சவுதியில் சம்பள போணசை தொழிலாளிகளுக்கு பகிர்ந்தளித்த சம்பவம் - Sri Lanka Muslim

சவுதியில் சம்பள போணசை தொழிலாளிகளுக்கு பகிர்ந்தளித்த சம்பவம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சுவனப் பிரியன்

 

சவுதி மன்னர் சல்மான் தான் பதவி ஏற்றதும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இரண்டு மாத ஊதியத்தை போனஸாக அறிவித்தார். அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. கடன் பட்டிருந்தவர்கள், பள்ளிக் கூட ஃபீஸ் கட்டும் பிரச்னையில் இருந்தவர்கள் என்று பலருக்கும் இந்த தொகை மிக உதவியாக இருந்தது.

 

ரியாத் நகரில் ரவ்தா என்ற இடத்தின் முனிசிபாலிடியில் வேலை செய்யும் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் இந்த இரண்டு மாத சம்பளத்தை அப்படியே 250 துப்புரவு தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளித்து விட்டனர். இந்த அரசு ஊழியர்கள் நல்ல சம்பளத்துடன் ஏஸி அறைகளில் சுகமாக வேலை செய்கின்றனர். ஆனால் இந்த பங்களாதேசத்து துப்புரவு தொழிலாளர்களோ பனி, வெயில், காற்று என்று பாராமல் இரவும் பகலும் கடுமையாக வேலை செய்து வருகின்றனர்.

 

சவுதி அரசு ஒவ்வொரு துப்புரவு தொழிலாளிக்கும் 2000 ரியால் வரை சம்பளத்தை ஒதுக்கினாலும் காண்ட்ராக்ட் எடுத்த கம்பெனிகள் இவர்களுக்கு அளிப்பது 600 அல்லது 700 ரியால்தான். இதனை ஒத்துக் கொண்டு கையெழுத்து போட்டு விட்டுத்தான் இந்த வேலையை செய்கின்றனர். எனவே அரசும் ஒன்றும் இது விஷயத்தில் எதுவும் செய்ய முடிவதில்லை. ஆனால் இந்த துப்புரவு தொழிலாளிகள் பகுதி நேர வேலைகள் பார்த்து 2000 அல்லது 2500 வரை சம்பாதித்து விடுகின்றனர். ஆனால் இதற்காக கடுமையாக உழைக்கின்றனர். நல்ல உழைப்பாளிகள்.

 

இவர்களின் குறைந்த சம்பளத்தை மனதில் கொண்டு சவுதி அரசு ஊழியர்கள் அனைவரும் 250 தொழிலாளிகளுக்கு பிரித்து கொடுத்தது சாதாரண காரியம் அல்ல. சாதாரண அரசு ஊழியர்களுக்கு 7000 ரியால் வரை சம்பளம். நமது நாட்டு பணத்துக்கு 115000 ரூபாய் வரும். இரண்டு மாத ஊதியமாக ஒவ்வொருவருக்கும் இரண்டரை லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். இது சாதாரண தொகையல்ல. பணத்தை கொடுத்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பணப் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதனையும் மீறி இந்த பணத்தை அனைவரும் ஒட்டு மொத்தமாக கொடுத்தது ஆச்சரியப்படத்தக்க விஷயம்.

 

மனிதாபிமான அடிப்படையில் உதவியது ஒரு சிலராக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக இப்படி கொடுப்பது மறுமை வாழ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும். இங்கு நாம் கொடுக்கும் இந்த பணம் பல மடங்கு இரட்டிப்பாகி அதனால் நமக்கோ நமது வாரிசுகளுக்கோ எந்த வகையிலாவது உதவட்டுமே என்ற நம்பிக்கைதான் இவர்களை இவ்வாறு கொடுக்க தூண்டியது.

 

இது மட்டுமல்ல வருடா வருடம் சொத்தை கணக்கிட்டு இஸ்லாம் சொன்ன முறைப்படி இரண்டரை சதவீதம் ஜகாத் பணத்தை முறையாக செலுத்தும் பல சவுதிகளை நான் பார்த்துள்ளேன். ஆன்மீகத்தால் இந்த உலகம் அடைந்து வரும் பல நன்மைகளில் இதுவும் ஒன்று.

 

இந்த படத்தில் அந்த துப்புரவு தொழிலாளியோடு கை குலுக்க முதலாவதாக கையை நீட்டும் அந்த சவுதியை பாருங்கள். நம் நாட்டில் தோட்டிகளுக்கு இந்த அந்தஸ்தை என்று கொடுக்கப் போகிறோம்?

 

‘நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்’

-குர்ஆன் 2:272

 

 

Web Design by Srilanka Muslims Web Team