி வருபவர்களுக்காக ரூட்ஸ் நோர்கா என்ற மறுவாழ்வு ஒருங்கிணைப்பு மையத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த அமைப்பை அணுகி தங்களின் வணிகத் திட்ட முதலீடுகளுக்கு வட்டியில்லாக் கடனாக 20 லட்சம் வரை அவர்கள் பெறமுடியும்.

வாகனங்கள் வாங்கி தொழில் புரிய விரும்புவோருக்கும் மானியத்துடன் கூடிய நிதி உதவி கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழுவினராக ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினால் கூட அவர்கள் தங்கள் மூலதன செலவுகளில் 10 சதவிகதம் மானியத்துடன் வட்டித் தொகையும் 5 சதவிகிதத்திற்கு உட்பட்டு கடன் பெறமுடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team